2561.

     அற்புதக் கணபதி அமல போற்றியே
     தற்பர சண்முக சாமி போற்றியே
     சிற்பர சிவமகா தேவ போற்றியே
     பொற்பமர் கௌரிநிற் போற்றியே.

உரை:

      கடவுளாகிய கணபதி யென்னும் தூயவனே போற்றி, தற்பரமான ஆறுமுகனாம் சாமியே போற்றி, ஞானவுருவாய பரசிவமாம் மகாதேவனே போற்றி, அழகு பொருந்திய கௌரியே நின்னைப் போற்றுகின்றேன். எ.று.

          அற்புதன் - கடவுள். கணபதி - சிவகணங்கட்குப் பதியென்பது விளங்க நின்றது. அமலன் - மலமில்லாதவன்; மலரகிதன் என வடமொழியாற் கூறுப. தற்பரன் - தனக்குத் தானே பரமாயவன். Êசண்முகம் - ஆறுமுகங்களையுடையவன். சாமி, முருகனுக்குரிய பெயர்களில் ஒன்று. இதனாற் சிவனைச் “சாமி தாதை” எனச் சமய குரவர்கள் புகழ்கின்றார்கள். பரமசிவம் - ஞான மயமாதலால், “சிற்பர சிவ” மெனவும், சிவமூர்த்தியாகியபோது “மகா தேவ” னெனவும் பெரியோர் கூறுகின்றனர். பொற்பு - அழகு. கௌரி, பார்வதிக்குரிய பெயர்களில் ஒன்று; இதன் சொற்பொருள் இளமை யுடையவள், பொன்னிறமுடையவள் என வரும்; ஆனால் பார்வதி நீலமுடையவள் என அறிக.

          இதனால் விநாயகர், முருகன், மகாதேவர், கௌரி ஆகிய தெய்வங்கள் போற்றப்பட்டவாறாம்.

     (5)