2575.

     படமெடுத் தாடுமெரு பாம்பாக என்மனம்
          பாம்பாட்டி யாகமாயைப்
     பார்த்துக் களித்துதவு பரிசுடைய விடயம்
          படர்ந்தபிர பஞ்சமாகத்
     திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு
          சிறுவன்யா னாகநின்றேன்
     தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு
          திறத்தன் நீ ஆகல்வேண்டும்
     விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல
          விஞ்ஞான மாம் அகண்ட
     வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத
          விராட்டுருவ வேதார்த்தனே
     கடமாடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க்
          கடவுளே சடைகொள் அரசே
     கனகஅம் பலநாத கருணையங் கணபோத
          கமலகுஞ் சிதபாதனே.

உரை:

      விடம் பொருந்திய கறையால் அழகுற்ற நீலமணி போன்ற கழுத்தையுடைய பெருமானே, தூய மெய்ஞ்ஞானமாகிய அகண்டமுத்தி வீடளித்து ஆன்மாக்கட் கருள் புரியும் கருணையாகிய மலையை யுடையவனே, அற்புதமான விராட்டு சொரூபத்தையுடைய வேதப் பொருளாயவனே, மதம் பொழியும் யானையின் தோலைப் போர்த்து, அழகு கொண்ட திருமேனியை யுடைய கடவுளே, திருமுடியிற் சடை கொண்ட அருளரசே, பொன்னம்பல நாதனே, கருணை பொழியும் கண்களை யுடையவனே, ஞானமயமான குஞ்சித பாதனே, எளியேனுடைய மனம் படம் விரித்தாடுகின்ற பாம்பு போல்வதாக, உலக மாயை அப்பாம்பை ஆட்டுவிக்கும் பாப்பாட்டியாக, விரிந்த பிரபஞ்சம், அதன் ஆட்டத்தைப் பார்த்துப் பரிசளிப்போர் தரும் பரிசாக, வன்மையான அப்பாம்பினுடைய ஆட்டத்தைக் கண்டு அஞ்சுகின்ற சிறுவன்போல யான் உள்ளேன்; முற்றவம் நீக்கி அந்த அச்சத்தைப் போக்கும் கூறுபாடுடையனாக நீ விளங்குதல் வேண்டும்! இந்த நலத்தை அருளுக. எ.று.

          விடத்தை யுண்டதனால் கறைபடிந்த தாயினும் அழகுறுதல்பற்றி, “விட மடுத்தணி கொண்ட கண்டனே” எனவும், அது தானும் நீலமணி போலும் நிறமும் ஒளியும் பெறுவதால், “மணிகண்டனே” எனவும் கூறுகின்றார். விமலம் - மலமின்மை; விஞ்ஞானம், சிறந்த மெய்ம்மை ஞானம். ஞானத்தால் வீடு பேறு எய்துமென்பதுபற்றி, “விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடளித்து” என்றும், வீடடைந்தார் நுகர்வது பேரின்பம் என்றற்கு, “வீடளித்து அருள் கருணை வெற்பனே” என்றும் உரைக்கின்றார். கருணை யுருவால் மலைபோல்வதுபற்றி “கருணை வெற்பன்” எனச் சிறப்பிக்கின்றார். விராட்டுருவம், அண்டங்களையும் அவற்றுள் அடங்கிய உலகுயிர்களையும் தன்கண் அடங்கக் கொண்ட பேருருவம். முத்திவீடு அளப்பரி தென்பது கொண்டு “அகண்ட வீடு” எனவுரைக்கின்றார். வேதம் கூறும் மெய்ப்பொருளாதலின், இறைவனை “வேதார்த்தன்” என விளம்புகின்றார். தோற் போர்வையை மேனியிற் கொண்ட கடவுள், சிவன். சடையில் கங்கை நீரைத் தாங்கி உலகை அருளால் அளிப்பதனால், “சடைகொள் அரசே” என்று பாராட்டுகின்றார். விரிதலும் குவிதலும் உடையதாதலால், மனத்தைப் “படமெடுத்தாடும் ஒரு பாம்பு” எனவும், உலகியல் வாழ்வு தரும் ஆசை மயக்கம் பல தலையாக மனத்தை யீர்த்து, அலைப்பதுபற்றி, “மாயை பாம்பாட்டியாக” எனவும் இயம்புகின்றார். பிரபஞ்சம் என்பதன் சொற்பொருள் விரிந்தது என்பதாகலின், அதனைப் “படர்ந்த பிரபஞ்சம்” என்றும், மனமாகிய பாம்பின் ஆட்டத்தைப் பார்த்து மகிழ்வது பொறிபுலன்களாகவும், அவற்றால் எய்துவது பிரபஞ்ச போகமாகவும் இருப்பது நினைந்து, “பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக” என்றும் உரைக்கின்றார். திடம், வன்மை. அறிவாற் சிறுமையுடையவன், சிறுவன். தீரத் துறத்தலாவது, மீளவும் தோன்றி வருத்தாதபடி கெடுத்தல். “தலைப்பட்டார் தீரத்துறந்தார்” (குறள்) எனச் சான்றோர் வழங்குவது காண்க. பாம்பைக் கண்டாலே அஞ்சுவது மக்களியல்பு; படம் விரிந்த பாம்பு கண்டாரை அஞ்சி நடுங்கச் செய்யுமாதலின், “பாம்பின் ஆட்டமது கண்டு அஞ்சும் சிறுவன் யானாக நின்றேன்” எனக் கூறுகிறார். மனத்தின் ஆட்டம் கண்டு அஞ்சுகின்ற சிறுமையுடையவனாதலால், அச்சமின்றி அதனை அடக்கி ஒரு நெறிக்கண் செலுத்திப் பயன்கொள்ளும் பெரியோனாதல் வேண்டுமென்றும், அதற்கு அருட்டுணை புரிதல் வேண்டுமென்பார், “தீரத் துறந்தந்த அச்சம் தவிர்த்திடு திறத்தல் நீயாகல் வேண்டும்” என வேண்டுகின்றார்.,

          இதனால், மனத்தை நெறிப்படுத்திப் பயன் கொள்ளுபவனாக, எனக்கு அருட் குரவனாகுக என முறையிட்டவாறாம்.

     (5)