2565. போதந் திகழ்பர நாதங் தனில்நின்ற
நீதராஞ் சண்முக நாதற்கு - மங்களம்
உரை: ஞானம் ஒளிர்கின்ற பரநாத தத்துவத்தில் நிலை பெறுகின்ற நீதிமானாகிய அறுமுகப் பெருமானுக்கு மங்கள முண்டாகுக. எ.று.
போதம் - ஞானம்; இதனை ஞானாகாசம் என்று கூறுவர். பரநாதம் - மாயா மண்டலத்துக்கு உச்சியிலுள்ள, நாத தத்துவத்துக்கு மேல் மாயா மண்டலம் கடந்து அப்பால் உள்ள பரசிவ தத்துவம் பரநாதம் எனப்படுகிறது. மாயா மண்டலத்தில் ஒன்றாய் உடனாய் நிற்கும் சிவம், அதனின் வேறாய்ப் பரநாதத்தில் நிலைபெறுவாதல் “பரநாதம் தனில் நின்ற நீதர்” என வுரைக்கின்றார். நீதர் - நீதிமான். சிவமே முருகப் பெருமானாதலால், “நீதராம் சண்முக நாதன்” என்கின்றார்.
|