2588. துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
துணைவநின் துணையடி போற்றி
புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
புனிதநின் பொன்னடி போற்றி
இணையில்பேர் இன்ப அமுதருள் கருணை
இறைவநின் இணையடி போற்றி
கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
கண்ணநின் கழலடி போற்றி.
உரை: இரண்டாகிய கொங்கைகளையுடைய மடந்தையாகிய எங்கள் பெருமாட்டியான உமாதேவி கணவனே, நின்னுடைய இரண்டு திருவடிகள் போற்றி; தெப்பம் போலத் துன்பக் கடலினின்றும் கரையேற்றும் தூயவனாகிய நின்னுடைய அழகிய திருவடி போற்றி; ஒப்பில்லாத பேரின்பம் தரும் ஞானாமுதம் நல்கும் அருளிறைவனே, உன்னுடைய திருவடியிரண்டும் போற்றி; திருமாலை அம்பாகக் கொண்டு திரிபுரத் தசுரரை எரித்தருளும் மூன்று கண்களையுடையவனே, கழலணிந்த திருவடிகள் போற்றி. எ.று.
துணை - இரண்டு, மடந்தை - பெண், பெருமானுக்குப் பெண்பாற் பெயர் பெருமாட்டியென்பது. உமையம்மைக்குக் கணவனாதல்பற்றி “எம்பெருமாட்டி துணைவ” எனக் கூறுகின்றார். துன்பக் கடலிற் கிடந்து வருந்தும் உயிர்கட்குத் கரையேற்றும் தெப்பமாய் உதவுமாறு நினைந்து, “புணையென இடரின் கடலினின் றேற்றும் புனித நின் பொன்னடி போற்றி” எனப் புகல்கின்றார். “இடர்க் கடலுட் சுழிக்கப்பட்டு இளைக்கின்றேற் கக்கரைக்கே ஏற வாங்கும் தோணி” (ஆவடுதண். தாண்டகம்) என்று சான்றோர் உரைப்பது காண்க. மெய்யன்பர்க்கு முத்தியின்பம் தரும் முதல்வனாதலால் “சிவனை இணையில் பேரின்ப அமுதருள் கருணை இறைவ” என இயம்புகின்றார். “வீடிதனை மெய்யடியார்க் கருள் செய்வாரும் வேலைவிடமுண்டிருண்ட கண்டத்தாரும்” (வெண்ணியூர்) எனப் பெரியோர் வழுத்துவது காண்க. திரிபுரமெரித்த காலத்தில் திருமாலையம்பாகவும் மேருமலையை வில்லாகவும் கொண்டாரெனப் புராணம் கூறுவதுபற்றி, “கணையெனக் கண்ணன் தனைக்கொளும் ஒரு முக்கண்ண” என மொழிகின்றார். திருமால் கரிய திருமேனியுடையனாதலால் கண்ணன் என்று குறிக்கின்றார். திருமாலைச் சிவன் அம்பாகக் கொண்ட செய்தியை, “குன்றவார் சிலை நாண் அரவு அரி வாளி கூரெரி காற்றின் மும்மதில் வென்ற வாறெங்ஙனே” (ஆமாத்தூர்) எனத் திருஞானசம்பந்தரும், “நிலையிலா வூர் மூன்றொன்ற நெருப்பு அரி காற்றம்பாகச் சிலையும் நாணதுவும் நாகம் கொண்டவர்”(வீழிமிழலை) என நாவுக்கரசரும் உரைப்பது காண்க.
இதனால் துன்பக் கடலினின்றும் உயிர்களைக் கரையேற்றிப் பேரின்ப மருளும் சிவன் சேவடி போற்றியவாறாம். (8)
|