2579. சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
தன்னிடத் தேமவல்லி
தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
சாந்தம்எனும் நேயர்உண்டு
புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
புதல்வன்உண் டிரவுபகலும்
போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
போகபோக் கியமும்உண்டு
வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
மணியும்உண் டஞ்செழுத்தாம்
மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும் பெரிய
வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
கடவுளே கருணைமலையே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
உரை: நறுமணம் கமழும் கொன்றையும் கங்கையாறும் பொருந்திய சிவந்த சடையை முடியிலே யுடைய கடவுளே, கருணையாகிய மலையே, கனக அம்பல நாதனே, கருணை நிறைந்த அங்கணனே, போத கமல குஞ்சித பாதனே, எனக்கு எப்பொழுதும் இன்பம் நல்கும் நீ தந்தையாகவும், நின்னிடப்பாகத் துறையும் பொன்மலை வல்லியாகிய உமாதேவியார் தாயாகவும், நின்னுடைய மெய்யடியார்கள் நல்ல சுற்றத்தாராகவும் உள்ளனர்; சாந்தப்பண்பு என்ற நண்பரும், மனத்தில் ஆசையின்மையாகிய மனைவியும், அறிவு எனப்படும் புதல்வனும் எனக்கு உண்டு. இராப் பகலற்ற ஞான பூமியும், ஆண்டுப் பெறற்குரிய திருவருளாகிய செம்பொருளும், நுகரக் கடவிய போக போக்கியங்களும் உள்ளன; வழிபாடு செய்து பூசப்படும் திருநீறாகிய காப்பும், அதனோடியைந்த அக்கமணி மாலையும், திருவைந்தெழுத்தென்னும் மந்திரப் படையும், சிவகதியாகிய நல்வாழ்வும் எனக்கு அமைந்திருக்கையில் எனக்குத் தாழ்வுண்டாகாதன்றோ? எ.று.
சந்ததம் - எப்போதும். உண்மையறிவு தந்து சான்றோனாக்கும் தகையடையவன் தந்தையாதலால், “மகிழ் தந்தை” என்று சிறப்பிக்கின்றார். ஏம வல்லித்தாய் பொன்மலையரசன் மகளாய்ப் பசுங்கொடி போல்பவளாகிய உமாதேவி. உலகருளும் தாயாய் இறைவன் இடப்பாகத்திற் பிரிவின்றி யிருத்தல்பற்றி, “நின்றன் விடத்து ஏமவல்லித்தாய்” என்று புகழ்கின்றார். ஏமம் - பொன். தம்போல் அன்பொழுக்க முடையராய்த் தம்மைச் சார்ந்தாரை நன்னெறி வழுவாமற் காக்கும் இயல்பினராயவரென்றற்கு அடியார்களை “நற்றமர்” என்றும், நல்லறிவு தந்து உய்விக்கும் நண்பர்போலச் சாந்தப் பண்பு உய்தியும் உறுதியும் நல்குதலால், “சாந்தமெனும் நேயர்” என்றும் இயம்புகின்றார். ஆசைக்கும் ஆசையின்மைக்கும் இடம் மனமாதலால், “புந்திகொள் நிராசை” என்றும், துன்பமும் இன்பமும் பயப்பனவாதல்பற்றி “மனைவி” யென்றும் கூறுகின்றார். நிராசையுடையார் மெய்யறிவு பெற்று, மேன்மையுறுதலால் “அறிவெனும் புதல்வன்” என்கின்றார். திருவருள் ஞானவின்ப நுகர்ச்சிக்குரிய ஞானபூமி, மாயா காரிய வுலகுபோல இரவு பகற் கால வேறுபாடுடைய தன்மையால், “இரவு பகல் போனவிடமுண்டு அருட் பொருளுமுண்டு” எனவும், நுகர் பொருளும் லுகர்வும் பேரின்பமாதலின், “ஆனந்த போக போக்கியம்” எனவும் கூறுகின்றார். சிவாய நம என, வாயாற் சொல்லி அணியப்படும் சிறப்பினால், “வந்தனை செய் நீறு” என்றும், உயிர்க்குக் காப்பாக உடம்பிலணியப்படுவதால், “நீறெனும் கவசம்” என்றும் உரைக்கின்றார். அக்கமணி -உருத்திராக்கமணி. திருவைந்தெழுத்தை, மந்திரமென்றலின். “அஞ்செழுத்தாம் மந்திரப்படை” எனக் கூறுகின்றார். சிவபோகம் துய்க்கும் வாழ்வாவது சிவ கதியாம் என்றற்கு “சிவகதி யெனும் பெரிய வாழ்வு” என்கின்றார்.
இதனால் சிவஞான வொழுக்கமுடையவர் வாழ்வு பெறுதலன்றித் தாழ்வு பெறுதல் இல்லையேன உணர்த்தியவாறாம். (9)
|