2589.

     அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி
          அயல்எனை விட்டிடேல் போற்றி
     கொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி
          குணப்பெருங் குன்றமே போற்றி
     நெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி
          நினைஅலால் பிறிதிலேன் போற்றி
     படிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்
          பரமநின் அடைக்கலம் நானே.

உரை:

      அடியவனாகிய என் பிழை பொறுத்தருள்க; போற்றி; என்னை அயல் நெறியில் வீழ்ந்தொழியவிடலாகாது; கொடியவனாகிய எனக்கு இன்பம் தந்தருள வேண்டும்; குணமாகிய பெருங்குன்றமாகியவனே, போற்றி; நெடிது பெருகிய என் துன்பத்தைப் போக்கிட வேண்டும்; நின்னையொழிய எனக்கு வேறு பற்றுக்கோடு இல்லை, போற்றி; மண்ணுலகில் பிற மக்கள்பால் என்னைப் போக்குதல் வேண்டா; பரமனே, யான் நினது அடைக்கலமாயினேன். எ.று.

சிற்றறிவும் சிறுதொழிலும் உடையனாதலால் பிழைகள் பலவும் செய்வது எனக்கு இயல்பாகலின், யான் செய்யும் பிழை மிகுதி கண்டு பொறுத்தல் வேண்டும் என முறையிடுவாராய், “அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி” என்றும், தமது உரிமை தோன்ற “அடியனேன்” என்றும் கூறுகின்றார். செய்பிழை மிகுதல் காண்பார்க்குச் செய்தார் மேல் வெறுப்புத் தோன்றிப் புறத்தே விலக்கற்கு எண்ணமுண்டாமாதலின், “அயல் எனை விட்டிடேல் போற்றி” என வேண்டுகின்றார். பிழையும் கொடுமையும் மிக்க விடத்தும், சலிப்பும் வெறுப்புமின்றித் தண்ணிய அருள் புரியும் குணப் பெருமைக்கு எல்லையாய் இலகுவதால் சிவ பெருமானைக் “குணப் பெருங்குன்றமே போற்றி” எனவும், கொடுமைச் செயல்களே துன்பமுறற்குரியவாயினும் எனக்கு நின் குண மாண்புகளால் இன்பம் அருளுகிறாய் என்பாராய், “கொடியனேற்கின்பம் தந்தருள் போற்றி” எனவும் இயம்புகின்றார். தமக்குறும் துன்பங்கள் மலையினும் கடலினும் பெருகித் தோன்றுவதுபற்றி, “நெடிய என் துன்பம் துடைத்தருள் போற்றி” என்றும், பெருங்குன்றமாதலால் எனக்கு நின்னைத் தவிரப் பற்றாவார் பிறர் யாரும் இல்லையென்பாராய், “நினையலாற் பிறிதிலேன்” என்றும் கூறுகிறார். எனது துன்பத்துக்குத் துணையும் மருந்துமாவது நினது திருவருள் ஒன்றொழிய வேறு யாதும் இல்லை என்றற்கு “பிறிது” இலேன் என எடுத்துரைக்கின்றார். படி - நிலவுலகு. பிறர் படும் துன்பம் கண்டு துடைத்துதவும் மக்கள் உளராயினும், அவர் முழு நிறைவுடையரன்மையின் அவர்பால் என்னை ஒதுக்க வேண்டா; நான் பரமனாகிய உனக்கே அடைக்கலமாயினேன் என்று முறையிடுவாராய், “பிறர்பாற் செலுத்திடேல், எங்கள் பரம. நின் அடைக்கலம் நானே” எனவுரைக்கின்றார்.

          இதனால், நினக்கே அடைக்கலமாயின என்னைப் பிறர் ஆதரவு பெறக் கைவிடலாகாது என முறையிட்டவாறாம்.

     (9)