2585. போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
புரிதவக் காட்சியே போற்றி
போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
புகல்சிவ போகமே போற்றி
போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
பூரண வெள்ளமே போற்றி
போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
போற்றிநின் சேவடிப் போதே.
உரை: என்னுடைய உயிர்க்கு இன்பம் தரும் பொருளே, போற்றி; அன்பராயினார் செய்யும் தவத்தின்கண் தோன்றும் ஞானக் காட்சியானவனே, போற்றி; என் அன்புக்குரிய தெய்வமே போற்றி; சைவ நூல்கள் உரைக்கும் சிவபோகமே போற்றி; எனக்குப் பெரியதோர் செல்வமாகிய ஈசனே போற்றி; கருணையாகிய நிறைந்த கடலே போற்றி; மண்ணில் எனக்கு வாழ்வளித்த பெரிய முதற்பொருளே, போற்றி; நின்னுடைய திருவடி போற்றி. எ.று.
உணர்வுருவாகிய உயிர் வேண்டுவதெல்லாம் நிறைந்த இன்பமாதலின், அதனைப் பெரிதும் நல்குவது பற்றிச் சிவபெருமானைப் பெரியதோர் “இன்பமே” என்று கூறுகிறார். மணிவாசகரும், “குணங்கள் தாம் இல்லா இன்பமே” (கோயில்) என்று புகல்கின்றமை காண்க. சிவன்பால் உளதாகும் அன்பே ஞானமாதலின், தவஞானிகட்கு எய்தும் ஞானக் காட்சியும் சிவமாதல் கொண்டு, “அன்பர் புரிதவக் காட்சியே” என்று போற்றுகின்றார். சிவரூப சிவ தரிசன சிவயோகங்களால் படி முறையில் ஆன்மா பெறுவது உண்மை நெறி விளக்க முதலிய சைவ நூல்கள் உரைப்பதால், சைவம் புகல் சிவபோகமே போற்றி” எனக் குறிக்கின்றார். மனநிறைவும் இன்பமும் சுரப்பது பற்றிச் சிவத்தை “என் பெரிதாம் செல்வமே” என்கின்றார். “செல்வ மென்பது சிந்தையின் நிறைவே” என்பர் குமரகுருபரர். குறைவின்றி நிறைந்த கருணைக் கடல் என்று பெரியோர் கூறுதலால், “கருணைப் பூரண வெள்ளமே” எனப் பாராட்டுகின்றார். மலவிருளின் நீங்கி ஞானப் பேற்றால் சிவத்தன்மை யெய்தற்குரிய ஆன்மாவுக்கு, உடல் கருவி கரணங்களைப் படைத்தளித் துவக்கும் பரம்பொருள் என்று பெரியோர் அறிவுறுத்தலால் “என் வாழ்வுக்கு ஒரு முதலே” என்று உரைக்கின்றார்.
இதனால் சிவன் திருவடியைப் போற்றற் கெழுந்த ஆர்வத்தால் இன்பமே தவக் காட்சியே என்பன முதலாகப் பாராட்டியவாறாம். (5)
|