2580. நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
நாதமிசை ஓங்குமலையே
ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
நடனமிடு கின்றஒளியே
மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
வைத்தவண்வ ளர்த்தபதியே
மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
மதிக்கும்முடி வுற்றசிவமே
ஊன்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
ஒழியாத உவகையே அழியாத இன்பமே
ஒன்றிரண் டற்றநிலையே
கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
கண்கொண்ட நுதல் அண்ணலே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
உரை: வேதாந்த மென்ற உச்சியில் நிறைந்துள்ள பரப்பிரம்மப் பொருளே, ஆகமங்களின் முடிவில் உணரப்படும் சிவபரம்பொருளே, ஊன்கண் பொருந்திப் பார்க்கும் செயலை விடுத்து அகக் கண்ணிற் காண்டலும் தவமுடையோர் பெறுகின்ற ஞானச் செல்வமே, சலியாத உவகையாய், குன்றாத இன்பமாய், ஏகம் துவிதம் என்ற இருவகையுமில்லாத அத்துவித நிலையானவனே, காட்டில் உலவும் மத யானையின் தோலைப் போர்வையாகவுடைய கடவுளே, கண் பொருந்திய நெற்றியையுடைய அண்ணலே, கனக அம்பல நாதனே, கருணையங் கண்ணனே, போத கமல குஞ்சித பாதனே, பிரமனும் திருமாலும் முறையே முடியும் அடியும் அறிவரிதாகிய பரநாத தத்துவத்தின்கண் விளங்கித் தோன்றும் மலை போல்பவனே, ஞான மயமான சிதாகாசத்தின் நடுவில் ஆனந்தக் கூத்தாடும் ஒளிப்பொருளே, மாயா மயக்கத்தினின்றும் நீங்காமற் கிடந்து அலையும் எளியேனையும், சிவமாகிய உயர்ந்த நெறியைப் பொருந்தி யொழுகப் பண்ணி, அதன்கண் வளரச் செய்த பதிப்பொருளாதலின், உன்னைப் போற்றுகின்றேன். எ.று.
வேத வேதாந்த ஞானத்தின் முடிவாக நிறைந்து விளங்குவது பரப்பிரமம் என்பதால், “மறை முடிவில் நின்ற பரப்பிரமமே” எனக் கூறுகின்றார். மறைமுடிவு, வேத வேதாந்த ஞான முடிவு. ஆகமங்கள் ஆய்ந்துரைக்கும் முடிபு ஆகமாந்தம் எனவும், அதன்கண் சிறந்தோங்குவது சிவபரம்பொருளாதலால், “ஆகமம் மதிக்கும் முடிவு உற்ற சிவமே” எனவும் இயம்புகின்றார். வேதாந்த ஞானத்தைப் பிரமஞானமென்றும், ஆகமாந்த ஞானத்தைச் சிவஞானமென்றும் கூறுப. முகத்திலுள்ள ஊனக் கண்களாற் காண்பதை “ஊன்முகச் செயல்” என்றும், அகக்கண்களாற் சிந்திப்பதை, “அகக்கண் கொண்டு காண்பது” என்றும், தவஞானிகள் அகக்கண்ணாற் கண்டு இன்புறுவர் என்றும் அறிஞர் உரைப்பர். “முகத்திற் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள், அகத்திற் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந்தி) எனத் திருமூலர் கூறுவர். தவஞானிகள் பெறுவது சிவானந்தமாதலால், “உறுந்தவர் பெருஞ்செல்வமே” என்கின்றார். இன்பம் நுகர்வும் உவகை மெய்ப்பாடுமாதலின், இரு திறமும் விளங்க, “ஒழியாத உவகையே அழியாத இன்பமே” என வுரைக்கின்றார். பிரமமும் ஆன்மாவும் ஏகமெனவும் துவிதமெனவும், இரண்டுமன்றி அத்துவிதமெனவும் கூறுதல் பற்றி, “ஒன்றிரண்டற்ற நிலையே” எனவும் இசைக்கின்றார். கான்முகக் கட களிறு என்றது சாதியடை எனப்படும். நான்முகனாகிய பிரமன் சிவபிரான் முடியையும், திருமால் திருவடியையும் காண முயன்று மாட்டாராயினமையின், “நான்முகனும் மாலும் அடிமுடியு மறிவறிய” என்றும், மாயா மண்டலத்துக்கு அப்பாலுள்ள பரவெளியில் ஒளி மலையாய்ச் சிவம் ஒளிர்கின்றமை புலப்பட, “பரநாதமிசை ஓங்கும் மலையே” என்றும் கூறுகின்றார். ஞான மயமான ஒரு வானமென்பது ஞானகாசம், அந்தச் சிதாகாசத்தில் நடுவில் இன்பத் திருக்கூத்தாடுவது ஒளியுருவாகிய சிவத்தின் இயல்மென்பதுபற்றி, “ஒருவான நடு ஆனந்த நடனமிடுகின்ற ஒளியே” என உரைக்கின்றார். மான்முகம் மாயா காரிய வுலகு தரும் மயக்கம். மாயையின் மயக்கத்துக் கிரையாகாது விலகிச் செல்லும் திருவரு ணெறியிற் புகுத்தித் தம்மை யுயர்த்திய நலத்தை வடலூர் வள்ளல், “மான்முடும் விடாதுழலும் எனையும் உயர் நெறி மருவ வைத்து அவண் வளர்த்த பதியே” என்று கூறுகின்றார்.
இதனால், உலகியல் மயக்கத்தின் நீங்கித் திருவருள் நெறியில் தன்னைப் புகுத்தி வளர்த்த பெருநலத்தை எடுத்தோதியவாறாம். (10)
|