2583.

     நின்பதம் பாடல் வேண்டுநான் போற்றி
          நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
     நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
          நெற்றியங் கண்கொளும் நிறைவே
     நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
          நெடியாமல் புகழ்தனி நிலையே
     நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
          நெடுஞ்சடை முடித்தயா நிதியே.

உரை:

      நீறணிந்து, ஒளி திகழும் குளிர்த்த தீயின் நிறமுடைய பெருமானே, போற்றி; நான் உன் திருவடிப் புகழ்களையே பாடவேண்டும்; நெற்றியிற் கண் கொண்ட நிறை பரம்பொருளே, போற்றி; நின் புகழ்களைப் பிறர் எடுத்தோத நான் கேட்க வேண்டும்; நெடிய திருமால் புகழ்ந்து பரவும் தனிநிலைப் பெருமானே, போற்றி; எளியனாகிய யான் நின் திருவருள் வசமே நிற்க வேண்டும்; நீண்ட சடை பொருந்திய திருமுடியையுடைய அருட் செல்வமே, போற்றி; யான் நினக்குரிய பணிகளையே செய்தல் வேண்டும். எ.று.

          திருமேனி நிறமும் அதன் மேற் பூசப்பட்டிருக்கும் திருநீறும் நீறு பூத்த நெருப்புப் போல் இருப்பினும், நெருப்பிற காணப்படும் வெப்பமின்றித் திருவருள் தட்பமே நிலவுதல் பற்றி, “நீறுபூத் தொளிர் குளிர் நெருப்பே” என வுரைக்கின்றார். பாடல் வன்மை எல்லார்க்கும் அமைவதின்மையின், “நின் பதம் பாடல் வேண்டும் நான்” என வேண்டுகின்றார். பாடலினும் வல்லவர் பாடக் கேட்டல் மனத்தை மகிழ்வித்தலின், “நின் புகழ் கேட்டல் வேண்டும் நான்” என்று கூறுகின்றார். திருமாலை நெடியவன் என்று போற்றுவது கொண்டு, “நெடிய மால்” எனவும், பரமாந் தன்மையால் ஒப்பற்றவனாதலின், சிவபெருமானை “தனிநிலை” எனவும் இசைக்கின்றார். உலகியல் வசப் படாமல் இறைவன் அருள் வசம் நிற்றல் சிவப் பேற்றுக்கு ஏதுவாதலால், “நின் வசமாதல் வேண்டும் நான்” எனவும் பராவுகின்றார். திருவருளே உயர்பெருஞ் செல்வமாய், சிவபெருமான் அதுவே திருவுருவானவனாதல் பற்றி, “தயாநிதியே” என்றும், இறை பணி செய்தல் உய்தி நல்கும் உறுதியுடைய தென்பதனால், “நின் பணி புரிதல் வேண்டும் நான்” என்றும் உரைக்கின்றார்.

          இதனால் இறைவன் புகழைப் பாடுதல், பாடக் கேட்டல், பணி செய்தல் ஆகியவற்றைச் செய்ய அருள் புரிய வேண்டியவாறாம்.

     (3)