2603.

     தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
          செய்யுமதி வேணியாட
     செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
          சிறந்தாட வேகரத்தில்
     மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
          வானாதி தேவராட
     மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமா
          மால்பிரம னாடஉண்மை
     ஞானஅறி வமளர்தின மாடஉல கன்னையாம்
          நங்கைசிவ காமியாட
     நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
          நந்திமறை யோர்களாட
     ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
          ஆறுமுக னாடமகிழ்வாய்
     அற்புத சிதாகார மானஅம் பலபாடும்
          ஆனந்த நடனமணியே

உரை:

      தேன் நிறைந்த, பசும் பொன்னின் நிறமுடைய, கொன்றை மாலை யாடவும், காண்பார் மனத்தைக் கவரும் அழகிய பிறைமதி தங்கிய சடைகள் நாற்றிசையும் ஆடவும், முறுக்கப்பட்ட முப்புரி நூல் மார்பிற் கிடந்து ஆடவும், இடையில் வரிகளையுடைய தோலாடை மிக்குற்று ஆடவும், கையில் ஏந்தப்படுகின்ற மான் தலை நிமிர்ந்து ஆடவும், ஒரு கையில் மழுப்படை யுயர்ந்து ஆடவும், இந்திரன் முதலிய தேவர்கள் கண்டு களி கூர்ந்தாடவும், பெரிய முனிவர்களும், நாகர்களும், கின்னரர் விஞ்சையர் முதலியோர்களும் ஒருபால் ஆட, ஒருபால் திருமாலும் பிரமனும் பிறரும் ஆடவும், உண்மை ஞான நெறி நிற்கும் மெய்யுணர்ந்தோர் நாளும் ஆடவும், உலகிற்குத் தாயாகிய நங்கை சிவகாமி ஆடவும்; குரங்களோடு முசுக்கலையை யொக்கும் மனமும் ஒரு பக்கம் ஆடல் நயந்து ஒருபால் ஆடவும், நந்தியம் பெருமானும் வேதமோதும் வேதியரும் ஒரு மருங்கில் ஆடவும், ஓரிடத்தே யானைமுகப் பெருமான் ஆட, பிறிதோரிடத்தே மயிலூர்ந்து விளையாடும் முருகப் பெருமான் ஆடக் கண்டு, அற்புத சிதாகாச ஞான அம்பலத்திலாடும் ஆனந்த நடன மணியாகிய நீ மகிழ்வாய். எ.று.

          தேன் பொருந்தி யிருப்பதால் பசுமை குன்றாமை பற்றிப் பசுங் கொன்றையென்றாரேனும், மலரிதழ் பசும் பொன்னின் நிறம் உடைமை புலப்படப் பசுங்கொன்றையளன்றார் என்பது கருத்தாகக் கொள்க. “கார் விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்” (அகம். கட) எனச் சான்றோர் உரைப்பது காண்க. கவின், காண்பார் கண் கவரும் அழகு. சிவன் ஆடுமிடத்து அவன் சடையில் அணிந்த பிறைமதியும் உடனாடல் தோன்றக் “கவின் செய்யும் மதியாட” என்று கூறுகின்றார. வேணி - சடை. நாற்றிசையும் பரந்தாடல் விளங்க, “வேணியாட” எனப் பொதுப்படவுரைக்கின்றார். முப்புரிநூல் கையால் திரிக்கப்பறிவதாகலின், “செய்யும் முப்புரி நூல்” எனப்படுகிறது. இதனை “ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞான்” (முருகு) என நக்கீரர் நவில்வர். நடு, இடை. புலித்தோலை இடையில் உடுத்தலின் “நடுவரி - யுரி சிறந்தாட” எனப் புகழ்கின்றார். வரியுரி, வரிகளையுடைய புலித்தோல். கையுல் இருந்து முழங்கும் மானை “கரத்தில் மான் நிமிர்ந்தாட” எனக் கூறுகிறார். மழு - கோடரி, வாளென்றலு முண்டு. “ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்” (ஓத்தூர்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. மகவான், இந்திரன். இந்திரன் முதலாய தேவர்களை மகவானாதி தேவர் என்பது வடநூன் மரபு. உரகர் - நாகர்; நாகத்தை வழிபடும் இனத்தவர்; நாக நாட்டினர் எனக் கருதுபவரும் உண்டு. கீழேழு புவனங்களில் நாக புவனத்தவர் என்று புராணிகர் உரைப்பர். விஞ்சையர் - வித்நியாதரர், விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலுள்ளது வித்தியாதர ருலகு; அவர்கள் வானத்திற் பறந்தேகும் இயல்பினர் என்பர். புத்தர் முதலியோர் வேறு கூறுவர். ஞான அறிவாளர், ஞான நூல்களைப் பயின்று அவற்றின் நெறி நிற்கும் மெய்யறிஞர். எந்நாளும் தம்முடைய மனத்தின்கண் இறைவனாடும் ஞான நாடகத்தைக் கண்டு மகிழ்பவ ரென்பது பற்றி, “உண்மை ஞான வறிவாளர் தினமாட” எனக் கூறுகிறார். பாரத வருடம், பரதக் கண்டம் என்பன போல கின்னர வருடம், கிம்புருட வருடம் எனப் பல வருடங்கள் ஆகமங்களிலும் புராணங்களிலும் கூறப்படுதலால் ஆங்காங்கு வாழ்வாரைக் கின்னரர். கிம்புருடர் எனக் கிளந்து கூறுவர். நங்கை சிவகாமி, பெண்களிற் சிறந்தவளான சிவகாமி; தில்லைச் சிவபெருமானுக்குத் தேவி. நாகம் - குரங்கு - ஊகம், கருங்குரங்கு; இது முசுக்கலை எனவும் வழங்கும். “மாமுக முசுக்கலை” (முருகு) என நக்கீரர் குறிப்பது காண்க. குரங்கும் முசுவும் போல்வ தென்றற்கு, “நாகமுடன் ஊகமனம்” என வுரைக்கின்றார். நந்தி, நந்தி யெம்பெருமானாகிய சிவகணத் தலைவர். மறையோர் -வேதமோதும் கணநாதர். சி்வலோகத்திலிருந்து இருக்கு முதலிய வேதங்களில் கீழ்மைப் படுத்தும் மண்டில மந்திரங்களை யோதிப் பல தெய்வக் கோட்பாடும் பேராசையும் உற்று மண்ணுலகில் செல்வமுடைய அரசர் வணிகர் முதலியோர்க்கு தூதரும் புரோகிதருமாய்ச் சுமார்த்த ராயினர் எனப் புராணிகர் உரைக்கின்றனர்.

      இதனால், தன் திருமேனியிலுள்ள மாலை முதலியன ஆடுவதையும் புறத்தே சிவ கணங்களும் தேவர்களும் யானைமுகன், அறுமுகன் என்ற சிவகுமரர்களும் ஆடுவதையும் கண்டு கூத்தப் பெருமான் மகிழும் திறம் கூறியவாறாம்.

     (3)