1
1. குஞ்சிதபாதப் பதிகம்
அஃதாவது கூத்தப் பெருமான் தில்லையம்பலத்தில் ஒரு காலையெடுத்து
வளைத்தாடுதலால், வளைந்த அவரது திருவடி, குஞ்சித பாதம் எனப்படுகிறது. அத் திருவடி உலகுயிர்களை
வாழ்விக்கும் சிறப்பமைந்த தென்பது கொண்டு அதனை இப்பதிகத்தாற் பாடுகின்றார். “தில்லையுட்
சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை யாட் கொண்டதே” ( கோயில் ) எனத்
திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க.
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்
2571. திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
செவ்வண்ணம் நண்ணுசடையும்
தெருள் வண்ண நுதல்விழியும் அருள் வண்ண வதனமும்
திகழ்வண்ண வெண்ணகையும் ஓர்
மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
மகள் வண்ண மருவும் இடமும்
மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
மாணிக்க வண்ணவடிவம்
இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
இடையறா தெண்ணும் வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவன்
இயம்பல் உன் கருணைவண்ணம்
கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
கடல்வண்ணன் எண்ணும் அமுதே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
உரை: பிறவித் துயர் நீங்கவும், மனம் பெருமை யெய்தவும் கடல் நிறமுடைய திருமால் நிலை நின்று சிந்திக்கும் அமுதாயவனே, பொன்னம்பல நாதனே, கருணை பொழியும் கண்களை யுடையவனே, ஞான வுருவான தாமரை போன்ற குஞ்சித்தத் திருவடியை யுடையவனே, திருவுடைய கங்கை நதியும், சங்கின் ஒப்பற்ற நிறத்தையுடைய பிறைத் திங்களும் பெருகுகின்ற செம்மை நிறம் பொருந்திய சடையும், தெளிந்த இயல்பையுடைய நெற்றிக் கண்ணும் அருள் நிறைந்தொழுகும் முகமும், ஒளி விளங்கும் வெண்மையான பற்களும் மணம் கமழும் மணி நிறமுடைய குவளை மலர் போன்ற கழுத்தும், மலை மகளான உமையம்மை பொருந்திய இடப்பாகமும், பெருமை மிக்க இரண்டாகிய பொன்னிறத் திருவடித் தாமரையும், மாணிக்க மணி நிறம் கொண்ட திருமேனியும், இரண்டு பட்டலையும் என் மனம் ஒருமை மனதாகி இடையறாமல் எண்ணுமாறு எவ்வண்ணமோ அவ்வண்ணம் இவ்வாறு என்று அறிவித்தருளுவது திருவருட் செயலாகும். எ.று.
இச்சொன்மாலைக்கு மங்கல மொழி வேண்டுதலின், “திருவண்ண நதி” என்று தொடங்குகின்றார். கங்கையும் மங்கல மகளாய் இறைவன் திருமுடிச் சடையில் தங்கும் சிறப்புப்பற்றி, இங்ஙனம் கூறுகிறார் எனினுமமையும். பிறைத் திங்களின் வெண்மை விளக்குதற்கு 'வளை வண்ணமதி' என்று சொல்லுகிறார். மதி, ஈண்டுப் பிறைமதி. இறைவன் செஞ்சடை செந்நிறக் கதிர் பரப்பி ஒளிர்தலால், “வளர் செவ்வண்ணம் நண்ணுசடை” என்று கூறுகின்றார். ஒளி மிக்க நுதலில் பொருந்திய திருக்கண் ஞானத் தெளிவுடைய தென்றற்குத் “தெருள்வண்ண நுதல் விழி” என்றும், திருமுகம் எவ்வுயிர்க்கும் அருள் செய்தல் பற்றி, “அருள் வண்ண வதனம்” என்றும் இயம்புகின்றார். இறைவனது சிரித்த வாயிற்றோன்றும் பற்கள் வெள்ளிய ஒளி பரப்புதல் விளங்க, “திகழ்வண்ண வெண்ணகை” என்கின்றார். மரு -நறுமணம். மணிக் குவளை” - நீலமணியின் நிறமுடைய இதழ்களையுடைய குவளை; “மாயிதழ்க் குவளை” எனச் சான்றோர் கூறுவர். மணிக்குவளை யெனற் பாலது சந்தம் நோக்கி இயல்பாயிற்று. இறைவனது விடக்கறை படிந்த மிடறு குவளை மலர் போலும் நிறமுடையதெனப் புலப்படுப்பாராய், “குவளை மலர் வண்ணமிடறு” என விளம்புகின்றார். மிடறு - கழுத்து. மலைமகளாகிய உமை நங்கையைத் தன் மேனியில் இடப்பாகத்துக் கொண்டவனாதலால், “மலைமகள் வண்ண மருவும் இடம்” என வுரைக்கின்றார். உற்றாரைத் தாங்கும் பெருமையும் பொன்னிறமும் மன்னிய திருவடி யென்றற்கு, “மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலர்” எனப் புகழ்கின்றார். மாணிக்கமாலை போலும் தோற்ற முடையன் எனச் சான்றோர் பரவுதலால், “மாணிக்க வண்ண வடிவு” எனக் கூறுகின்றார். “மாணிக்கத்தின் மலை போல வருவார் விடை யேறி” (கடவூர்) என நம்பியாரூரர் கூறுவது காண்க. பலதலைப்பட்டு விரிந்தலையும் இயல்புடைமை பற்றி, “இரு வண்ணமாம் மனது” என்றும், ஒருமை மனமே உயர் வுடைத்தாய்க் கருதும் கருத்து முற்றப் பெறும் என அறிஞர் உரைப்பதால் “என் மனம் ஒருவண்ண மாகியே இடையறா தெண்ணும் வண்ணம்” என்றும் இயம்புகின்றார். நதியும், மதியும், சடையும், நுதல் விழியும், வதனமும், வெண்ணகையும், மிடறும், மலை மகள் மருவும் இடப்பாகமும், அடி மலரும், மாணிக்க வடிவும் இடையறவின்றி எண்ணுவது வேண்டத்தக்க செயலாம் என்றற்கு “இடையறாது எண்ணும் வண்ணம்” என விரும்புகின்றார். இடையுறவு தோன்றின் மன வொருமை கெடும் என்பது கருத்து. இடையறாத ஒருமை நிலை எய்த வேண்டி இறைவன் திருவருளை வேண்டுகின்றாராதலின், “இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இயம்பல் உன் கருணை வண்ணம்” என்று சொல்லுகின்றார். இடையறவின்றி யெண்ணும் முறை இம்முறையென அறிவுறுத்தருளுவது நினது அருட்கடன் என்பாராய்,. “இவ் வண்ணம் என்று இயம்பல் உன் கருணை வண்ணம்” என்கின்றார். “ஒன்றியிருந்து நினைமின்கள்” என்றும், “இரண்டுற மனம் வையே” லென்றும் கூறுதலுண்டே யன்றி, ஒன்றும் திறம் தெரியேன்; அதனை இவ்விடத்தே இப்பொழுதே அருளல் வேண்டும் என்பார், “இவண் இயம்பல் உன் கருணை வண்ணம்” எனக் கூறுகின்றார். இடையறாது எண்ணும் ஒருமை நிலைக்கு எடுத்துக் காட்டுத் தருவார் போலத் திருமால் எண்ணி இன்புறும் நலத்தை, “நின்று கடல்வண்ணன் எண்ணும் அமுதே” என இயம்புகின்றார். கடல் போலும் நீல மேனியனாதலால் திருமாலைக் “கடல் வண்ணன்” என்கின்றார். “வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினையே” (சிலப்) என இளங்கோவடிகள் இசைப்பது காண்க. இறைவன் திருவுரு நலங்களை ஒருமை மனத்தால் எண்ணுவதால் விளையும் பயன் கூறுவாராய், “கருவண்ணம் அற உளம் பெருவண்ணமுற” என்று கூறுகின்றார். கருவண்ணம், பிறவித் தொடர்பு உள்ளம் பெருவண்ணம் உறுதலாவது, மனம் திருவருட் பேரொளி நிலவும் பெருமை யுறுவதாம். இடையறாது எண்ணுமிடத்து இறைவன் பெறற்கரும் பேரமுதாய் ஞானப் பேரின்பம் நல்குவன் என்பது தோன்ற, “அமுதே” என்கின்றார். பொன்வேய்ந் துள்ளமையால் பொன்னம்பலத்தைக் “கனக அம்பலம்” எனவும், அதன்கண் ஒப்பாரு மிக்காருமின்றித் தான் ஒருவனே திருக்கூத்தாடுதலால் “அம்பல நாத” எனவும், அருள் பெருகி யொழுகும் அழகிய கண்களை யுடையனாதலால், “கருணையங்கண்” எனவும் எடுத்துரைக்கின்றார். கண்ணன், கண்ண என அண்மை விளியேற்று இடை குறைந்து நின்றது. ஆன்மாக்களை ஆண்டருள எடுத்த திருவடியைப் புகழ்ந்து பாடுமாறு விளங்க, “கமல குஞ்சித பாதனே” என மகுட மிட்டுரைக்கின்றார். போத கமலம், ஞான மணம் கமழும் தாமரை.
இதனால், சிவபிரானது திருவுரு நலத்தை இடையறாது எண்ணும் திறம் அருளுமாறு வேண்டியவாறாம். (1)
|