கல

கலிவிருத்தம்

2559.

     துதிபெறு கணபதி இணையடி மலரும்
     பதிதரு சரவண பவன்மல ரடியுங்
     கதிதரு பரசிவன் இயலணி சுழலும்
     மதியுற மனனிடை மருவுது மிகவே.

உரை:

      யாவருடைய துதியையும் பெறுகின்ற கணபதியாகிய விநாயகனுடைய இரண்டாகிய திருவடித் தாமரைகளையும், இடமாகிய சரவணப் பொய்கையிற் பிறந்தவனாகிய முருகனுடைய மலர்போன்ற திருவடிகளையும், பிறவா நிலையாகிய சிவகதி நல்கும் பரசிவத்தின் இயற்கையழகமைந்த திருவடியையும் அறிவொளி பொருந்த மனத்தின்கண் மிகவும் நினைப்போமாக. எ.று.

          துதி - துதித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். யாவராலும் துதிக்கப்படும் பெருமானாதலின், “துதி பெறு கணபதி” என்று புகழ்கின்றார். பதிதரு சரவணம், சரவணப் பொய்கையாகிய இடம். பவன் - பிறந்தவன்; பவம் - பிறப்பு. பரசிவன் - மேலான சிவபெருமான்; “பிறவா வாழ்க்கைப் பெரியோ” (சிலப்) னாதலின், அவன் திருவடி நல்கும் சிவகதி பிறப்பறுக்கும் பெருமையையுடைய தென்க. இயலணி - இயற்கையழகு. கழல் -வீரர்கள் காலில் அணியும் தண்டை; ஈண்டுக் கழல் கிடந்தழகு செய்யும் திருவடிமேற்று. மூவர் திருவடியும் சிவஞான வொளி நல்குவனவாதலால் “மதியுற மனனிடை மிகவும் மருவுதும்”. மருவுதல் - ஈண்டு நினைத்தல் என்னும் பொருளதாகும்.

          இதனால் மனத்தில் சிவஞான வொளி பரவுதற்கு மிகவும் நினைந்து போற்றுதல் வேண்டுமென்பதாம்.

     (3)