2590. நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
நலந்தரல் வேண்டுவன் போற்றி
ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
வள்ளலே போற்றிநின் அருளே.
உரை: பிணை மான்போல, நெடிய கண்களையுடைய மலைமகளாகிய உமாதேவியை, இடப்பாகத்தில் உடைய வள்ளலாகிய சிவபெருமானே, நின் திருவருள் போற்றி; நான் செய்யும் பிழைகள் மிகப் பலவேயாயினும் நீ அவற்றைப் பொறுத்து, நலம் செய்தருள வேண்டும், போற்றி; இப் பிழைகளை ஏன் செய்தாய் என்று கேட்பவர் இல்லை; எனக்கு உன்னுடைய இனிய திருவருள் நோக்கத்தைச் செய்தருள்க; ஊனாலாகிய எனது நாவால் உன்னுடைய திருவைந்தெழுத்தை எளிய யான் ஓதி யுய்ய நீ திருவுளம் செய்தருள்க, போற்றி. எ.று.
துன்பங்கள் கடலலைபோல் மிகப் பலவாய் வந்து வருத்துவதற்குக் காரணம் தாம் செய்த பிழைகளெனத் தெரிதலால், “நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலந்தரல் வேண்டுவல் போற்றி” எனக் கூறுகின்றார். துன்புறுதல் கண்டு ஏன் என்பார் உளராயின், செய்பிழைகள் தவிர்க்கப்படுமாகலின், “ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு” என்றும், நினது திருவருள் ஞான நாட்டம் பதியுமாயின், அறிவு தெளிவுற்றுத் துன்பத்துக்குள்ளாதல் இல்லையாம் என்பார், “உன் இன்னருள் நோக்கம் செய் போற்றி” என்றும் இயம்புகின்றார். திருவருள் நினைவு உளதாதற்கும் திருவருள் நாட்டம் பெறுதற்கும் திருவைந்தெழுந்து அரிய துணையாதலால், “நாவல் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்தருள் போற்றி” என வுரைக்கின்றார். திருவைந்தெழுத்தைச் சிந்தித்தற்கும் ஓதுதற்கும் திருவருள் இன்றியமையாமையின், “ஓத வுவந்தருள்” எனக் கூறுகிறார். (நின் நாமத்திருவெழுத் தஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே” (ஐயாறு) என நாவுக்கரசர் நவில்வது காண்க.
இதனாற், செய்பிழைகளைத் தவிர்க்கும் திருவைந்தெழுத்தை நாவால் ஓதி யுய்தற்கு அருள் செய்க என வேண்டியவாறாம். (10)
|