2573.

     பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
          புகலுமூ வுலகுநீத்துப்
     புரையுற்ற மூடம்எனும் இருள் நிலம்அ கன்றுமேல்
          போய்அருள்ஒ ளித்துணையினால்
     வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதாபர
          வெளிகண்டு கொண்டுகண்ட
     விளைவின்றி நான் இன்றி வெளிஇன்றி வெளியாய்
          விளங்குநாள் என்றருளுவாய்
     வாதநெறி நடவாத போதநெறி யாளர் நின்று
          மதிநெறிஉ லாவும்மதியே
     மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
          மருந்தெபெ ருந்தெய்வமே
     காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
          கடிமதிற் றில்லைநகர் வாழ்
     கனகஅம் பலநாத கருணையங் கணபோத
          கமலகுஞ் சிதபாதனே.

உரை:

தருக்கவாத நெறிகளை விரும்பாமல் ஞான நெறியினருடைய அறிவு நெறியில் விளங்கும் ஞான மதியமே, நீலமணிக் கழுத்தையுடைய அருளரசே, எமது வாழ் முதலாயவனே, பெறற்கரும் மருந்து போல்பவனே, பெரிய தெய்வமே, காத தூரம் நறுமணம் கமழும் இனிய கனிகளையுடைய சோலைகளும், காவலமைந்த மதிலும் சூழ்ந்ததில்லை நகர்க்கண் மேவும் பொன்னம்பல நாதனே, கருணையங் கண்ணனே, போத கமல குஞ்சித பாதனே, பூதநெறி முதலாக நாத நெறி வரையுமாகச் சொல்லப்படுகின்ற மூவகையுலகங்களையும் கடந்து, குற்றம் பொருந்திய மூடம் எனப்படும் இருளுலகத்தைத் துறந்து மேலே சென்று, ஆங்கு நிலவும் திருவருளொளியின் துணை கொண்டு, ஆகம நெறியுரைக்கும் சகல கேவல நிலைகளில்லாத பரவெளியைக் கண்டு ஆங்கு விளையும் பரபோகத்தையும் அதனை நுகரும் தன்னையும் விளைநிலமாகிய பரவெளியையும் மறந்து பரவெளியேயாய் விளங்கும் நன்னாள் எனக்கு எந்நாள் எய்துமெனத் தெரிவித்தருள வேண்டுகிறேன். எ.று.

     தருக்கவாத முறைகள் சிவஞானப் பேற்றுக் குதவாவாகலின், “வாத நெறி நடவாத” என்றும், ஞான நெறியன்றிப் பற்றலாவது வேறன்று என வுணர்ந்து அதனையே மேற்கொண் டொழுகும் ஞானவான்களைப் “போத நெறியாளர்” என்றும், அவர்களது குறைவின்றி நிறைந்த ஞானநெறிக் காட்சியில் குளிர்ந்த ஒளி செய்யும் சிவஞான மதியமாய் விளங்குவது தோன்ற, “நிறைமதி நெறி யுலாவும் மதியே” என்றும் இனிது விளக்கிக் கூறுகின்றார். யோக நிலையில் நின்றுதுவாத சாந்தவெளியில் திகழும் அமுதசத்திரனன்று என விலக்குதற்குப் “போத நெறியையும் நிறைமதி நெறியையும்” விதந்துரைக்கின்றார். வாழ்வார்க்கு வேண்டும் உடல் கருவி கரண நுகர்வுகளை நல்கும் முதல் என்றற்கு, “எம் வாழ்வின் முதலே” என இசைக்கின்றார். அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என் வாழ் முதலே” (நீத்தல்) என மணிவாசகப் பெருமான் குறிப்பது காண்க. தேவர்கள் போலக் கடல் கடைந்தும் பெறலாகாமையின், “அருமருந்தே” என்கின்றார். தேவதேவரெல்லாம் தொழுதேத்தும் தெய்வமாகலின், சிவனை, “பெருந் தெய்வம்” என்று பேசுகின்றார். தொழப்படுந் தேவர் தொழப்படுவான்” (தனி) என நாவுக்கரசர் கூறுவ தறிக. பொழில்கள் பூக்களாலும் கனிகளாலும் மணம் கமழ்வனவாகலின், “காத நெறி மணம் வீசு கனிதரு பொழில்” எனப் புனைந்துரைக்கின்றார். சிற்றம்பலம், சிதம்பரமாய்த் திரிவதற்கு முன், தில்லைநகர் என்றே சான்றோர் வழங்கினமை பற்றி, “கடிமதில் தில்லைநகர்” என்று கூறுகின்றார். பிரகிருதி தத்துவ வுலகு வித்தியா தத்துவ வுலகு, சுத்தமெனப்படும் நாத தத்துவ வுலகென மூவகைத்தாதல் விளங்க, “பூத நெறியாதி வருநாத நெறி வரையுமாப் புகலு மூவுலகு” என உரைக்கின்றார். பிரகிருதி தத்துவம் நில முதலிய பூத பௌதிகங்களோடு கூடிய நெறியாவது பற்றிப் “பூத நெறி” எனவும், சிவஞான, சிவசத்திகளோடும் இயங்கும் நெறியாதல் பற்றி, அதனை நாதநெறியென்றும், சுத்தா சுத்தமாகிய வித்தியா தத்துவம் இடைப்படுவது பற்றி மிசிர நெறியென்றும் சான்றோர் கூறுவரென அறிக. இம் மூன்றும் மாயா மண்டலத்துக்குள்ளிருப்பனவாதலால், “மூவுலகும் நீத்து” என்று இயம்புகின்றார். காலாக்கினி முதல் அனாசிருதை யீறாகவுள்ள புவனங்கள், இருநூற்று இருபத்து நான்கும் நிவர்த்தி முதலிய கலையைந் திடத்தவாய்ச் சுத்தம், சுத்தா சுத்தம், அசுத்தமென்ற மூவகை மாயையினும் அடங்குதலின் “மூவுலகு” என மொழிகின்றார். மூடம் ஒன்றிற் பற்று வைத்து, அதன்கண்ணே முந்திப் பிறவற்றை, யறியா தொழிதல் இதனை லோக மூடம், பாசண்டி மூடம், வேதா மூடம் என மூன்றாக வுரைப்பர் நீலகேசியுரைகாரர். இவற்றாற் குற்றமே யுண்டாதலால், “புரையுற்ற மூடம் எனும் இருணிலம்” எனப் புகன்றுரைக்கின்றார். மாயா வுலக மயக்கமும் மூடமாகிய இருள் நிலமும் கடக்க முயல்வார்க்குத் திருவருள் ஞானம் ஒளி செய்து தூணை புரியும் என்பதால் “அருளொளித் துணையினால்” எனக் கூறுகின்றார். வேத நெறியெனப் பொதுவாக வுரைப்பினும், வேதாந்தத் தெளிவாம் சிறப்புடைய ஆகம நெறியெனக் கொள்ளப்படும். சிவாகமம் ஆன்மாவின் நிலையை, சகலம் கேவலம் சுத்தம் என்று மூன்றாகவுரைப்பது; அதனால், “வேத நெறி புகல் சகல கேவலமிலாத பரவெளி கண்டு” எனவும், அதனைக் காணுமிடத்து எய்தும் இன்ப நுகர்வையும் நுகரும் தன்னையும் நுகரும் இடத்தையும் மறந்து அதுவதுவாய் இயைந்து, ஒன்றாய்விடுமாறு உணர்த்த, “கொண்டு கண்ட விளைவின்றி நானின்றி வெளியின்றி வெளியாய் விளங்கு நாள்” எனவும் இயம்புகின்றார். வெளியென்பது, சுத்தநிலை. சுத்தநிலை எய்திய ஆன்மா சிவபோக நுகர்வில் சிவமாய்விடுது பற்றி, “வெளியின்றி வெளியாய் விளங்கு நாள்” என்கின்றார். வெளியின்றி வெளியாதலாவது, வெளி வேறு, தான் வேறு எனற்கின்றி ஒன்றாதல். இச் சிவபோகத்தை யான் எய்துங்காலம் எப்போது, என விண்ணப்பிக்கின்றாராகலின், “வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய்” என வுரைக்கின்றார்.

     இதனாற் சிவதரிசனம் பெற்றுச் சிவயோக முற்றுச் சிவபோகச் சிவமாகும் காலம் எனக்கு எய்துங் காலம் எப்போது என வேண்டிக் கொண்டவாறாம்.

     (3)