2
2. போற்றித் திருப்பதிகம்
அஃதாவது போற்றி என்ற சொல்லைப் பன்முறையும்
சொன் முடிவிலும் சொற்றொடர் முடிவிலும் ஓதும் நலம் பற்றிப் பாடிய பதிகம், என்பதாம். திருநாவுக்கரசரும்
மாணிக்கவாசகரும் போற்றிப் பாடியுள்ள, திருப்பாடல்கள் இதற்கு வழி காட்டுகின்றன. இதன்கண்
சிவஞான வொழுக்கங்ளும், திருவருள் விழையும் மருள் நீங்கித் தெருள் வேண்டும் சிறப்பும் பிறவும்
வேண்டப்படுகின்றன.
எழுச்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
2581. அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
அடியனேன் மனத்தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
சிந்தைநைந் துலகிடை மயங்கும்
மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
மதிநதி வளர்சடை மணியே.
உரை: பிறைத்திங்களும் கங்கையாறும் இருந்துயரும் சைடையை யுடைய மாணிக்க மணி போல்பவனே, எனக்கு அருளரசே, போற்றுகின்றேன்; எனக்கு நினது திருவருள் ஞானத்தை, நல்குதல் வேண்டும்; எமக்குத் தாயாகியவனே, போற்றி; நினக்கு அடியவனாகிய எனது மனத்தின்கண் உளதாகிய மலவிருள் தொலைதல் வேண்டும்; எனக்கு அறிவாகியவனே, போற்றி; ஏழையாகிய யான் நின்னைப் பாடற்குரிய தெளிவினையளிக்க வேண்டுகிறேன்; எனது குருவே, போற்றி; உலகியலில் மனம் மெலிந்து வருந்துதற் கேதுவாகிய மருட்சி நீங்குதல் வேண்டும். எ.று.
போற்றுகின்றேன் என்பது, போற்றி என இகர வீற்று வியங்கோளுருவில் வந்தது. போற்றி என்னும் வினை, காப்பாற்றுக என்ற பொருளில் பெரிதும் வழங்குவது. வளர் சடை மணியே, என் அரசே போற்றி; எந்தாயே போற்றி; என் அறிவே போற்றி; என் குருவே போற்றி என இயையும். திருவருள் ஞானத்தாலன்றி மலவிருள் கெடாதாகலின், “அருள் தரல் வேண்டும்” எனவும், “அடியனேன் மனத்தகத் தெழுந்த இருள் கெடல் வேண்டும்” எனவும் இசைக்கின்றார். அறிவின் கண் தெளிவும் மனத்தின்கண் உவகையும் இருந்தால் இனிய பாடல்கள் எழுமாதலால், “ஏழையேன் நின்றனைப் பாடும் தெருளுறல் வேண்டும்” என வுரைக்கின்றார். தெளிந்த அறிவின்மை ஏழைமையாகும் என அறிக.
தெருள் - தெளிவு. தெளிவு எய்திய வழி உவகை தானே உளத்தில் எய்தி விளங்குமாதலால், அதனை உய்த்துணர்ந்து பெய்து கொள்ள வைக்கின்றார். “துளங்கிளம் பிறைச் செனித் துருத்தியாய் திருந்தடி உளங் குளிர்ந்த போதெலாம் உவந்துவந் துரைப்பனே” (துருத்தி) என ஞானசம்பந்த ருரைப்பது காண்க. அருள் கூர்ந்து உயிரறிவில் அறிவாய் இறைவன் அமர்ந்தாலன்றி, தெள்ளிய நல்லறிவு வாயாதாகலின், “என் அறிவே” எனப் போற்றுகின்றார். உலகியல் மயக்கம் மனத்தை மாழ்குவித்து உயிருணர்வை மருளச் செய்தல் பற்றி, “சிந்தை நைந்து உலகிடை மயங்கும் மருளறல் வேண்டும்” என வேண்டுகின்றார். அறிவிற் படியும் இருளையும் மனத்திற் படியும் மருளையும் போக்குவதால் இறைவனை “என் குருவே” என்று போற்றுகின்றார்.
இதனால், திருவருளால் இருள் கடிந்து தெருள் கொண்டு மருளறல் வேண்டுமெனப் போற்றியவாறாம். (1)
|