2592. கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக்
கரிசற உணர்ந்து கேட்டுக்
காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து
கருநெறி அகன்ற பெரியோர்
பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு
புரிபவை எலாம்பு ரிந்துன்
புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும்
போதவை எலாம்அ ருளுவாய்
நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய
நிறைபவை எலாஞ்செய் நிலையே
நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும்
நித்தியா னந்த வடிவே
அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும்
அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
வானந்த வல்லி உமையே.
உரை: நிற்பன யாவும் நின் றாங்கு நிற்கவும் அசையும் பொருள்களனைத்தும் அசையவும், நிறையும் செயலுடையவை யாவும் நிறையவும் செய்கின்ற நிலைப் பொருளாகியவளும், நெஞ்சால், நினைப்பவை யனைத்தும் நிகழாமல் நெகிழ்ந்தொழிய நெறிப்பட்டவை உயர்ந்தோங்கவும் நிலைத்த இன்ப வடிவாகியவளும், அன்பு மிக்க அடியவர்கள் புகழ்கின்ற தில்லைப் பதியில் எழுந்தருளும் அண்ணலாகிய கூத்தப்பெருமான் மகிழும் மரகத மணி போல்பவளும் அனைத்தண்டங்களையும் அவற்றிலுள்ள சராசரங்ளையும் ஈன்றருள்பவளும் பரசிவனாந்த வல்லியுமாகிய உமையம்மையே, கற்றற்குரியவை யெல்லாவற்றையும் கற்று உணரத் தகுவனவனைத்தையும் குற்றமற மனத்தால் உணர்ந்து, கேட்டற்குரிய வனைத்தையும் கேட்டு, காண்டற்குரியன அனைத்தையும் கண்டு, செய்தற்குரியவை அனைத்தையும் செய்து, பிறப்புக்கேதுவாகிய நெறியினின்றும் நீங்கிய பெரியோர் கூடிய அழகிய அவைகட்குச் சென்று ஆங்கு அவர்கள் உரைப்பவை யெல்லாம் கருத்திற் கொண்டு, நான் செய்தற்குரியவற்றை யெல்லாம் செய்து, உன்னுடைய புகழ்கள் எல்லாம் சொல்லிப் புகழ்ந்து, அதனால், எய்துவன யாவும் எய்தும்போது அவை எஞ்சாமல் எய்துமாறு அருள் செய்வாயாக. எ.று.
கற்பவை - கற்றற்குரிய நூல்கள். கற்பன யாவையினும் வேண்டுவனவே நன்கு உணர்தற்குரியவாய் மனமாசு போக்கும் மாண்புடையவாமாதலின், “உணர்பவை யெலாம் மனக்கரிசற வுணர்ந்து” என்றும், அவ்வாறே கேட்பன கேட்டுக் கரிசற வேண்டும் என்றற்குக் “கேட்டு” என்றும் கூறுகின்றார். கற்றலிற் கேட்டல் மனக் கரிசு துடைத்தற்கு வாய்ப்பு மிக வுடைய தென அறிக. நுண்ணுணர்வுக்குச் செவியாற் கேட்டலேயன்றிக் கண்ணாற் காண்டலும் இன்றியமையாமையின் “காண்பன வெலாம் கண்டு” என்று உரைக்கின்றார். “கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்” மெய்ப்பா) என்று தொல்காப்பியர் கூறுவது காண்க. வாயாற் கற்றலும் செவியாற் கேட்டலும், கண்ணாற் காண்டலும் போல மெய்யாற் செய்வன செய்தலும் நல்லறிவுக்கு வாயிலாதலின், “செய்பவை யெலாம் செய்து” எனக் கூறுகின்றார். இவ்வாற்றால் நல்லறிவு பெற்றவர் பொருள்களின் உண்மையுணர்ந்து பிறவாப் பெருநெறி நின்று பெருமை எய்துவராகலின், அவர்களைக் கற்றும் கேட்டும் உணர்ந்தும் கண்டும் செய்தும் மனக் கரிசகன்று ”கருநெறி யகன்ற பெரியோர்” என மொழிகின்றார். கருநெறி - பிறவிக்குரிய நெறி. பெரியோர் கூடும் பேரவை ஞானமும் ஒழுக்கமும் நிறைந்து பொலிதலால், அதனைப் பெரியோர் பொற்பவை” என்று புகழ்கின்றார். அவரது அவைக்கண் ஞானமும் விழுப்பமும் பயப்பனவே பேசப்படுதல் தோன்ற, பொற்பவை யெலாம் சென்று புகல்பவையெலாம் கொண்டு” எனச் சொல்லுகின்றார். பொற்பவைப் பெரியோர் கூறும் விரதமும் அறமும் புரிதல் பெற்ற ஞானத்தைப் பேணுதற்குக் காப்பாய் உதவு மென்றற்குப் “புரிபவையெலாம் புரிந்து” எனப் புகல்கின்றார். பெரியோர் பேரவையில் இறைவனுடைய பொருள் நிறைந்த புகழ்கள் பலவும் பேசப்படுமாகலின், அவற்றைக் கேட்டு ஓதி யுணர்தல் நற்பயன் பலவும் உறுவிக்கும் என்றலின், “புகழவை யெலாம் புகழ்ந்து உறுபவையெலாம் யுறும்போது” எனவும் தன்னாலும் பிறவுயிர்களாலும் தெய்வத்தாலும் இடையூறுகள் போதருமாதலால், அவற்றால் தடையுறாமல் எல்லாம் குறைவின்றி எய்தத் திருவருள் துணை செய்யவேண்டும் என்பாராய், “உறும்போது அவையெலாம் அருளுவாய்” எனவும் உமாதேவியை வேண்டுகின்றார். நிற்பவை நிலையாய் நிற்பதும் நில்லாது அசையும் பொருள் அசைவதும், பள்ளம் நோக்கி நிறையும் நீர் நிறைவதும் காற்று அங்ஙனமே சென்று நிறைவதும் இயல்பாயினும் அவ்வியல்பு தானும் முட்டின்றி நிகழ்தற்கும் நிலைத்த சிவ சத்தி காரணம் என்பது பற்றி “நிற்பவை யெலாம் நிற்ப அசைபவை யெலாம் அசைய நிறைபவையெலாம் செய் நிலையே” எனக் கூறுகின்றார். இவ்வாறே உலகனைத்தும் உள்ள பொருள்கள் தத்தமக்குரிய பணிகளைத் தாந்தாமே முறையே செய்தற்கு அச்சத்தியே காரணம் என்பது விளங்கவே, “எலாம் செய் நிலையே” என்று நினைப்பிக்கின்றார். நெஞ்சின்கண் நிகழும் நல்லனவும் தீயனவுமாகிய நினைவுகள் நினைந்தவாறே நிகழுமாயின் உலகியல் வாழ்வு சீர்குலைந்து கெடும் என்பது கருதியே யாவும் நினைந்தாங்கு நிகழாமல் வேறுபட்டு நிகழ்வதும் நிகழா தொழிவதுமாக உள்ளனவாதற்கும் காரணம் அந்த அருட்சத்தியே ஏதுவாம்; அன்றியும் உலகிற்கு வேண்டுவனவும் வேண்டாதனவுமாகிய நெறிகளில் வேண்டுவன ஓங்கி நின்று இன்பப் பயன் நல்குதற்கும் அருட்சத்தி காரணமாதலை யுணர்த்தற்கு நினைபவை யெலா நெகிழ நெறியவை யெலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே” என வுரைக்கின்றார். நெகிழ்தல் - வேறுபட்டொழிதல். தானும் உடன் கலந்து ஒழுகுவது பற்றி “ஓங்குவிக்கும்” எனப் பிற வினையாற் கூறாமல் “ஓங்கும்” என்று தன் வினையாற் கூறுகின்றார். அருட்சத்தி இன்பமயமாதலின், “நித்தியானந்த வடிவே” எனப்படுகிறது. அன்புடைய அடிய ரென்பது எதுகை நயம் பற்றி, “அற்புடைய” என வந்தது. இறைவன்பாலும் அவனுறையும் இடத்தின்பாலும் உள்ள காதலால், “அன்புடைய அடியவர் புகழ் தில்லையம்பதி” என வுரைக்கின்றார்.
இதனால் எல்லா வுலகங்களும் தத்தம் ஒழுங்கும் முறையும் செயலும் திரியாமல் நின்று நிகழ்தற்கு அருட்சத்தி காரணம் என்பது அறிவிக்கப்பட்டவாறாம்.
(2)
|