2574. கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக்
குடிகொண்ட சேரிநடுவில்
குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு
குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள்
நீர்கொண்டு வாடல்எனவே
நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான்
நெறிகொண்ட குறிதவறியே
போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப்
புரை கொண்ட மறவர் குடியாம்
பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில்
போந்து நின் றவர் அலைக்கக்
கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில்
கலங்கினேன் அருள்புரிகுவாய்
கனகஅம் பலநாத கருணையங் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
உரை: கூரிய வாட்படையேந்திக் கொலை புரியும் தொழில் மேற்கொண்ட வேட்டுவர் குடியமைந்து வாழும் சேரியின் நடுவில், திரண்ட செல்வமுடைய ஒரு செல்வன், அருமையாகப் பெற்ற குலமகன் நேர்படச் சென்றானாக, வேட்டுவர்கள் அவனைக் கைப்பற்றிக்கொள்ளவும் கண்களில் நீர் சொரிந்து அச்சிறுவன் வருந்தி வாடுவதுபோல, நித்தப் பொருளாகிய நின்னால் அளிக்கப்பட்ட யான் செந்நெறி காட்டும் குறி தவறிய பொருதலைச் செய்யும் கண் முதலிய பொறிகட்கு இடமாகிய புலைத்தன்மை பொருந்திய தத்துவங்களாகிய குற்றக் குடில்களில் உறையும் மறவர் குடியினர் பொய்த் தன்மையை யுள்ளீடாகக் கொண்ட மெய்யென்னும் சேரியிற் புகுந்து அலைக்க, கார் காலத்து இடி மின்னலிற்பட்ட பறவைக் குஞ்சுபோல் மனம் கலக்குகின்றேனாதலால், எனக்கு உன் திருவருளை நல்குவாயாக. எ.று.
நாளும் உயிர்க்கொலை புரியும் வேட்டுவர்க்கு வாளும் வேலுமாகிய கருவிகள் செம்மையா யிருத்தல் வேண்டுமாதலின், “கூர்க்கொண்ட வாள் கொண்டு கொலை கண்ட வேட்டுவர்” எனவும், அவர்கள் வாழும் பகுதி ஊரையும் காட்டையும் சேர இருப்பது தோன்ற, “குடிகொண்ட சேரி” எனவும் இயம்புகிறார். திரண்ட செல்வமுடையவனுக்கு நெடுநாள் மகற்பேறின்மையான் வருந்தினமை விளங்க, “குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடும் குலம் கொண்ட சிறுவன்” என வுரைக்கின்றார். தமது சேரிக்குள் தனித்தெய்தக் கண்ட வேட்டுவர் வளைத்துச் சிறை செய்து கொண்டமையின் சிறுவன் மருண்டு, கண் கலங்கி வருந்தினமை தோன்ற, “நேர் கொண்டு சென்று அவர்கள் கைக்கொண்டுறக் கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே” என்று கூறுகின்றார். இந்த உவமையைக் கொண்டு உடம்பின்கண் உறையும் ஆன்மாவின் நிலையை யுணர்த்துகின்றாராதலின், பொறி புலன் முதலிய தத்துவத் தொகுதியை, “போர் கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப் புரைகொண்ட மறவர்” எனவும், உடம்பை “மறவர் குடியாம் பொய்கொண்ட மெய்யெனும் மைகொண்ட சேரி” எனவும் காட்டுகின்றார். போர்த் துன்பத்தைச் செய்தலாற் பொறி முதலியவற்றைப் “போர் கொண்ட பொறி முதல் புலைக்காண்ட பொறி” எனவும் தீமை செய்யும் இயல்புபற்றி, “புலை கொண்ட தத்துவம்” என்றும் கூறுகிறார். உரை - குற்றம். உடம்பின் நிலையாமை தோன்ற, “பொய்கொண்ட மெய்யனும் மை கொண்ட சேரி” எனக் குறிக்கின்றார். மை - குற்றம் உடம்பினுட் புகுந்த ஆன்மாவைப் பொறி புலன்களாகிய தத்துவத் தொகுதிகள் தனித்தும் கூடியும் வருத்துமாறு விளங்க, “அவர் போந்து நின்று அலைக்க” என்கின்றார். அலைத்தல் - வருத்துதல். கார் மழையால் நனைந்து குளிருற்று வருந்தும் பறவைக்குஞ்சு, முகிலின் இடிக்குரல் கேட்டு நடுங்குவதுபோல உயிருணர்வு இடர்ப்படும் திறம் இனிது புலப்பட “கார் கொண்ட இடியொலிக்கண் கொண்ட பார்ப்பெனக் கலங்கினேன்” எனவும், அந்நிலைமையின் நீங்குதற்குத் திருவருள் ஞானம் அருளுக என வேண்டுவாராய், “அருள் புரிகுவாய்” எனவும் உரைக்கின்றார். உணர்வுருவாய உயிராதலின், “கண்கொண்ட பார்ப்பு” எனக் குறிக்கின்றார். பார்ப்பின் என்புழி இன்னுருபு உவமப் பொருட்டு. புள்ளினத்து இளங்குஞ்சு பார்பு எனப்படும். உயிரைப் புள்ளிற்கு ஒப்புக் கூறுவது மரபு. “குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே, உடம்போடுயிரிடை நட்பு, குறள்” எனச் சான்றோர் கூறுவது காண்க.
இதனால், உடம்பிடை யுயிர்க்குளதாகிய தொடர்பும் அதனால் உயிர் எய்தும் துன்ப நிலையும் சுட்டி யுரைத்தவாறாம். (4)
|