2587. போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
போற்றிநின் பூம்பதம் போற்றி
ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
அமலநின் அடிமலர் போற்றி
ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
இறைவநின் இருங்கழல் போற்றி
சாற்றுமா றரிய பெருமையே போற்றி
தலைவநின் தாட்டுணை போற்றி.
உரை: அன்பால் போற்றி வழிபடுபவர் மனத்தின்கண் புகுந்து, எழுந்தருளும் ஞானவொளியே, போற்றி; பூப்போன்ற நின் திருவடி போற்றி; கங்கையாறு தங்கிய சடையையுடைய என்னுடைய அப்பனே, போற்றி; தூயவனே, நினது திருவடியாகிய தாமரை போற்றி; எருதெழுதிய நீண்ட கொடியை யுடையவனே, போற்றி; இறைவனே, நின்னுடைய கழலணிந்த பெரிய திருவடி போற்றி; சொல்லிப் புகழ்தற்கரிய பெருமையுடையவனே, போற்றி; தலைவனே, நின்னுடைய இரண்டாகிய திருவடிகள் போற்றி. எ.று.
உண்மை யன்புடன் நினைப்பவர் மனத்தையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளுவதுபற்றி, “போற்றுவார் உள்ளம் புகுந் தொளிர் ஒளியே” என்று கூறுகின்றார். “பனைக்கை மும்மத வேதம் உரித்தவன், நினைப்பவர் மனம் கோயிலாகக்கொள்பவன்” எனத் திருநாவுக்கரசர் உரைப்பர். ஆதியந்தமில்லாத அருட்பேரொளி யுருவினன் எனப்படுதலால், “ஒளிர் ஒளியே” என்றும், சிந்தையின்கண் நோக்குவார்க்குச் சிவஞானச் செஞ்சுடராய் விளங்குதலால், “உள்ளம் புகுந்தொளிர் ஒளியே” என்றும் எடுத்துரைக்கின்றார். “பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யேநின் றெரியும் விளக்கேயொத்தபிரான்” (கழிப்பாலை) என நம்பியாரூரர் நவில்வது காண்க. பூம்பதம், பூப்போன்ற அழகிய திருவடி; மென்மையான திருவடி என்றுமாம். ஆறுவார் சடை யெனற்பாலது எதுகை நோக்கி, ஆற்றுவார் சடை என வந்தது. ஆறு - கங்கையாறு, அப்பன் - தந்தை. அமலன் -மலமில்லாத தூயவன். ஏறெழுதிய கொடி சிவனுக்குரியதாகலின், “ஏற்றுவார் கொடி கொள் எந்தையே” என்று பராவுகின்றார். “ஏறுலாவிய கொடியினான்” (கீழ் வேளூர்) என ஞானசம்பந்தர் பாராட்டுவர். இருங்கழல் என்றவிடத்து இருமை பெருமையாய்க் கழலணிந்த திருவடிக்காயிற்று; உலகனைத்தும் விரிந்தொடுங்கும் திருவடியாதலால் “இருங்கழல்” என ஏத்துகின்றார். “இருதாள் நிழற் கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே” (ஐங்) எனப் பெரியோர் கூறுவதறிக. சிந்தையும் மொழியும் செல்லாத எல்லையில் உள்ள பெருமானாதலால், “சாற்றுமா றிரிய பெருமையே” எனப் புகழ்கின்றார். பெருமையுடையவனைப் “பெருமையே” எனக் குணமாய்க் கூறுகின்றார். “பணியுமாம் என்றும் பெருமை” (குறள்) என்று சான்றோர் உரைப்பது காண்க.
இதனால், சிவன் போற்றுவா ருள்ளம் புகுந்தருளுவான் என்றும் சாற்றற்கரய பெருமையுடையவ னென்றும் விளம்பியவாறாம்.
(7)
|