2584.

     நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
          நெறிதரு நிமலமே போற்றி
     மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
          வாழ்வித்த வள்ளலே போற்றி
     விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
          வியன்நெறி விளக்கமே போற்றி
     பதிபசு பதியே போற்றி நின்பாதம்
          பாடஎற் கருளுக போற்றி.

உரை:

      திருவருளாகிய நிதியைத் தந்து உய்விக்கும் நிறைபொருளாகிய சிவனே, போற்றி; உயிர்கட்கெல்லாம் உறுதி பயக்கும் நெறியருளுகின்ற தூய்மையனே, போற்றி; பிறைச்சந்திரனை முடியில் கொண்டுள்ள கனி போன்றவனே, போற்றி; என்னை யுலகிற் பிறந்து வாழச் செய்த வள்ளலே, போற்றி; படைப்போனாகிய பிரமனுக்கும் இறைவனே, போற்றி; உண்மை ஞானமாகிய பெரிய நெறியை விளக்கி யருள்பவனே, போற்றி; பதிப்பொருளாகிய பசுபதியே போற்றி; நின்னுடைய திருவடிகளைப் பாடிப் பரவுதற்கு அருள் செய்க. எ.று.

          நிதி யென்றது திருவருளாகிய நிதயை; “அருணிதி தர வரும் ஆனந்த மலையே” (திருப்பள்ளி) எனத் திருவாசகம் ஓதுவதறிக. குறைவிலா நிறை எனப் புகழப்படுதலால் “நிறைவே” என்று கூறுகின்றார். உணரும் தன்மை யுடையவை யாயினும் இறைவன் உணர்த்த உணர்தலன்றித் தானே நலமறிந்து சென்னேறி கண்டு அடையும் திறமில்லாமையால் “என்னுயிர்க்கோர் நெறி தரு நிலமே” என்று இசைக்கின்றார். நிமிலம் - தூய்மை. உயிர்கள் அனாதி மலத்தொடர்பால் தூய்மையில்லாதவை என அறிக; இறைவன் மலரகிதன் என்று மெய்யுணர்ந்தோர் உரைப்பது பற்றி “நிமலமே” என்று இயம்புகிறார். மதி - பிறைமதி. சிவந்த திருமேனியுடையனாதலால் “கனியே” எனப்புகழ்கின்றார்,. உயிர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து மலம் நீங்கி ஞானப்பேற்றால் இன்ப வீடு எய்துதல் வேண்டி உடல் கருவியுலகு முதலியவற்றைப் படைத்தளித்திருக்கும் பெருநலத்தை நினைவிற் கொண்டு “என்றன்னை வாழ்வித்த வள்ளலே” என்று போற்றுகின்றார். விதி - படைத்தலைக் செய்யும் பிரமதேவன். படைத்தல் முத்தொழில்களைச் செய்யும் தேவர் மூவர்கட்குத் தலைவனாதல் பற்றி, “விதி முதற் கிறையே” என்று புகழ்கின்றார். மெய்ஞ்ஞானம் - மெய்ம்மை காட்டும் சிவஞானம். “இலகு மெய்ந்நெறி சிவநெறி” (ஞானசம். பு) எனச் சேக்கிழார் உரைக்கின்றார். சிவஞானத்திலும், அது காட்டும் நெறியினும் மிக்கது வேறின்மை கண்டு தெரிவித்தலால், “மெய்ஞ்ஞான வியனெறி விளக்கமே” என விளம்புகிறார். சிவநெறியைச் சிறப்பித்தல் வேண்டி “வியனெறி” என்கின்றார். சிவ குருவாய் விளக்குபவனை, “விளக்கமே” என்று கூறுகின்றார். பசுபதி - சிவனுக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று. பசுபதியாகிய சிவனே எல்லா வுலகுக்கும் பதியாவது தோன்ற, “பதி பசுபதி” என்று பகர்கின்றார். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” (திருவாச) வழிபடல் இயலுவதாகலின், “நின் பாதம் பாடற் கருளுக” என வேண்டுகின்றார். பாடுதல், ஈண்டுப் பாட்டுக்களைப் புனைந்து பராவுதல். “பாடுவாருக் கருளும் எந்தை” (முதுகுன்று) என்று திருஞானசம்பந்தர் உரைப்பது காண்க.

     இதனால் திருவருளையும் சிவஞானத்தையும் சிறப்பித்தோதிப் பாடற்கருளுமாறு வேண்டியதாம்.

     (4)