2595. பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
பதிநிலை அணைந்து வாழப்
பகலான சகலமுடன் இரவான கேவலப்
பகையுந் தடாத படிஓர்
தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
தமியேன் நடத்த வருமோ
தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
சரணமே சரணம் அருள்வாய்
உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
உறவான முத்தர் உறவே
உருவான அருவான ஒருவான ஞானமே
உயிரான ஒளியின் உணர்வே.
அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
வானந்த வல்லி உமையே.
உரை: ஒப்பில்லாத பரசிவமாகிய தூயவெளியிற் கலந்து உறவாடுகின்ற முத்தான்மாக்களுக்கு உறவாகியவளே, உருவும் அருவுமாகிய ஒரு தனிப்பெருமை கொண்ட ஞானாம்பிகையே, உயிர்கட்குயிராய் ஒளி யுருவாகிய உணர்வானவளே, குற்றமாகிய அவமானத்தை நீக்கி அருள் புரியும் தில்லைப்பதியுள் எழுந்தருளும் அண்ணலாகிய சிவன் மகிழ்கின்ற மரகதமணியே, அண்டங்களனைத்தையும் சரசாரங்களையும் படைத் தளிக்கும் பரசிவ ஆனந்த வல்லியாகிய உமையம்மையே, எழுவகை பிறவிகளாகிய கடலைக் கடந்து மேற் கதியாகிய சிவகதியை அடைந்துவாழ்ந்தற்குப் பகல் போல் ஒளி நிலவும் சகலாவத்தையுடன் இருள் சூழ்ந்த கேவலாவத்தை யாகிய பகைமைச் சூழ்நிலையால் தடையுறாத வண்ணம் தவமாகிய ஒரு மரக்கல மேறி திருவருளாகிய மாலுமியா லன்றி எளியனாகிய யான் அக்கடலைக் கடக்க இயலாது; தானாகவும் கடத்தலாகாது; யான் யாது செய்வேன்; திருவடியால் துணை புரிவாயாக. எ.று.
பிறப்பு வகை ஏழாய் ஆழ்கடல் போல் நீந்தல் அரிதாய் உள்ளமையின், “பவமான எழுகடல்” எனவுரைக்கின்றார். பிறவாப் பெருவாழ்வுக் கிடமாவது சிவகதியாகலின், அதனை “மேற்கதியான பதிநிலை” எனக் கூறுகின்றார். அதனைச் சுத்த நிலையெனச் சைவநூல்கள் உரைக்கின்றன. அதனைப் பெறுதற்குரிய ஆன்மாக்கள் ஆணவ விருள் சூழ்ந்து இருட்டறையிற் கிடக்கும் குருட்டுக் குழவி போல் செயலற்றுக் கிடந்து திருவருளால் ஒளியுடைய மாயா காரியமான உலகுகளில் உடல் கருவி காரணங்களோடு கூடி மனமொழி மெய்களைக் கொண்டு நற்றவம் புரிந்து அடைவது பற்றி ”பகலானசக முடஇரவான கேவலப் பகையும் தடாதபடி” எனவுரைக்கின்றார். ஆணவ விருளிற் கிடப்பது கேவலம் எனவும், உலகுடல் கரணங்களோடு கூடுவது சகலம் எனவும் வழங்கும். சகலநிலையும் உலகுடல்கள் தரும் போகத்திற் படிந்து உயிர்கள் சுத்தநிலை பெறாது பிறப்புச் சூழலிற் சிக்கி அலமருதற் கேதுவாகலின் “பகை” யென இசைக்கின்றார். சகலத்தில் உயிர் உல்குடல்களுடன் கூடியுணர்வு விளங்கப் பெறுதலால், “பகலான சகலம்” என்கின்றார். சுத்த நிலை பெறுங் காறும் கேவல சகலங்களிற் புகுந்து தடுமாறுவது பற்றி, இரண்டினையும் பகை யெனவும் இரவு பகல் எனவும் விளம்புகிறார். சிவப் பேறு குறித்துச் செய்யும் தவமன்றி வேறு செய்வகை யில்லாமையால், “தவமான கலன்” எனவும், சகலத்திற் புகுந்த உயிர் பிறவியாகிய கடலைக் கடந்தாலன்றிச் சுத்த நிலையாகிய சிவகதியை யடைதல் கூடாமையால், கடத்தற் கமைந்த மரக்கலம் தவமாதல் விளங்கத் “தவமான கலன்” எனவும், அக்கலத்தை இனிது செலுத்துவது திருவருள் என்பார். “அருள் மீகாமனால் அலது” எனவும் இயம்புகின்றார். திருவருள் ஞானமின்றி உயிரறிவாகிய பசுபாச ஞானங்கள் துணையாகாமை பற்றி, “தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என்செய்கேன்” என எண்ணி வருந்துகின்றார். திருவடி ஞானமே திருவருள் ஞானமாவது கொண்டு “நின் திருச் சரணமே சரணம் அருள்வாய்” என வேண்டுகின்றார். “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்” (ஞானசம்) எனச் சேக்கிழாரடிகள் தெரிவிப்பது காண்க. கேவல சகலம் கடந்த சுத்தாவத்தை யெய்தியவர் முத்தான்மாக்களாதலின், அவரோடு உறவாடுவது தோன்ற, “உவமான மற்ற பரசிவமான சுத்தவெளி யுறவான முத்தர் உறவே” என உரைக்கின்றார். சிவத்துக்கு ஒப்பதும் உயர்ந்ததும் இல்லாமையினால், “உவமான மற்ற பரசிவம்” என்றும், சுத்த மாயையிலுள்ள சிவதத்துவத்துக்கு மேலே மாயா மண்டலத்துக்கு அப்புறத்தே மேலேயுள்ள சிவத்தைப் “பரசிவம்” என்றும், அது திகழும் நிலை “பரசிவ வெளி” யென்றும், சுத்தாவத்தை யுறும் தூய ஆன்மாக்கட் குரியதாகலின், “சுத்த வெளியுறவான முத்தர் உறவே” என்றும் விளக்குகின்றார். அருவம் உருவம் அருவுருவமாகும் அருட்சத்தி ஞானமேயாதலால், “உருவான அருவான ஞானமே” எனவும், அதனின் மிக்க ஞான மின்மை பற்றி “ஒருவான ஞானமே” எனவும் இசைக்கின்றார். வான் - பெருமை. உயிர்க்குயிராய் உணர்வு வடிவில் ஒளி நல்குவதால் திருவருட் சத்தியாகிய உமையம்மையை, “உயிரான ஒளியி னுணர்வே” எனக் கூறுகின்றார். “அவமானம், குற்ற வகையுள் ஒன்றான மானம் கீழ்மை எய்துவித்தலால், அதனை அவமானம்” எனக் குறிக்கின்றார்.
இதனால், சுத்தாவத்தை யுற்றுச் சிவகதி பெறுதற்கு அருள் நல்குக என உமாதேவியை வேண்டியவாறாம். (5)
|