2582.

     மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
          வாழ்விக்க வேண்டுவல் போற்றி
     அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
          கருளமு தருளுக போற்றி
     பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
          பாடுதல் வேண்டுநான் போற்றி
     தணிவில்பேர் ஒளியே போற்றிஎன் தன்னைத்
          தாங்குக போற்றிநின் பதமே.

உரை:

      நீலமணி போலும் கழுத்தையுடைய அமுது போல்பவனே போற்றி; என்னை இனிது வாழ்விக்க வேண்டுகிறேன்; அழகிய சந்திரனைத் தாங்கும் திருமுடியை யுடையவனே, போற்றி; ஏழையாகிய எனக்கு நின் அருளாகிய அமுதத்தை நல்கி யருள்வாயாக; பாம்பணிந்த தோளை யுடையவனே, போற்றி; நான் உன் சீர்களையே பாடுதல் வேண்டும்; குறையாத பேரொளிப் பேரருளே, போற்றி; என்னைத் தாங்கி யருளுக; நின் திருவடி போற்றி. எ.று.

          கடல் விடத்தை யுண்டமையால் கழுத்து கரிதாய் நீலமணி போல் ஒளிர்தலின், “மணி மிடற்று அமுதே” என்று போற்றுகின்றார். தான் விடமுண்டு தன்னை வேண்டிய தேவர்கட்கு அமுதளித்த அருள் செயல் கருதி, “அமுதே” எனச் சிறப்பிக்கின்றார். உடல் கருவி கரண முதலியவற்றை யளித்து, உலகில் வாழச் செய்தானாயினும் உலக வாழ்வு மயக்கமும் துன்பமு மளிப்பது கண்டு, அவ்வாறன்றி அயரா இன்ப வாழ்வே எனக்கு வேண்டுமென்பாராய், “என் தன்னை வாழ்விக்க வேண்டுவல்” என விண்ணப்பிக்கின்றார். முடியில் தங்குகிற பிறைத் திங்கள் அணியாய்த் திகழ்தலால், “அணிமதி முடியோய்” என வுரைக்கின்றார். திருவருள் ஞானாமிர்தமாய் இன்பம் பயக்கும் இயல்பினதாகலின், “இவ்வேழைக்கு அருளமு தருளுக” என வேண்டுகின்றார். பணி - பாம்பு, தோளிலும் மார்பிலும் மாலை போற் கிடந்து விளங்குவது பற்றி, “பணியணி புயத்தோய்” எனப் புகழ்கின்றார். உலகியற் பொருள் வாழ்வு வேண்டிப் பலரைப் பாடிச் சீர் குலையாமல், நின் திருவருள் வாழ்வு பெறற்கு நின் பொருள் சேர் புகழே பாடுதற்கமை வுடைத் தென்றற்கு, “நின் சீரே நான் பாடுதல் வேண்டும்” எனக் கூறுகின்றார். தணிதல், ஈண்டுக் குறைதல் மேற்று. சோதி முழு முதலாய் நிற்பது விளங்கத் “தணிவில் பேரொளியே” எனச் சாற்றுகின்றார். தாங்குவது திருவடி என்னும் பொருண்மை புலப்பட, “என் தன்னைத் தாங்குக” என்றவர், “நின் பதம் போற்றி” என்று கூறுகின்றார்.

     இதனால், அருளமு தளித்துத் திருவடியில் தாங்குக என வேண்டிய வாறாம்.

     (2)