4
4. ஆனந்த நடனப் பதிகம்
தில்லையம்பலத்தில் கூத்தப் பெருமான் புரியும் திருநடனத்தை,
நினைந்துப் பன்னிரண்டு சீர் கொண்ட விருத்தப் பாக்களால் பாடிப் பரவும் பதிகமாதலால் இஃது
ஆனந்த நடனப் பதிகம் எனப்படுகிறது. உலகியல் நடனக் காட்சி நடம் புரிவோர்க்கும் அதனைத் காண்போர்க்கும்
இன்பம் செய்வது; தில்லைக் கூத்தன் இன்ப வுருவினனாதலால், அவனது திருநடனம் கண்டு மகிழும் ஆன்மாக்கட்கே
இன்பம் செய்வதாகும். “அகளத்தில் ஆனந்தத் தானந்தி” எனத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார்
பரசிவத்தின் இன்ப நிலையைக் குறிப்பர். அகளத்து ஆனந்தம் சகளத்தும் நீங்காமையின், கூத்தப்
பிரானாகச் சகளத் திருமேனி கொண்டு சிவபெருமான் தில்லையிலாடும் திருக்கூத்து இன்பவுருவும் காண்பார்க்கு
இன்பப் பேறு எய்துவிக்கும் அருணிலை யுமுடையதாம் ஆவது பற்றி, திருக்கூத்தாடும் பெருமானை “ஆனந்த
நடன மணியே” என வள்ளற் பெருமான் பாராட்டிப் போற்றுகின்றார்.
இப்பதிகத்தின்கண், வேதங்களாலும் உணரப்படாத சிவத்தின் அருமையும் பல்வகையாகப் புனைந்து
பரவுதலும், சிவஞான சிவபோகங்களைப் பெற விழைதலும், திருவடிக் காட்சி ஞானமும் வீடு பேறும்
தருமென்பதும், சுத்தான்மாக்கள் பெறும் சிவபோகானுபமும், சிவனது ஆட்டத்தில் அணிந்த மாலை முதல்
சிவ குமரர் ஈறாக ஆடும் திறமும் திருவடிக் குரியனாக்குமாறு வேண்டுதலும், வோதந்தம் கூறும் பரமார்த்தத்தை
விளங்குவிக்க வேண்டுதலும் பரசிவ நிலை முதல் சிவமூர்த்தங்காறும் எடுத்தோதலும் பிறவும் காணப்படுகின்றன.
பன்னிருசீர்க் கழிநெடிலடி
யாசிரிய விருத்தம்
2601. பரசிவா னந்தபரி பூரண சதானந்த
பாவனா தீதமுக்த
பரமகை வலயசை தன்யநிஷ் களபூத
பௌதிகா தார யுக்த
சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய
சாம்பவ விநாசரகித
சாஸ்வத புராதர நிராதர அபேதவா
சாமகோ சரநிரூபா
துருவகரு ணாகர நிரந்தர துரந்தர
சுகோதய பதித்வநிமல
சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ
சோமசே கரசொரூபா
அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட்
டணுவளவும் அறிகிலாத
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
ஆனந்த நடனமணியே.
உரை: பரசிவமாகிய இன்பமே; குறைவற நிறைந்த நிலையான இன்பமே; பாவனைக்கு அப்பாலாகிய முத்தனே, மேலாய்க் கைவரப் பெறும் ஞானப் பொருளே; நிட்கள வடிவுடையவனே; பூதங்களையும் அவற்றாலான பொருள்களையுமுறைப்பட இயக்குபவனே; பொருத்தமான எல்லா வகையான மங்கள ருண வடிவினை யுடையவனே; சத்தும் சித்தும் ஆனந்தமுமாகி உருவுடையவனே; நற்செல்வ முடைய சிவசாம்ப மூர்த்தியே; கேடில்லாதவனே; நிலைத்த தேகிகட்கு அன்பனே; தனக்கோர் ஆதார மில்லாதவனே; பொருள்களில் வேறறக் கலந்து வாக்கிற் கெட்டாமலிருப்பவனே; ஒருருவு மில்லாதவனே; நிலையான கருணைக்கு இடமானவனே; என்றும் உள்ளவனே; எப்பொருளையும் தாங்குபவனே; இன்பம் அருளும் தலைமையையுடைய நின்மலனே; தூய நித்தியமான காண்பதற்குரிய அனுபவப் பொருளே; கீழாய் யாவரும் அனுபவிக்கத்தக்க ஞான வடிவனே; சந்திரனை முடியிற் கொண்ட திருமேனியைக் கொண்டவனே; அரனே, சிவாய நம என்றெல்லாம் வேதங்கள் முறையிட்டோதியும் அணுத்துணையும் தன்மை சிறிதும் அறிய மாட்டாத அற்புதனே, சிதாகாச மெனப்படும் ஞானத் திருவம்பலத்தில் இன்பத் திருக்கூத்தாடும் மாணிக்க மணி போல்பவனே, வணக்கம். எ.று.
தத்துவத் தொகுதிகட்கு அப்பாலதாய் இன்ப மயமாய் இலங்குவது பற்றி மேலான சிவபரம் பொருளை, “பரசிவானந்த” எனவும், சிவானந்தம் குறைவற நிறைந்திருப்பது விளங்கப் “பரிபூரண சதானந்தம்” எனவும் வேதங்கள் ஓதுகின்றன. சதானந்தம் - நிலையின்றிக் கெடும் இன்பம் போலாது எய்தியது என்றும் குன்றாத இயல்பினதாகலின், “சதானந்தம்” எனச் சிறப்பிக்கின்றன. பாவனா தீதம் - பாவனை யெல்லைக்கு அப்பாற்பட்டது. பாவனை - மனத்தால் எண்ணுதல். முத்தன் - முத்திக்குரிய ஞானவின்ப வுருவாய் முத்திப் பேற்றுக்குரிய ஆன்மாக்கட்கு அதனை நல்குபவன். “முத்தா முத்தி தரவல்ல முகிழ் மென்முலையா ளுமைபங்கா” (ஆலங்) என நம்பியாரூரரும், “மூத்தனே முதல்வா” (அருட்) என மணிவாசகரும் ஓதுவது காண்க; இதனை வடமொழியில் முக்தியென்றலின், முத்தி முதல்வனை “முக்த” என்றலும் உண்டு. கைவரப் பெறுவது கைவல்யம் என வழங்கும். பெறற்கு அரிதாய பொருளெனற்குப் “ பரம கைவல்யம்” எனவும், அறிவுருவாயதனை வடமொழி சைதன்யம் என்றலால், சிவனை, “சைதன்ய” எனவும் கூறுகிறார். நிட்களம் -தேகமில்லாதது; உருவில்லாத தென்றுமாம். நிலம் நீர் என வழங்கும் ஐந்தும் பூதம் எனப்படுதலால், அவற்றால் ஆகியும் அவற்றின் தொடர்புமுடைய அனைத்தையும் “பௌதிகம்” என்பர். பூதங்கட்கும் பௌதிகங்கட்கும் ஆதாரமாய் முறைப்படி இயங்கச் செய்யும் தலைவனாதலால் “பூதபௌதிகாதார” எனப் புகழ்கின்றது வேதம்; இங்கு வேத மென்பது பல தெய்வக் கோட்பாடுடைய இருக்கு முதலிய வேதங்களன்று; ஞான நூல் என்று பொருள் கொள்ளல் வேண்டும். யுக்தம் - பொருத்தமானது; அறிவுக்கு ஒப்பது. மனை வாழ்வுக்குரிய மாண்புகள் பலவும் மங்கலமாதல் உலகுயிர் வாழ்க்கைக் குரிய ஞான நலமனைத்தும் திரண்ட உருவாய்ச் சிவம் அமைந்திருப்பதுபற்றிச் சான்றோர் “யுக்த சர்வ மங்கள” என்று உரைக்கின்றனர். தோற்றக் கேடின்றிச் சத்தாயும், மறப்பு மறைப்பற்ற அறிவாதலால் சித்தாயும், குன்றலும் பொன்றலுமில்லாத இன்ப வுருவாதலால் ஆனந்த மாயும் இருப்பது பற்றி, “சச்சிதானந்த“ என வேதம் பரவுகிறது. சுபசௌக்கியம் - சௌபாக்கியம். சிவசம்பந்தமாகியது சாம்பவம். சிவ சம்பந்தமான மூர்த்தமனைத்தும் அடங்க, “சாம்பவ” எனக் கூறுகிறது. விநாசம் - பற்றறக் கெடுதல். ஒரு காலத்தும் ஒரு சிறிதும் அழிதலில்லாத வனாதலால், சிவனை, “வினாசரகித” எனவுரைக்கின்றார். ரகிதன் - இல்லாதவன். புரம் - தேகம். அருவம் உருவம் அருவுருவம் என்ற மூவகையையும் என்றும் உடையனாதலால் “சாஸ்வத புராதர” என வேதம் புகல்கின்றது. தன்னை ஒழிந்தவை யனைத்துக்கும் தான் ஆதாரமாவ தன்றி தனக்கு ஓர் ஆதாரமு மில்லாதவன் என்பது கொண்டு “நிராதர” எனவும், தன்னின் வேறாய உலகுயிர்களோடு ஓன்றாயும் உடனாயும் கலந்து நிற்பதால், “அபேத” எனவும் வேதங்கள் போற்றுகின்றன. வாசா மகோ சரம் - சொல்லும் எல்லைக்கு அப்பாற்பட்டது. தனக்கெனத் தனி யுருவம் இல்லாமை விளங்க, “நிரூபா” எனக் குறிக்கின்றார். துருவம் - உயர்வு; அசை வின்மையுமாம். நிரந்தரன் - என்றும் உள்ளவன். துரந்தரன் - காப்பவன். சுகம் எனப்படும் அனைத்தும் தோன்று மிடமாவது பற்றி இறைவனைச் “சுகோதயம்” என்கின்றார். பதித்துவம் - பதியாம் தன்மை. பரோட்சானுபவம் -கண்கண்ட அனுபவம். அபரோட்சானுபவம் - பொறி புலன்களால் கண்டறியப் படாத அனுபவம். சந்திரசேகர மூர்த்தியைச் சோமசேகர சொரூபம் என்று கூறுகின்றன. பரசிவானந்த என்பது முதல் சிவாய நம என்பது ஈறாக உரைப்பன மறையுறைக்கும் மொழிகள் என்றற்கு மறை “ஓலமிட்டு” எனவும், மறை வல்லவராலும் சிறிதும் அறியப்படாமை விளங்க, “அணுவளவும் அறிகிலாத அற்புத” எனவும் இயம்புகின்றார். ஞானாகாசம் என்ற பொருளில் சிற்றம்பலத்தைச் சிதாகாசம் என்பர். தில்லையம்பலத்தில் கூத்தப் பெருமான் ஞான நாடகம் புரிகின்றான் என்பது பற்றி, “ஞான அம்பலம்” என்றும், அத் திருக்கூத்தே ஆன்மாக்கள் பெறும் ஆனந்த மனைத்துக்கும் மூல காரணமாதலால் சிவபெருமானை “ஆனந்த நடன மணியே” என்றும் இயம்புகின்றார். மாணிக்க மணியின் நிற முடைமையால், கூத்தப் பெருமானை “நடன மணியே” என்று நவில்கின்றார்.
இதனால், வேதங்கள் பலப்பல வோதினும், அவற்றால் உணரப்படாத சிவனது அருமை யுரைத்தவாறாம். (1)
|