எண

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம

2563.

     கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
          கஜமுக குணபதி சரணஞ் சரணம்
     தலைவநின் இணையடி சரணம் சரணம்
          சரவண பககுக சரணஞ் சரணம்
     சிவமலை யுடையவ சரணஞ் சரணம்
          சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
     உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
          உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்.

உரை:

      கலைகள் யாவும் நிறைந்த கணபதியே நின் திருவடி; யானை முகத்தையுடைய உயர் குணத் தலைவனே, நின் திருவடி; உலகுக்கெல்லாம் தலைவனே இரண்டாகிய நின் திருவடி; சரவணப் பொய்கையிற் பிறந்த குகப் பெருமானே, நின் திருவடி; வில்லாக மலையை யுடையவனே, நின் திருவடி; சிவனே நின் திருவடி; கெடுத லில்லாத ஒப்பற்ற பரையாகிய அருட் சத்தியே, நின் திருவடி; உமையாகிய சிவையே நின் திருவடி எமக்குக் காப்பாகும். எ.று.

          இயற்கையும் செயற்கையுமாகிய செயல்வகை யனைத்தும் கலையாதலின், செயற் சத்தி முற்றவும் நிறைந்த பெருமானாதலால், “கலைநிறை கணபதி” என்று கூறுகிறார். உயர் குணங்கள் யாவும் நிறைந்து அவற்றையுடைய தலைவனாதல் விளங்கக் “கயமுகக் குணபதி” என வுரைக்கின்றார். முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் தோன்றியது வரலாறாதலால் “சரவணபவ” என்றும், அன்பர்களின் மனமாகிய குகையில் தங்குதலால் “குகன்” என்றும் சான்றோரால் போற்றப்படுகின்றார். சிவன் மேருமலையை வில்லாக வளைத்தார் என்பது பற்றி, “சிலைமலை யுடையவ” என்றும், சிவன் என்ற திருப்பெயரைத் தனக்கே யுரிமையாக வுடையவனாதலால் சிவ சிவ என்றும் ஓதுகின்றார். சிவ என்பது சிவத்தையும் திருவருளையும் குறிக்கும் எழுத்துக்களாய்க் “காரண பஞ்சாக்கரம்” என்று மந்திரமாக ஓதப்படுவது கொண்டு “சிவ சிவ சிவசிவ” என உரைக்கின்றார். உலைதல் - கெடுதல். பரன் என்னும் ஆண்பாற் பெயர்க்குப் பெண்பாற் பெயர் பரை என்பது; இது இறைவனது அருட் சத்தியைக் குறிப்பது. அத் திருவருட் சத்தியை உமை எனவும் சிவை எனவும் வழங்குப. சிவனுக்குப் பெண்பாற் பெயர் சிவை என்பது முன்னையோராகிய இளங்கோவடிகள் திருநாவுக்கரசர் முதலியோர் இறைவணக்கத்தில் திருவடியே புகலும் காப்புமாதல் பற்றி “நின்னடி” எனவும், திருவடி எனவும் போற்றினாராக, பிற் காலத்தார், திருவடியைக் குறிக்கும் வடசொல்லாகிய சரணம் என்பதையும் மேற்கொண்டு சரணம் என்றனர். அதனைத் தழுவியே, “சரணம் சரணம்” என வடலூர் வள்ளலும் உரைக்கின்றார்.

           இதனால், கணபதி முருகன் சிவன் பார்வதி ஆகியோர் திருவடிகளை எடுத்தோதி புகலடைந்தவாறாம்.