2594. பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
போகாத நாளும் விடயம்
புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
புந்திதள ராத நிலையும்
எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
என்றும்மற வாத நெறியும்
இறவாத தகவும்மேற் பிறவாத கழியும்இவ்
ஏழையேற் கருள்செய் கண்டாய்
கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
கோமளத் தெய்வ மலரே
கோவாத முத்தமே குறையாத மதியமே
கோடாத மணிவி ளக்கே
ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
வானந்த வல்லி உமையே.
உரை: பறிக்கப்படுவதின்றி இதழ் குவிதலுமின்றி வாடுதலும் இல்லாமல் நறுமணம் கமழும் அழகிய தெய்வ மலர் போன்றவளே, கோக்கப்படாத முத்தே, தேய்தலில்லாத முழுமதியே, கோணுதலில்லாத மணி விளக்கே, முகம் ஐந்துகொண்டு தில்லைப்பதியின்கண் எழுந்தருளும் அண்ணலாகிய கூத்தப் பெருமான் மகிழும் மரகத மணி போன்றவளே, அண்டங்கள் அனைத்தையும் அவற்றுள் வாழும் சராசரங்களையும் படைத்தளிக்கும் பரசிவ ஆனந்தவல்லியாகிய உமையம்மையே, பொய் சொல்லாத வாயும் மயக்கம் விளைவிக்காத செய்கையும் பயனின்றிக் கழியாத வாழ்நாளும், புலன்கள் மேற்செல்லாத நன்மனமும், உள்ளத்தினின்றும் நீங்காத சாந்தப் பண்பும்; மனம் சோராத நிலைமையும், வறுமையால் தளர்வுறாத வாழ்க்கையும் இன்மைத் துன்பத்தால் குறைகளை நினைந்து வேறு வேறு நினைவுகளைக் கொள்ளாத மன நிறைவும், என்னை எந்நாளும் மறத்தலில்லாத செந்நெறியும் இறத்தலும் பிறத்தலும் இல்லாத சிவகதியும் ஏழையாகிய எனக்கு அருள் செய்வாயாக. எ.று.
பொய் மொழிதல் தன்னை யறியாமல் நிகழ்தலுண்மையின், “பொய்யாத மொழி” வேண்டுகிறார். நாளும் மெய்யே பேசும் நல்லோ, புரை தீர்ந்த நன்மை வேண்டி பொய் பேசும் இடமும் உண்டாதலினர். அதுவும் வேண்டா எனற்கு இது வேண்டுகிறார் எனினும் அமையும். விளையும் பயன் மேற் செல்லும் விருப்பு மிகுதியால், வினையுணர்வும் தானும் வேற்றத் கலந் தொன்றிச் செய்யும் மயக்க நிலை வேறு வினைகட்கு வித்தாதல் பற்றி, “மயல் செய்யாத செயல்” வேண்டும் என விளம்புகின்றார். செய்வன செய்யுமிடத்து முக்குண வயத்தால் முறை திறம்பிக் காலம் வீண் போதலையெண்ணி, “வீண் போகாத நாள்” வேண்டும் என விண்ணப்பிக்கின்றார். வீணே கழியும் நாளை, “வீழ் நாள்” என்பர் திருவள்ளுவர். உரன் இல்லாவிடத்து நெஞ்சு புலன்கள் மேற்சென்று ஆசை பிறப்பித்துத் துன்பம் செய்தலால், “விடயம் புரியாத மனம்”
வேண்டுமென வுரைக்கின்றார். பிறர் போற்றிய வழி மகிழ்ச்சியும், தூற்றிய வழித் துயருற்று வருந்து தலும் கொள்ளுதல் யாவர்க்கும் இயல்பாதலால், அவ்வாறின்றிப் போற்றுதல் தூற்றுதல் என்ற இரண்டினையும் ஒப்புக் கொண்டு நெஞ்சு நெகிழாத தன்மை “சாந்தம்” எனப்படும். “செஞ்சாந்தெறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந் தோடா நிலைமை” என இதனை விளக்குவர் பேராசியர். (தொல். பொ. மெய்) இதனை நடுநிலையென்றலும் உண்டு. திடமிக்க நெஞ்சுடையார்க்கே இந்தச் சாந்தமாகிய நிலை கை வருவதாகலின், “உட்பிரியாத சாந்தம்” எனவும், திண்மையுறுவதினும் மெலிந்து கெடல் மனத்துக்கு இயற்கையாதலால் “புந்தி தளராத நிலை” எனவும் சிறப்பித்து வேண்டுகின்றார். வறுமை எய்துமிடத்து மனத்தளர்ச்சியும் செய்வினைச் சோர்வும் தோன்றி மனத்தைக் கீழ் நிலையிற் செலுத்து மென அஞ்சுதல் தோன்ற, “எய்யாத வாழ்வு” வேண்டுமென விரும்புகிறார். குறையுற்ற மனம் அதனை நிரப்புதல் வேண்டித் தீய எண்ணங்களையும் செயல்களையும் நினைந்து தீமைக்கிரையாகுமாதலல், அதனை விலக்குதல் வேண்டி, “வேறு எண்ணாத நிறைவு” வேண்டுமென விழைகின்றார். கொய்த மலர் விரைவில் வாடிக் கெடுதலால் கொய்யாமை மலர்க்குச் சிறப்பு. தேனும் மணமும் குன்றும் போது மலரிதழ் கூம்பும் என வுணர்க. குமைதல், வாடிக் கெடுதல். மலர்ந்த வண்ணமும் பொலிவும் குன்றாமை யுணர்த்தற்குக் “குமையாது மணம் வீசு மலர்” எனக் குறிக்கின்றார். கோமளம், அழகு. தெய்வமாய் மலர் போல ஞானமணம் கமழ்வது குறித்து, தேவியை, “தெய்வமலரே” என்று புகழ்கின்றார். கோத்த முத்தம் துளை படுதலாலும், மதியம் கலை தேயுமிடத்து இருள் படிதலாலும் “கோவாத முத்தமே குறையாத மதியமே” எனப் பரவுகின்றார். குற்றமில்லாத மணியைக் “கோடாத மணி” எனக் கூறுகின்றார். ஐயானனம், ஐந்தாகிய முகம்; அவை, ஈசானம், தற்புருடம், வாமம், அகோரம். சக்தியோ சாதம் என்பன. சிவனுக்குத் திருமுகம் ஐந்து என்பர். ஐந்து முகம் கொண்ட சிவவடிவத்தை மந்திர தேகம் என்றலுமுண்டு.
இதனால் மனம் மொழி செயல்களும் சாந்தப் பண்பும் பிறப்பிறப்பில்லாத சிவகதியும் பிறவும் நல்குமாறு தேவியை வேண்டியவாறாம். (4)
|