2604.

     பொய்யான வாள்க்கையினை மெய்யாக நம்பிவீண்
          போக்நிநன் னாளைமடவார்
     போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
          பொன்னடிக் கானமணியைச்
     செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
          செய்வதறி யேன்ஏழையேன்
     சேய்செய்த பிழையெல்லாம் தாய்பொறுப் பதுபோல்
          சிந்தையில் எண்ணிடாயோ
     மெய்யன நிலைபெறக் கையா லணைத்தருள
          வேண்டுமறை யாகமத்தின்
     மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்
          மேதையர்கள் பரவிவாழ்த்தும்
     ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
          வம்புலியு மாடமுடிமேல்
     அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
          ஆனந்த நடனமணியே.

உரை:

      வேதங்களிலும் ஆகமங்களிலும் கூறப்படும் மெய்ப் பொருள்களில் மேன்மை யுடையதாகப் போற்றப்படும் சுத்த சன்மார்க்க நெறியினின்று பெறும் அனுபவம் நிறைந்த சாந்த ஞானிகள் துதித்துப் போற்றுகின்ற சத்தியோ சாத முதலிய முகம் ஐந்து கொண்ட சிவனாகிய தெய்வமே, கங்கையும் பாம்பும் பிறைமதியும் முடியின்கண் ஆட அற்புத சிதாகாச ஞான மன்றில் ஆடுகின்ற ஆனந்த நடன மணியே, பொய்யாய் மறைந்தொழியும் உலகியல் வாழ்க்கையை மெய்யாய் நிலையாய தென எண்ணி வீணாக நன்கு புரியும் நாட்களைப் போக்கி, மகளிர் தரும் சிற்றின்பமே பெரிதென்று விழைந்து உண்மையறிவை இழந்து நின்னுடைய பொன் போன்றழகிய திருவடிக்குரிய பணிகளைச் செய்யாமல் ஒழிந்த பாவியாகியவன் யான்; என்னை நீ கை விடுவாயாயின், செய்யத்தக்கது இதுவென அறிய மாட்டாத அறிவிலியாவேன்; பெற்ற குழந்தையின் பிழையனைத்தையும் தாய் அன்பாற் பொறுத்தாள்வது போல நின் திருவுள்ளத்தில் என்னையும் ஆண்டருள வேண்டுகிறேன்; மெய்ம்மை சான்ற சிவஞான நிலையினை யான் பெறுதற்கு நின் திருவருளாகிய கையால் எடுத்தணைத்து அருள் புரிய வேண்டுகிறேன். எ.று.

          சன்மார்க்கம் - சத்தாகிய பொருளைப் பெறற்குமுயன் றொழுகும் நெறி. சித்மயம் சின்மயம் என வருதல் போலச் சத்மார்க்கம் சன்மார்க்கம் என வந்தது. நிலையில்லாத பொருளறிவும், அதனைப் பெற முயலும் நெறியும் சன்மார்க்கத்துக்கு மாறாய மார்க்கமாகும். மார்க்கம் - வழி; நெறியுமாம். நிலையாய பொருள் சிவமென்ற ஒன்றே யென்றுணர்ந்து அது பரந்து உலகுயிர் முழுதும் நிறைந்து ஒன்றின்பாலும் வேற்றுமை யின்றி ஒருமையுற நிற்பதறிந்து உள்ளத்திற் கொண்டு எப்பொருள்பாலும் எவ்வுயிர்பாலும் அன்பு செய்தொழுகுவது சன்மார்க்கம். “கருணை யொன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்முயிர் போற் கண்டு ஞானத் தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற பொருள் நெறி; சற்குண சாந்தப் புண்ணியர்தம் திருவாயால் புகன்ற வார்த்தை, அருணெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகளென்றறை வராலோ” (5298) என வள்ளற் பெருமான் பிறிதோரிடத்திற் பிறங்க வுரைக்கின்றார்; மற்றோரிடத்தே, “ஒன்றே சிவமென்றுணர்ந்திவ் வுலகமெலாம், நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே, நடம் புரியும் பாத நளினமலர்க் குள்ளம், இடம் புரிக வாழ்க இசைந்து” (5615) எனச் சன்மார்க்கம் இதுவென இனிது விளக்குகின்றார். இது சைவ சன்மார்க்கத்தின் உயிர்ப் பொருளாதலை வற்புறுத்தவே திருமூலர் திருமந்திரமும் திருநாவுக்கரசரின் திருவருட் பாட்டுக்களும் முன்னமே தோன்றின; இச் சன்மார்க்க நெறியை வடித் துரைக்கலுற்ற அருணந்தி சிவனார், “சன்மார்க்கம் சகல கலை புராண வேத, சாத்திரங்கள் சமயங்கள் தாம் பலவு முணர்ந்து, பன்மார்க்கப் பொருள் பலவும் கீழாக மேலாம், பதி பசு பாசம் தெரித்துப் பரசிவனைக் காட்டும்” (சிவ. சித்தி. 8 : 22) என வுரைக்கின்றார். சன்மார்க்கத்துக்கு இடையூறாகக் கேடு செய்வது சமய வெறியாதலின், அதனைப் பழிக்க லுற்று “எத்திசையில் உள்ளவரும் வந்தே உவகை யுறுக மதத்துள்ளல் ஒழிக தொலைத்து” (5614) என்று கூறுகின்றார். உண்மைச் சமய வேத ஆகமங்களனைத்தும் ஒப்ப முடிந்த தொன்றாதலின், “மறை யாகமத்தின் மேலான சுத்த சன்மார்க்கம்” எனவும், சமயக் காழ்ப்பின்றி அன்புள்ளத்துடன் உண்மை கண்டு ஒளியும் இன்பமும் பெறும் மனநிலை “சுத்த சன்மார்க்க அனுபவம்” எனவும், அந்த அனுபவம் தெளிவுடைய ஞானிகளின் சிந்தைக்குச் சாந்தம் வழங்குதலின், “அனுபவ சாந்த மேதையர்கள்” எனவும், அவர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவாய் ஒன்றாய் நிலை பேறுடையதாய் விளங்குவது சிவமாதலைத் தேர்ந்து செயற்பலாது வழிபாடெனக் கொள்ளுதல்பற்றி, “மேதையர்கள் பரவி வாழ்த்தும் ஐயானனம் கொண்ட தெய்வமே” எனவும் விரித்துரைக்கின்றார். சத்தியோ சாதம், தற்புருடம், அகோரம், ஈசானம், வாமம் என முகம் ஐந்தாதலால், “ஐயானனம் கொண்ட தெய்வமே” எனக் கூறுகின்றார். முகம் கை கால் முதலிய வுறுப்புக் கூற நிற்பதால் சிவத்தைத் “தெய்வமே” எனக் குறிக்கின்றார். ஒருநாளைக் கிருப்பது மறுநாள் கெட்டு மறைதல் பற்றி, “பொய்யான வாழ்க்கை” என்றும், இதனால் மெய்யெனக் கருத இடமில்லா தொழிதலின், “மெய்யாக நம்பி” என்றும், இவ்வாறே நாள்தோறும் நலம் இன்றிக் கழிதலைக் கண்டு உற்ற வெறுப்பினால், “வீண் போக்கி” என்றும், வீண் போக்குவது நாள் அன்மையால் “நன்னாள்” என்றும் நவில்கின்றார். வீண் போக்குவது எங்ஙனம் என்பதை விளக்கற்கு, “மடவார் போகமே பெரிதெனக் கொண்டு அறிவழிந்து” என இயம்புகின்றார். வீணே கழியும் நாளை நன்னாளாக்கும் திறம் இது வென்றற்குப் “பொன்னடிக் கானபணி” என்றும், அது செய்யாமை பாவம் எனக் காட்டற்குப் “பணியைச் செய்யாத பாவியேன்” என்றும், பாவத்தால் அறிவு மறைப்புண்டமையால், நீ அருளாற் கைகொடுத்தா லன்றிச் செய்யத்தக்கது அறியேன் என்பாராய், “என்னை நீ கைவிடில் செய்வ தறியேன்” என்றும், “ஏழையேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். ஏழை - போதிய அறிவில்லாதவன். சேயின் பிழையைத் தாய் பொறுப்பது போல் என்னையும் சேயாக எண்ணித் தாயன்பு செய்தருள்க என்பார், “சேய் செய்த பிழை யெலாம் தாய் பொறுப்பது போலச் சிந்தைதனில் எண்ணிடாயோ” என வுரைக்கின்றார். மெய்யான நிலை, அந்தமில் இன்பத்து மெய்ஞ்ஞான போக நிலை. அன்புடையார் அன்பால் அணைப்பது போல் அருளாதரவு நல்க வேண்டும்” என்பாராய், “மெய்யான நிலை பெறக் கையால் அணைத்தருள வேண்டும்” என்று முறையிடுகின்றார்.

      இதனால் அழிவில்லாத சிவஞான போகநிலையை யான் பெறற்கு அருளுக என வேண்டியவாறாம்.

     (4)