2593. இக்கணம்இ ருந்தஇம் மெய்என்ற பொய்க்கூரை
இனிவரு கணப்போ திலே
இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
என்செய்கோம் இடியும் எனில்யாம்
தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
தீக்கணம் இருப்ப தென்றே
சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
திகழ் பரம சிவசத்தியே
எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
இமாசல குமாரி விமலை
இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
இருந்த ருள்தருந் தேவியே
அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
வானந்த வல்லி உமையே.
உரை: மக்கள் கணம், தேவகணம், முனிவர்கணமெனப்படும் பல்வகைக் கூட்டத்தாரும் பராவுகின்ற ஒப்பற்ற முக்கண்களையுடைய மேலான பராசக்தியே, இமயமலை வேந்தன் மகளே, விமலையே, எந்நாட்டவர்க்கும் இறைவியே, பைரவியே மலமில்லாதவளே என்று தேவங்கள் ஓதித் துதிக்க வீற்றிருந்தருளும் தேவியே; அந்தக் கண்ணுதற் கடவுளாகிய எம்பெருமானும் தில்லைப்பதியில் இருக்கும் தலைவனுமாகிய சிவபெருமான் மகிழ்கின்ற மரகத மணியே, எல்லா அண்டங்களையும் அவற்றுள் இருக்கும் சராசரங்களையும் ஈன்றளிக்கும் பரசிவானந்த வல்லியாகிய உமையம்மையே, இந்தக் கணத்தில் இருக்கின்ற உடம்பெனப்படும் பொய்வீடு இனிவரும் மறுகணத்தில் நிலைகுலைந் தழியாமல் இருக்குமோ, அழிந்துபடுமோ, இது நினைக்கின் என்ன செய்வதெனத் தெரியாமல் வருந்துகின்றோம்; அழிவதாயின் யாம் தென் திசைக்குச் செல்லும் அக்காலம் தீவாய் நரகிற் குட்புகும் பொல்லாத காலம் என மனம் நைந்து வருந்தாவாறு திருவருள் புரிந்து விளங்கும் பரம சிவசத்தியே வணங்குகிறேன். எ.று.
மக்கள் முனிவர் தேவர் எனப் பலரும் கூட்டம் கூட்டமாய் வந்து வணங்கும் முக்கண்களையுடைய பெருமாட்டியாதலால், “எக்கணமும் ஏத்தும் ஒரு முக்கனி பரம்பரை” எனப் புகழ்கின்றார். பரை - அருட்சத்தி. இமாசல குமாரி - இமயமலை வேந்தன் மகள். விமலை; அமலை என்பன உயிர்கள் போல மலத்தொடர்பு இல்லாதவள் எனப் பொருள்படும் வடசொற்கள். பைரவி-வைரவக் கடவுளாகிய சிவனுக்குத் தேவி. இருந்து அருள் தரும் தேவி - நிலையாக இருந்து உயிர்கட்கு அருள் செய்பவளான தேவி. கண்ணுதல் - சிவன். அகரம் - உலகறி சுட்டு. அண்ணலார் - தலைவர். மணி-ஈண்டு மரகத மணி மேற்று. மெய்யென்ற பொய்க் கூரை, உடம்பெனப்படும் நிலையின்றிக் கெடும் தோலாகிய கூரை வேய்ந்த வீடு. கெடுதல் - சாதல். உடம்பைக் கூரையென்றதற்கொப்ப, சாதலை இடிதல் என்று கூறுகிறார். தெக்கணம் - எமன் வீற்றிருக்கும் தென்னாடு. ஒரு காலத்தில் தென் தமிழ்நாடு கடல் கோளால் ஒருங்கு அழிந்தமையின், அதற்குக் காரணம் தென்னாட்டுறையும் எமனெனப் புராணிகர் கருதினார்; அக்கருத்தால் இறக்கும் உயிர்கள் எமன் கைப்பட்டு எரிவாய் நரகத் திடப்படுகின்றனர். என்பாராயினமையின், “தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத தீக்கணம் இருப்பது” எனவுரைக்கின்றார். இதனைக் கேட்கும் மக்கள் உள்ளம் நரகத் தீவேதனையை நினைந்து அச்சம் உறுதல்பற்றி, “சிந்தைநைந்து அயராதவண்ணம்” எனவும் அயர்ச்சி தானும் சிவத்தின் திருவருளாலல்லது நீங்காமை தேர்ந்து, “நல்லருள் தந்த திகழ் பரம சிவசத்தியே” எனவும் இயம்புகின்றார். சிவசத்தி ஞானவொளியாதலால், “திகழ் பரம சிவசத்தி” எனக் கூறுகின்றார்.
இதனால் உடம்பின் நிலையாமையும் தீநரக வேதனையும் உரைத்து இவற்றால் மனம் தளராமை தந்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம். (3)
|