2572. எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
இடைவிடா துழலஒளிஓர்
எள் அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
இருண்டுயிர் மருண்டுமாழ்க
நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
ஞான அருள் நாட்டை அடையும்
நாள்எந்த நாள் அந்த நாள் இந்த நாள்என்று
நாயினேற் கருள் செய்கண்டாய்
விண்ணுறுசு டர்க்கெலாம் கடர்அளித் தொருபெரு
வெளிக்குள்வளர் கின்றசுடரே
வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
விஞ்ஞான மழைசெய்முகிலே
கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
கருணை நடம் இடுதெய்வமே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
உரை: வானத்திற் காணப்படும் ஒளிப் பொருள்கள் அனைத்திற்கும் ஒளி தந்து பராகாச மென்னும் பெருவெளியில் நின்று, பெருகுகின்ற பேரொளிப் பரம்பொருளே, வித்தின்றியே எல்லாம் விளைக்கின்ற சிறந்த ஞானமாகிய மழையைப் பொழிகின்ற மேகமே, கண் பொருந்திய நெற்றியையுடைய பெரிய கடவுளே, சிற்சபையில் அருட் கூத்தாடும் தெய்வமே, பொன்னம்பலத்தில் மேவும் தலைவனே, கருணை பொழியும் கண்களையுடைய ஞான மயமான கமலம் போன்ற குஞ்சிதபாதனே, எண்ணப்படுகின்ற விருப்பு வெறுப்பு முதலிய குற்றங்களாகிய வலி மிக்க விலங்கு வகை பலவும் இடைவிடாது திரிந்துலவ, எள்ளளவேனும் ஒளியின்றி அஞ்ஞானமாகிய இருள் மண்டுதலால் இருண்டு, உயிரறிவு மருண்டு, மயங்கி வருந்த, பொருந்துகின்ற மனம் செய்யும் மாயை யென்னும் காட்டைக் கடந்து நின்னுடைய திருவருட் பேரொளி நிலவும் திரு நாட்டை யான் சென்றடையும் நன்னாள் எந்த நாளோ, அந்த நாள் இந்நாள் என்று நாயினேனுக்கு விளங்க உரைத்தருளுவாயாக. எ.று.
வானத்தில் நமது கண்ணைக் கொண்டும் கருவிகளைக் கொண்டும் காண்கின்ற எண்ணிறந்த ஒளிப் பொருள்கட் கெல்லாம் ஒளி தந்து ஒளிரச் செய்யும் சூரியன் போல, சூரியர் பலர்க்கும் வேண்டும் மூல வொளியைத் தருவது பரஞ்சுடராகிய பரம்பொருள் என்பாராய், “விண்ணுறு சுடர்க் கெலாம் சுடரளித்து ஒரு பெரு வெளிக்குள் வளர்கின்ற சுடரே” எனவுரைக்கின்றார். “பாதி பெண்ணுருவாகிப் பரஞ்சுடர்ச் சோதியுட் சோதியாய் நின்ற சோதியே” (சித்தத்தொகை) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. காணப்படும் ஒளிப் பொருட்குரிய சூரியன், இருந்தொளிரும் ஆகாயம் போலச் சூரியர் அனைவரையும் உள்ளடக்கிய பேராகாயத்துக்கு மேலாய் பரம்பொருள் நின்று பரஞ்சுடரை நல்கும் ஆகாயம் பராகாயமாம்; அது, “பெருவெளி” யென ஈண்டுக் குறிக்கப்படுவதால்; ஆண்டு நின்று திகழும் சிவபரம் பொருளை “ஒரு பெரு வெளிக்குள் வளர்கின்ற சுடரே” எனப் புகல்கின்றார். காரணமின்றி காரியமில்லை என்பது உலகியலாக, பரம்பொருட்கு அந்நியதியில்லை என்பது புலப்பட “வித்தொன்றுமின்றியே வினைவெலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே” என விளம்புகிறார். வித்து - காரணப் பொருட்டு. விளைவு - காரியம். “விச்சின்றி நாறு செய்வான்” (ஆரூர்) என நாவுக்கரசரும், “விச்ச தின்றியேவிளைவு செய்குவாய் விண்ணு மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்” (சதகம்) என மணிவாசகரும் கூறுகின்றனர். விஞ்ஞானம், சிறந்த ஞானம் அஃதாவது சிவஞானம். ஞானத்தின் இன்ப வியல்பை; மழை என்றமையின், அதனைத் தருகின்ற பரசிவத்தை “முகிலே” என மொழிகின்றார். கண்ணுதற் கடவுள் என்பது சிவனுக்குரிய பெயர்களில் ஒன்று. தேவர் முனிவர்களையும் கடவுள் என்பவாகலின், அவர்களின் வேறுபடுத்தற்குப் “பெருங் கடவுளே” என்றும், உயிர்கட்கு அருள் புரிவது குறித்துத் திருக்கூத்து மன்றில் ஆடப்படுவ தென்றற்கு, “மன்றினிற் கருணை நடமிடு தெய்வமே” என்றும் கூறுகின்றார். விருப்பு வெறுப்பு முதலிய எண்ணங்கள் துன்ப வேதுவாய்க் காத்து விலக்குதற் கரிய வன்மையுடையவாய் நிலவுதலால் எண்ணுறு விருப்பாதி வல்விலங்கினம்” எனவும், எப்போதும் நெஞ்சின்கண் தோன்றி வருத்துமாறு புலப்பட, “இடைவிடா துழல” எனவும் கூறுகின்றார். மலம் சூழ்ந்து நல்ல அறிவொளி புகாதவாறு இருள் செய்யும் இயல்பு குறித்து, “ஒளி ஓர் எள்ளளவுமின்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு” என்றும், அதனால் உயிர்கள் பொய்யும் வழுவுமாகிய குற்றம் புரிந்து மயங்குமாறு விளங்க, உயிர் மருண்டு மாழ்க என்றும், மலமாயை கன்மங்களின் செயலியக்கம் மனத்தின் வாயிலாக நிகழ்வதுபற்றி, மன மயக்கத்தை, “நண்ணும் மனமாயையாம் காடு” என்றும், இருள் மண்டி வல்விலங்குகள் உலவும் காடுவழிச் செல்வார்க்குத் தீது செய்வதுபோல மனமாயையாம் அஞ்ஞானவிருள் திணிந்து விருப்பு வெறுப்பாகிய உணர்வுக்ள நிலவும் வாழ்வைக் கடந்து சிவஞான இன்பவொளி நிலவும் நின் திருவருட் பெறுவாழ்வு பெறும் காலம் எனக்கு எப்பொழுது எய்துமென எனக்கு உணர்த்தியருள்க என வேண்டுவார், “நின் ஞானவருள் நாட்டையடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய்” என்றும் விண்ணப்பிக்கின்றார். கண்டாய் - முன்னிலையசை. திருவருள் செய்யும் நலத்தை என்றும் மறவேன் என்பார், “நாயினேன்” என நவில்கின்றார். நன்றி மறவா நல்லியல்பு நாய்க்குண்டு என அறிக
இதனால், மனமாயை கொண்டு நிகழும் மண்ணக வாழ்வைக் கடந்து, திருவருள் இன்ப நாடாகிய நின் திருவடி நீழல் பெறும் காலம் எப்போதென எனக்கு உணர்த்துக என முறையிட்டவாறாம். (2)
|