2586. போதஆ னந்த போகமே என்னைப்
புறம்பிட நினைத்திடேல் போற்றி
சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
சிறுமைதீர்த் தருளுக போற்றி
பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
வேறெனக் கிலைஅருள் போற்றி.
உரை: ஞானவின்பத்தை நல்கும் சிவபோகப் பொருளே போற்றி; என்னைப் புறத்தே போக்குதற்கு நினைத்தல் வேண்டா; குளிர்ந்த வெண்பிறை தங்குகின்ற சிவந்த சடையையுடையவனே, போற்றி; என்பாலுள்ள சிறுமைத் தன்மையைப் போக்கி யருளுக; யாவர்பாலும் வேற்றுமை யெண்ணாத அருட் கடலே போற்றி; யான் செய்துள்ள பிழையனைத்தையும் பொருத்தருளல் வேண்டும்; வேத நூல் கூறும் மெய்ப் பொருளே, போற்றி; உன்னைத் தவிர ஆதரவு செய்பவர் வேறே எனக்கு ஒருவரும் இல்லை, காண்க. எ.று.
ஞான வின்ப அனுபூதி வடிவினன் சிவபெருமானாதல் பற்றி, “போத வானந்த போகமே” எனப் போற்றுகின்றார். சிவனருட் குழற்குப் புறமாகத் தள்ளி விடலாகாது என வேண்டுகின்றமையின், என்னைப் புறம்பிட நினைத்திடேல்” என வுரைக்கின்றார். வான்பிறை - வெண்மையான பிறைச்சந்திரன். சீதம் - குளிர்ச்சி. இயற்கை மலப்பிணியால் ஆன்ம வறிவு சுருங்கினமையால் அதனை நீக்கி விரியும் ஞானத்தால் சிவத்தைக் காண்டல் வேண்டுமெனும் வேட்கை புலப்பட, “என் சிறுமை தீர்த்தருளுக போற்றி” என்று கூறுகின்றார். இன்னார் இனியார், பகைவர் நண்பரென்ற வேறுபாடின்றி யாவர்க்கும் அருள் வழங்கும் தன்மையுடையனாதலால், சிவனை “போத மொன்றில்லா அருட் கடலே” எனப் பரவுகின்றார். உற்று வருந்தும் துன்பங்கட் கெல்லாம் மன மொழி மெய்களால் உளவாகும் பிழைகளாதலால் “என் பிழை யெலாம் பொறுத்தருள் போற்றி” என்று இயம்புகிறார். “பரவுவாரையும் உடையார் பழித்தகழ்வாரையும் உடையார்” (வாழ்கொளி) என ஞானசம்பந்தரும், “போற்றியோம் நமச்சிவாய புறமெனைப் போக்கல் கண்டாய்; பிழைத்தவை பொறுக்கை யெலாம் பெரியவர் கடமை போற்றி” (சதகம்) என மணிவாசகரும் ஓதுவன காண்க. வேதங்கள் ஓதும் பொருள் பலவற்றினும் உண்மைப் பொருள் சிவமாதல்பற்றி, “வேத மெய்ப்பொருளே” என்றும், சிவத்தின் வேறே அருளுறுவாய பரம்பொருள்ளில்லாமையால், “வேறெனக் கிலை யருள் போற்றி” என்றும் உரைக்கின்றார்.
இதனால் சிவத்தின் வேறு பரம்பொருளின்மையும் அதுவே வேதம் கூறும் மெய்ப் பொருளெனவும் வற்புறுத்தியவாறாம். (6)
|