2578.

     எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
          எழுகடலி னும்பெரியவே
     என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
          தெந்தைநினை ஏத்தஎன்றால்
     வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
          மயங்குகின் றேன்அடியனேன்
     மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
          வந்தறிவு தந்தருளுவாய்
     ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
          உருவின்உரு வேஉருவினாம்
     உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
          உறவினுற வேஎம்இறையே
     களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
          கண்டஎண் தோள்கடவுளே
     கனகஅம் பலநாத கருணையங் கணபோத
          கமலகுஞ் சிதபாதனே.

உரை:

      ஒளிகட்கெல்லாம் காரண வொளியும் நாத தத்துவவெளிக்கு வெளியுமாகியவனே, மாயா காரிய விடயங்களின் உருவுக்குருவாகியவனே, விடயமாகிய உருவுடைய உயிர்க்குயிராயவனே, உயிரிடத்து உயிர்ந்ததாகிய உணர்வுக் குணர்வாகியவனே, உணர்வோடியையும் உறவாய், எமக்கு இறையாகியவனே, மகிழ்ச்சியின் நிறைவே, அளித்தலைச் செய்யும் கருணை நிதியே, நீலமணி போன்ற கழுத்தையுடையவனே, எட்டுத் தோள்களையுடைய கடவுளே, கனக அம்பல நாதனே, கருணை பொழியும் அங்கணனே, போத கமல குஞ்சித பாதனே, எளியவனாகிய யான் அறிவின் சிறுமையால் செய்த குற்றங்கள் சிறியவல்ல; கடல்களேழினும் பெரியனவாகும்; இவற்றிற்கு நான் என்ன செய்குவேன்; எந்தையே, இனியாகினும் நான் இப் பிழைகளைச் செய்யாமைப் பொருட்டு நின்னைப் பரவிக் காத்துக் கொள்ளலாமென்றால், காற்றிடைப்பட்டு வானிற் பறந்து சுழல்கின்ற பஞ்சுபோல நெஞ்சு வருந்துதலால் மயங்குகின்றேன்; நினக்கு அடியனாகிய எனது மனம் உன் வசமாகவும், யான் நின் திருவசமாகவும் என் முன் வந்து அருள் புரிய வேண்டுகின்றேன். எ.று.

     உலகிலுள்ள ஒளிப் பொருளனைத்துக்கும் மூல வெளியாய் விளங்கும் பரஞ்சோதியாதலால், “ஒளியின் ஒளியே” என வுரைக்கின்றார். நாதவெளி, சுத்த மாயா தத்துவம் இருந்தொளிரும் வெளியாகும்; இதனைச் சிவதத்துவம் என்றலுமுண்டு. சுத்த மாயா மண்டலத்துக்கு உள்ளும் புறமுமாகிய ஒள்ளிய வெளியாய் விளங்குமாறு புலப்பட, “நாதவெளியின் வெளியே” என விளம்புகிறார். பரநாதம், அபர நாதமாகிய இரண்டு மடங்கு நாதமெனப் பொதுப்பட மொழிகின்றார் என்றலும் உண்டு. சுத்த மாயையின் கீழுள்ள புவன போகங்கள் விடய வகைகளாகும்; இவற்றிற்கு உருவு நல்கும் நுண்ணுருவாவது பரம்பொருளாதலின், “விடய வுருவின் உருவே” என்று போற்றுகிறார். விடயவுருக்களில் உயிரும் ஒன்றாதலால் “உருவினும் உயிரின் உயிரே” என்றும், உயிருக்கு உயர்வு தருவது அதன் உணரும் தன்மையாவது பற்றி உயர்கொள் உணர்வு” என்றும் உணர்வுக்கு உணர்வாய் விளங்கும் இறைவனை “உணர்வின் உணர்வே” என்றும், உணர்வு தளரும்போது உணர்வொளி தந்து ஊக்குவதால் “உணர்வின் உறவின் உறவே” என்றும், இவ்வாற்றால் எமக்கு நீ இறைவனாகிறாய் எனபார், “எம் இறையே” என்றும் இயம்புகின்றார். களி - மகிழ்ச்சி; இன்பமுமாம். குறைவிலா நிறைவுற்ற இன்ப வடிவினனாதலால், சிவனைக் “களியின் நிறைவே” எனவும், நினைவோடொழியாது உயிர்கட்கு அருள் வழங்கிய வண்ணம் இருக்குமாறு தோன்ற. “அளிகொள் கருணை நிதியே” எனவும் எடுத்துரைக்கின்றார். மணிகண்டமும் எட்டுத்தோளும் கொண்ட திருவுருவுடையினாயினும், உருவெலாம் கடந்த கடவுள் என்றற்குக் “கடவுளே” எனக் கூறுகின்றார். அறிவின் சிறுமையால் எளிமையுற்ற யான் எண்ணிறந்த குற்றங்களைச் செய்தேன், செய்கின்றேன் என்பார், எளியனேன் சிறியன் யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலினும் பெரியவே” எனப் பாரிக்கின்றார். சிறுமை - சின்மை குறித்தன. பெருமை - பன்மை மேற்று. குற்றத்தின் பெருமையையும் தனது எளிமை சிறுமைகளையும் நோக்கி மலைக்கின்றாராதலால், “என்செய்கேன் என்செய்கேன்” என்று இரட்டித்துக் கூறுகின்றார். குற்றம் புரியாமைக்கு வழி காண்பவர், இறைவனை யேத்துவதன்றி வேறொன்றும் இன்மையுணர்கின்றார்; அதற்கு நெஞ்சின் துணையது இன்றியமையாமையை எண்ணுகின்றார்; நெஞ்சம் ஆசை வயப்பட்டு அலைதலையும் அறிகின்றாராதலால், “இனியாயினும் செயாது நினை ஏத்தவென்றால் வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன்” எனவுரைக்கின்றார். வினைத் தீர்வு வேண்டுவோர் ஒன்றிய மனத்துடன் திருவருள் வழி நிற்றல் வேண்டும்; அதற்கும் இறைவன் திருவருள் துணையாதல் வேண்டுமாதலின், “மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய்” எனப் பராவுகின்றார்.

          இதனால் மனவொருமையுடன் திருவருள் வழி நிற்க அருளுமாறு வேண்டியதாம்.

     (8)