2577.

     பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது
          பரமவே தார்த்தம்எனவே
     பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என்
          பாவிமனம் விடயநடையே
     எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும்
          இறங்குவதும் ஏறுவதும்வீண்
     எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள்
          யாவினும் சென்றுசென்றே
     சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது
          சுழல்கின்ற தென்செய்குவேன்
     தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச்
          சுழல்மனம்அ டக்கவருமோ
     கற்றவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே
          கண்ணுதற் கடவுள்மணியே
     கனகஅம் பலநாத கருணையங் கணபோத
          கமலகுஞ் சிதபாதனே.

உரை:

      கற்றறிந்த தூயவர் மனத்தில் எழுந்தருள் தலைவனே, கண் பொருந்திய நெற்றியையுடைய கடவுளாகிய மாணிக்க மணியே, கனக அம்பல நாதனே, கருணையங்கணனே, போத கமல குஞ்சித பாதனே, பற்றுக்கொள்வது பந்தமென்றும், அப்பற்றை அறுப்பது வீடு என்றும், இதுவே மேலான வேதப்பொருள் என்றும் உணர்பண்புடைய மேலோர் அன்புடன் அறிவுறுத்துவது கேள்வியுற்றும் பாவியாகிய என் மனம், ஐம்புல வழியே மேற்கொண்டு அவற்றின்கண் வீழ்ந்து தள்ளுவது செய்யாமல் ஆசைக்கடற்குள் மூழ்கி எழுவதும், மீள வீழ்வதும், மேலும் இறங்குவதும், ஏறுவதும், வீணான எண்ணங்களை எண்ணுவதும் ஆசை வழியை மேன்மேலும் பொருந்துவதும், உலகியற் போகங்கள் அனைத்தினும் சென்று சென்று சுழன்றும் அறிவு சிறிதுமின்றி அலமருவதும் செய்கின்றது; அதனை நெறிப்படுத்த மாட்டேனாய்ச் செய்வதறியாது வருந்துகிறேன்; தூய்மையே வடிவாகிய நினது திருவருளின் துணையின்றி ஏழையாகிய எனக்கு ஆசை வழிச்சென்று சுழல்கின்ற அந்த மனத்தையடக்க இயலுமோ? இயலாது, காண். எ.று.

     கசடறக் கற்பது கல்வியாகலின், கற்றவர்களைக் “கற்று வழுவற்றவர்கள்” என்றும், அவர் மனம் தூய தெய்வ நிலையமாதலால் அதன்கண் இறைவன் கோயில் கொண்டருளுகிறான் என்பது பற்றி, “கருத்தமர் கருத்தனே” என்றும் கூறுகின்றார். கண்ணுதற் கடவுள் - சிவபெருமான். மாணிக்கமணி போலும் திருமேனி யுடையனாதலால் ”மணியே” என்று பாரட்டுகின்றார். “பற்றிவிடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாதவர்க்கு” (குறள்) எனச் சான்றோர் உரைத்தலால் “பற்றுவது பந்தம்” எனவும், பற்றற்ற வழிப் பிறவித் தொடர்பு அற்றொழியும் என்று அறிவுறுத்துபவாகலின் “அப்பற்றறுதல் வீடு” எனவும், இவ்வுண்மையை யாப்புறுத்தற்கு வேதத்தின் மேல் வைத்து, இஃது பரம வேதார்த்தம் எனவே பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்” எனவும் உரைக்கின்றார். “அற்றது பற்றெனில் உற்றது வீடு” (திருவாய். 2 : 5) என்று நம்மாழ்வார் கூறுவதுகாண்க. பந்தம் - கட்டு; வீடு -விடுதல். “பந்தமும் வீடுமாய பத பதார்த்தங்களல்லான்” (சிவசித்தி) என அருணந்தி சிவனார் ஓதுவதறிக. பண்பெனப் பொதுப்பட மொழிதலின், உயர் பண்புடையோர் எனக் கொள்கின்றாம். எவ்வுயிர்பாலும் நண்பும் நயனும் உடையராதல் உயர் பண்புடையார் செயலாதல் பற்றி, “பண்புளோர் நண்பினொடு பகருவது” எனக் கூறுகின்றார். பந்தத்தால் துன்புறுவோரைக் காணும்போதெல்லாம் பரிவும் அன்பும் கொள்வராதலின் “நண்பினொடு பகருவது” என்கின்றார் என்றுமாம். விடய நடை - புலன்களின்மேற் செல்லும் ஆசை வழியியலும் உலகநடை. துன்ப வேது அறிந்து விலக்காமல் உலக நடையாகிய துன்பக் கடலில் வீழ்ந்தெழுவது விளங்க, “எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவது” என்று இயம்புகிறார். உலகியல் துன்பத்தால் சுடப்பட்டுத் தெளிவுற்றுச் சிறிது உவர்ப்பதும், பின்னர் மயங்கி மீண்டு அதன்கண் வீழ்ந்து துயர்வதும் ஆகிய செயல்களைச் செய்வது குறித்து “இறங்குவதும் ஏறுவதும்” எனக் கூறுகின்றார். உலகியற் செயல்களிலே தோய்கிற போது மனம் வீணான எண்ணங்களை நினைப்பதும், வீண் பொருள்களின் மேல் ஆசை வைப்பதும் நிகழ்தலின், “வீண் எண்ணுவதும் நண்ணுவதும்” என்று உரைக்கின்றார். புவன போகங்கள் -உலகியல் நுகர்ச்சிகள். ஆசை மிகுதியால் நுகர்ச்சிவகை அனைத்திலும் சென்று அலமருவது பற்றி, “இப்புவன போகங்கள் யாவினும் சென்று சுற்றுவதுமாகி சுழல்கின்ற” தென்றும், நுகர்வு வாயிலாக அறிவெய்தப் பெற்றும் தெளிவுறாமை தோன்ற, “சற்றும் அறிவில்லாது சுழல்கின்றது” என்றும் அதனை நெறிப்படுத்தும் திண்மை யின்மை கூறுவார், “என் செய்குவேன்” என்றும் இசைக்கின்றார். இறைவன் திருவருட்டுணையுண்டாயின் எல்லாம் செயல்கூடும் என்று சான்றோரும் வலியுறுத்துதலால் “தூய நின் திருவருளினன்றி இவ்வேழை அச்சுழல் மனம் அடக்க வருமோ” என உரைக்கின்றார்.

          இதனால், மனத்தின் இயல்பு கூறி, அதனை யடக்குதற்குத் துணை புரியத் திருவருளை நல்க வேண்டியவாறாம்.

     (7)