2596.

     சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
          சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
     துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
          சும்மா இருத்தி என்றால்
     காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
          கண்டிலேன் அம்மம் மஓர்
     கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
          கறங்கெ னச்சுழல் கின்றதே
     தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
          தாழ்பிறவி தன்னில் அதுதான்
     தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
          தமிய னேன்என் செய்குவேன்
     ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
          அண்ணலார் மகிழும் மணியே
     அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
          வானந்த வல்லி உமையே.

உரை:

      ஆத்திமாலை யணிந்த சடையையுடையவரும் தில்லைப்பதியில் எழுந்தருளும் அண்ணலுமாகிய கூத்தப் பெருமான் மகிழும் மரகத மணியே, அண்டங்களனைத்தையும் அவற்றிலுள்ள சராசரங்களையும் படைத்தளிக்கும் பரசிவானந்த வல்லியாகிய உமையம்மையே, பேயின் இயல்பு கொண்டு என்னோடு போர் தொடுத்து அலைக்கும் மனத்தை இன்சொற்களால் விருப்புடன் தழுவி நன்மை பொருந்திய மோனம் எனப்படும் நல்ல அமுதை யுண்டு சும்மா இரு என்று சொன்னால், கேளாமல் இருள்பட்டுக் கணநேரமும் நில்லாமல் பொல்லாததாய் உலகியலிற் காற்றாடி போலச் சுழல்கிறனது; இதற்கு முன் யாவர் கொடுத்த சாபத்தால் விளைந்ததோ, அறியேன்; கொன்றை மாலையை மார்பிலணிந்த நினது திருவருளாகிய சிறப்பை நல்காயாயின், அம் மனம் கீழான பிறவிகளில் தன்னை வீழ்த்திக் கொள்வதன்றி என்னையும் வீழ்த்து வருத்துமாதலால் அருட்டுணையின்றித் தனித்த யான் யாது செய்வேன். எ.று.

     ஆர் - ஆத்திமலர். ஆரும் கொன்றையும் சிவனுக்கு உகந்த மலர் வகையாகும். சூர் - பேய். Êசூர் - நடை, ஈண்டுப் பேய்த் தன்மை மேற்று. போரிட்ட மனது - போராடுகின்ற மனம். மனசென்னும் வடசொல் மனதென வந்தது. இட்டம் - இஷ்டம். துன்றுதல் - செறிதல். நன்றிட்ட அமுது - நல்ல அமுது. அமுதுண்ட வழி அமைதி தோன்றுவது பற்றி, “நன்றிட்ட அமுதுண்டு சும்மா இருத்தி” என வுரைக்கின்றார். கார், இருள் - மடமை. சும்மா இரு என்றால் இராமல் அலைந்தவண்ணமிருப்பதால், “காரிட்டு” எனவும்; “ஓர் கணமும் நில்லாது கறங்கெனச் சுழல்கின்றதே” எனவும் கூறுகின்றார். தன்னியல்பில் இனிதிருக்க வேண்டிய மனம் சுழன்றுழல்வதற்குக் காரணம் அறியாமையால், “இதற்குமுன் யார் இட்ட சாபமோ” என வுரைக்கின்றார். ஆற்றாமை மிகுதி பற்றி “அம்மம்ம” என்கிறார். இமைப்போதும் நிலையின்றி அலைவதும் தீங்கு வருவிப்பதும் நோக்கி. “பொல்லாது” என மொழிகின்றார். கறங்கு - காற்றாடி. தார் - அடையாள மாலை; சிவனுக்குக் கொன்றை மாலை - அடையாளம். திருவருள் எல்லாச் சிறப்புகட்கும் முதலாதலால் “அருட்சீர்” எனக் குறிக்கின்றார். திருவருள் அறிவு விளக்கமும் நற்செயற் பண்பும் நல்கி உயர் பிறப் பெய்துவித்தலால், அருட்சீர் இட்டிடாயெனில் தாழ் பிறவி தன்னில் வீழ்த்தும்” என விளம்புகிறார். திருவருள் நிறைவும் சாந்தமும் இல்லாவிடில் தீவினைகள் தோன்றிச் செய்விக்கும் மனத்தையும் அதனையுடைய என்னையும் கீழ்மைப் பிறவிகளில் தள்ளி வருத்தும் என்பாராய்; “அதுதான் தன்னை வீழ்த்துவதன்றி என்னையும் வீழ்த்தும்” எனச் சொல்லுகின்றார். தமித்தல் - திருவருள் துணையின்றித் தனித்திருத்தல். திருவருள் துணையின்றி எதனையும் செய்ய மாட்டாமை பற்றி “என் செய்குவேன்” என இயம்புகின்றார்.

     இதனால், நிலையின்றிக் கறங்கெனச் சுழலும் மனத்தின் கொடுமையைக் கூறித் திருவருளை வேண்டியவாறாம்.

     (6)