3

3. அம்மை திருப்பதிகம்

     

      அஃதாவது, உமாதேவியாகிய சிவகாமியைச் சிவனாந்தவல்லி பெயரால் மகுடமிட்டுப் பாடுவது.

 

பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

2591.

     உலகின்உயிர் வகைஉவகை உறஇனிய அருளமுதம்
          உதவும்ஆ னந்த சிவையே
     உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
          உணர்த்துபேர் இன்ப நிதியே
     இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
          இயலுற உளங்கொள் பரையே
     இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
          ஈந்தெனை அளித்த அறிவே
     கலகமுறு சகசமல இருளகல வெளியான
          காட்சியே கருணை நிறைவே
     கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
          கநஅமுதும் உதவு கடலே
     அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
          அண்ணலார் மகிழும் மணியே
     அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
          வானந்த வல்லி உமையே.

உரை:

      உலகின்கண் வாழும் உயிரினம் பலவும் இன்ப மெய்தல் வேண்டித் திருவருளாகிய அமுதத்தை நல்கும் ஆனந்த மயமான சிவையே, ஒப்புக் கூற முடியாத ஒரு பெரிய சிவநெறியை உயிர்கட்குணர்த்தி யருளும் பேரின்பப் பெருஞ்செல்வமே, விளங்குகின்ற பரம் அபரம் என்ற இருவகை நிலைகளைப் பொருந்தும் அவரவருடைய பருவம் பக்குவமடையுமாறு திருவுளம் கொள்ளும் பறையே, துறக்கமும் வீடுமாகிய இருவகை நெறியும் ஒருமைக்கண் எய்தும் அரிய பெருமையைத் தந்து என்னை ஆண்டருளிய அறிவுருவே, வருத்தமுறுவிக்கும் இயற்கை மலம் செய்யும் இருள் நீங்குமாறு ஒளி நிலவும் ஞானாகாயத்தில் தோன்றும் காட்சிப் பொருளே, அருள் நிறைவே, மத நீர் பெருகினும் தூயதாய யானையின் முகத்தையுடைய அமுதமாகிய விநாயகப் பெருமானையும் ஆறுமுகங்களையுடைய பெருமை சான்ற அமுதமாகிய முருகப்பெருமானையும் பயந்தருளிய கடல் போன்றவளே, அளவற்ற வளம் நிறைந்த ஒப்பற்ற தில்லைப்பதியில் எழுந்தருளும் தலைவராகிய சிவபெருமான் மகிழும் மரகத மணி போன்றவளே, அண்டங்களனைத்தையும் அவற்றுள் உறையும் சராசரங்களையும் ஈன்றருளும் தாயாகிய பரசிவானந்த வல்லியாகிய உமையம்மையே, எமக்கு அருள் புரிக. எ.று.

           ஓரறிவுடையது முதல் உயிர்கள் எண்ணிறந்தனவாய் இன்பம் வேண்டுதலும் துன்பத்தை விலக்குதலும் இயல்பாக வுடையவையாய் இருப்பனவாதலால், “உலகின் உயிர்வகை யுவகையுற” எனவும், திருவருட் சத்தியாய் உயிர்களின் அறிவு செயல்களாகிய சத்திகளை யெழுப்பி இன்ப மெய்துவிக்கும் ஏற்ற முடைமை பற்றி, “இனிய அருளமுதம் உதவும் ஆனந்த சிவையே” எனவும் உமையம்மையைப் போற்றுகின்றார். “உரை சேரும் எண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனி பேதம்” (வீழிமிழலை) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. உலகில் இன்பப் பேற்றுக்கு வாயில் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாதலால் அதற்கின்றியமையாத அருளை வழங்கும் சிவசத்தியை, இனிய அருளமுதம் உதவும் ஆனந்த சிவையே” என்று கூறுகின்றார். சிவனுக்குப் பெண்பாற் பெயர் சிவை. சிவம் இன்ப மயமாதலால் தேவியை “ஆனந்த சிவை” எனக் குறிக்கின்றார். சிவநெறியின் தனிப் பெருமையைப் புலப்படுத்தற்கு “உவமை சொலவரிய ஒரு பெரிய சிவநெறி” எனவும், திருவருள் ஞானமும் ஒழுக்கமும் திருவருட் சத்தியால் உளவாதலால் “சிவநெறிதனை யுணர்த்து பேரின்ப நிதி” எனவும் இயம்புகிறார். உலகில் மக்களுயிரின் மேனிலையும் கீழ்நிலையுமாகிய நிலைகட்கேற்பக் காலமறிந்து பக்குவம் உறுவிக்கும் பராசக்தி என்பது பற்றி, “இலகுபரநிலை அபரநிலை யிசையும் அவரவர் பருவம் இயலுற உளங்கொள் பரையே” என்று போற்றுகின்றார். பரன் என்பதன் பெண்பால் பரை. சிவசத்தியைப் பரை என்பது வழக்கு. துறக்கப் பேற்றுக்கு வாயிலாக இல்லற நெறியும், வீடு பேற்றுக்கு ஏதுவாகும் ஞானமாகிய துறவு நெறியும் “இருமை நெறி” எனப்படுகின்றன. வடலூர் அடிகட்கு இருநெறியும் ஒருங்கு வாய்த்தமை நினைந்து, “இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமைதனை ஈந்தெனையளித்த நெறியே” என்று இசைக்கின்றார். இன்னெறிக் கமைந்த திருமணம் நிகழ்ந்ததும் அதன்கண் அழுந்தாகல் அடிகளார் உள்ளத் துறவு பூண்டு வாழ்ந்ததும் ஈண்டு நினைக்கற் பாலனவாம். செய்வினையால் ஒருவர்க்கெய்தும் பெருமையில் வடலூரடிகள் பெற்றது அரியதாகலின், “அருமை பெறு பெருமை” எனச் சிறப்பிக்கப்படுகிறது. இருவகை நெறிகளின் பயன்தூக்கி மேற்கோடற்கேற்கும் அறிவருளுவது அருட் சக்தியாதலால், “அளித்த அறிவே” எனக் கூறுகின்றார். இருள் நீக்கத்துக்கு ஒளி போல மலவிருளைக் கடிதற்குச் சிவஞான அருளொளி நல்குதல் விளங்க, “கலக முறு சகசமல விருளகல வெளியான காட்சியே” எனவும், அருளே அம்மையின் திருவுருவாதல் பற்றி, “கருணை நிறைவே” எனவும் இயம்புகிறார். இயற்கையைச் சகச மென்றும், செயற்கையை ஆகந்துகம் என்றும் வழங்கும் மரபினால், ஆணவ மலம் “சகச மலம்” எனவும், அறிவை மறைப்பது பற்றி, “மலவிருள்” எனவும் கூறப்படுகிறது. மூல மலத்தைப் போக்குதற்கு ஏனை மாயா மலமும் கன்மமலமும் பற்றுதலால் அவை ஆகந்துக மலம் எனக் கூறப்படும். மலவிருளகற்றும் ஞானவொளி திகழும் இடம் ஞானாகாயமாதலின், ஆண்டுத் தோன்றும் திருவருட் காட்சியை, “வெளியான காட்சியே” என்று சிறப்பிக்கின்றார்.

          தண்ணிய குறைவிலா நிறைவுடைய தாகலின், பரைக் காட்சியை, “கருணை நிறைவே” எனப் பகர்கின்றார். பிடியானை யுருக்கொண்டு சிவக் களிற்றைக் கூடிப் பயந்தமையின், விநாயகரை, “கடகரட விமல கயமுக வமுது” என்றும், சரவணப் பொய்கையில் ஆறு குழவிகளாய் இருப்ப, அந்த ஆறையும் சேரக் கூட்டி ஆறு முகங்களையுடைய ஒரு திருமேனியாக உருவாக்கியது விளங்க, “அறுமுகக் கணவமுது” என்றும், அமுதை யுதவியது கடலானது கொண்டு, “உதவு கடலே” என்றும் அம்மையைத் துதிக்கின்றார். கணம் - பெருமை. மத மொழுக்குவது யானைக் கியல்பாதலால், “கரடகட கயமுகன்” என்றும், மதமொழுக்கும் யானை முகமுடையனாயினும், தூய்மை கெடாதவன் எனற்கு “விமல கயமுகன்” என்று கூறுகின்றார். தில்லையம்பதி மருவும் அண்ணலார், கூத்தப் பெருமான், உமையம்மை பச்சைநிற முடையவளாதலின், மணியென்றது, மரகத மணிக்காயிற்று. அண்டங்கள் எண்ணிறந்தவை யென்பாராயினும், அவை யனைத்தையும் அவற்றுள் வாழும் இயங்குதிணை நிலையத்தினை ஆகிய இருவகை யுயிர்களையும் படைத்தளிக்கும் பெருமாட்டியாதலால், உமையம்மையை, “அகிலாண்டமும் சராசரமும் ஈன்றருள் பரசிவானந்தவல்லி” என வுரைக்கின்றார். பரசிவத்தோடு ஒன்றி இன்ப மருளும் பராசத்தியாதலால், “பரமசிவானந்த வல்லி” எனவும், கொடியிடைப் பெண்ணாவது பற்றி, “வல்லி” எனவும் இயம்புகின்றார்.

     இதன்கண் உமாதேவியை சிவை யெனவும், பரை யெனவும், அறிவெனவும் மலவிரு ளகற்றும் பரவெளிக் காட்சியெனவும், கருணை நிறை வெனவும் உலகருள் தாயெனவும் போற்றிப் பராவியவாறாம்.

     (1)