2605.

     போதாரு நான்முகப் புத்தேனி னாற்பெரிய
          பூமிவிடை வந்துநமனாற்
     போகுமுயிர் கள்விணையை ஒழிமின்என் றேகுரவர்
          போதிக்குந் உண்மைமொழியைக்
     காதார வேபல தரங்கேட்கும் நூற்களிற்
          கற்றும்அறி வற்றிரண்டு
     கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
          கடையனேன் உய்வதெந்தாள்
     மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
          வள்ளலே உள்ளமுதலே.
     மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
          வந்வத்திமுடி தாழ்த்துமுன்றன்
     ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
          யாண்டருள வேண்டும்அணிசீர்
     அற்புத சிதாகாச ஞானஅப் பலமாடும்
          ஆனந்த நடனமணியே.

உரை:

      அழகிய சீர்த்தியும் அற்புதமும் பொருந்திய சிதாகாசமாகிய ஞான சபையில் ஆடுகின்ற ஆனந்த நடன மணியாகிய கூத்தப் பெருமானே, தாமரைப் பூவில் வீற்றிருக்கும் நான்கு முகத் தேவனாகிய பிரமனால் பெருமை தங்கிய பூவுலகில் வந்து பிறந்து, பின் நமனாற் கவர்ந்து கொள்ளப்படுகின்ற உயிர்களே, செய்யப்படும் தீவினைகளை விட்டொழிமின் என்று ஞானாசிரியர்கள் அறிவுறுத்தும் உண்மை யுரைகளைக் காது கொடுத்துப் பன்முறையும் கேட்டும், மெய்ந்நூல்கள் வாயிலாகப் படித்துணர்ந்தும், உண்மையறிவின்றி இரு கண்களும் கெட்டொழிந்த குள்ளமான எருது போல வீணே யலைந்து வருந்தும் கடையனாகிய யான் உய்தி பெறுவது எக்காலமோ? தாயுமாய் ஞானத் திருவுருவினனாய் அருள்புரியும் வள்ளற் பெருமானே, என் உள்ளத்தில் எழுந்தருளும் முழு முதற் பொருளே, திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் நாளும் போற்றித் தம் கைகளால் தொழுது, வாயால் வாழ்த்தித் தலைகுனிந்து வணங்கும் உன்னுடைய, எப்பொருட்கும் ஆதாரமாகிய தாமரை போன்ற திருவடியை அடியேனுக்கும் காட்டி ஆண்டருள வேண்டுகிறேன். எ.று.

          பலகாலும் பலரும் எடுத்தோதப்படும் அழகும் புகழு முடைமை பற்றி, “அணி சீர் அற்புத சிதாகாசம்” எனப் புகழ்கின்றார். சிதாகாசம் - பரஞான வெளியெனவும் குறிக்கப்படுவது. நல்லுயிர்க்கு ஞான வின்பம் தோற்றுவித்தல் பற்றி, கூத்தப் பெருமானுடைய திருநடனம், “ஆனந்த நடனம்” எனப்படுகிறது. “அம்பலஞ் சேர் ஆனந்த வெள்ளத் தறை கழலோன்” (கோவை. 367) எனத் திருவாதவூரர் தெரிவிப்பது காண்க. போது - பூ பூவிற் சிறந்தது தாமரையாதலால், வெறிதே “போது” எனப் புகல்கின்றார். உயர்ந்ததன் உயர்வுக்கு வேறோர் அடை வேண்டா என்பது மரபு. தேவருள் ஒருவனாதலால் நான்முகப் பிரமனை, “நான்முகப் புத்தேள்” எனக் கூறுகின்றார். புத்தேள் - தேவன். பிரமன் பிறப்பிக்கப் பிறக்கும் உயிர்கள் செய்வினை செய்து உய்தி பெறற்கு உதவும் பெருமையுடைமையால், பூவுலகு “பெரிய பூமி” எனப் போற்றப்படுகிறது; இது பற்றியே “கரும பூமி” என்கின்றனர். நூலோர். பெரிய பூமி யென்பதன் பெருமையை அறிய விரும்புவோர் சிவஞானமா பாடியத்து இரண்டாஞ் சூத்திர மூன்றாமதி கரண வுரையைக் காண்க. நமன் - கூற்றுவன். உயிர்களை உடம்பினின்றும் கூறுபடுத்தி, உடம்பைப் பூவுலகிற் பூதங்கட் கிரையாக்கி, தீவினை மிக்க வுயிர்களைப் “பாவிகள் சென்றடையும் இடமாகிய நரக லோகங்கள் ஒன்றன்மே லொன்றாக ஒரோ வொன்று தொண்ணூறிலக்கம் யோசனை யளவுடைய முப்பத்து மூன்று தளங்களும் தனித்தனி நூறாயிரம் யோசனை யளவுடைய முப்பத்திரண்டு இடைவெளி யுடையவாய்” “நரகம், மாநரகம், இராசநரகம், இராசராசேச்சுர நரகம்” என நால்வகைப்பட்டு, (சிவஞான. பாடி : 2 : 3) இரௌவம் துலாந்தம் முதலாக வகைக் கெட்டாக முப்பத்திரண்டு விரிந்துள்ள நரக லோகத்திற் கண்ணறச் செலுத்தி வருத்துவது கொண்டு, அவன் கைப்படுவது உயிர்கட்குக் கீழ்மை பயத்தலால், “நமனாற் போகுமுயிர்கள்” என இழிவு தோன்றப் பேசுகின்றார். திருநாவுக்கரசரும், “கற்றுக் கொள்வன வாயுள நரவுள, இட்டுக் கொள்வன பூவுள நீருள, கற்றைச் செஞ்சடையானுளன் நாமுளோம், எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே” (குறுந். தனி) என்பது காண்க. நல்வினையின்றிப் பொல்லாத வினைகளைப் புரிந்தால் நமனாற் பிணிப்புண்டு நரகம் புகுவது உறுதி யென்பாராய், பல கூறாமல், “உயிர்கள் வினையை ஒழிமின்” எனச் சான்றோர் உரைக்கின்றார்கள். அச் சான்றோர்களை ஞான குரவன்மார் என்றற்குக் “குரவர்” எனவும், அவர் கூறுவன அனைத்தும் மெய்ம்மை யுரைகள் என்றற்குக் “குரவர் போதிக்கும் உண்மை மொழி” எனவும், அம்மொழிகளை அவர் தாமே நேரிற் கூறக் கேட்டும், அவர் எழுதிய நூல்களைப் பன்முறையும் படித்துணர்ந்தும் அறிவு தெளிவுறாது கெடுகின்ற கொடுமைக்கு மனம் நொந்து, “உண்மை மொழியைக் காதாரவே பலதரம் கேட்டும் நூல்களிற் கற்றும் அறிவற்று வீணே யலைந்திடும் கடையனேன்” எனவும் இயம்புகின்றார். தரம் - முறை. கற்றலிற் கேட்டல் நன்றாதல் நோக்கி, “பலதரம் கேட்டும் நூல்களிற் கற்றும்” எனக் கூறுகின்றார். இக் கேள்விகளாலும் கல்வியாலும் அறிவு தெளிவெய்தாமை புலப்பட, “அறிவற்று” என்றும், அறிவற்றமையால் பயனில் செயல்களையே செய்து வருந்தினமை தோன்ற, “வீணே யலைந்திடும் கடையனேன்” என்றும் இசைக்கின்றார். குண்டை - உயரம் குறுகியுடல் பருத்திருக்கும் எருது. அதுதானும் இருகண்ணும் கெட்டதாயின் செய்யும் சேட்டையும் அதனாற் படும் துன்பமும் மிகுதியாம் என விளக்குதற்கு “இரண்டு கண் கெட்ட குண்டை என” என்று உவமத்தாற் காட்டுகின்றார். இரண்டு என்றவிடத்து முற்றும்மை தொக்கது. அறிவின்மையுடன் சேட்டையும் துன்பமும் கீழ்மைப் படுத்தலாற் “கடையனேன்” என நொந்து கொள்கிறார். நரகத்தி லிடர்ப்படுதலும் துறக்கத்தில் இன்புறுதலும் பின்னர் மாறிப் பிறந்திறந்து எய்த்தலும் முடிவில் உய்தி பெறற் காதலின்,. “உய்வ தெந்நாள்” எனக் கேட்டு அவலிக்கின்றார். ”தாயவன் உலகுக்குத் தன்னொப்பில்லாத் தூயவன், தூமதி சூடி” (வல்லம்) என்று ஞானசம்பந்தர் முதலியோர் பரவுவதலால், “மாதாவுமாய்” என்கின்றார். தந்தையும் கல்வியும் ஞானமும் பெறுவிப்பவனாதலால் அவனையும் உளப்படுத்தற்கு ஞான குருவுமாய் என்னாமல், “ஞான வுருவுமாய்” என வுரைக்கின்றார். திருவருளை வரையாமல் வழங்குமாறு புலப்பட “அருள் செயும் வள்ளலே” எனப் புகழ்கின்றார். மனத்தின் எழுந்தருளும் முதல்வனாதலின், “உள்ள முதலே” எனக் கூறுகிறார். உள்ள முதல் என்பதற்கு என்றும் உள்ளதாய் உலகுயிர்கட் கெல்லாம் முழு முதலாய் உள்ளவன் எனக் கூறுவதும் உண்டு. திருமால் முதலிய தேவர்கட்கும் முனிவர்கட்கும் ஆதார முதல்வனாதலால், “மாலாதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் ஆதாரமான அம்போருகத்தை” எனவும், திருவடிக் காட்சி ஞானமாயும் தீமையெல்லாம் போக்குவதாயும் விளங்குவது தோன்ற, “அம்போருகத்தைக் காட்டி ஆண்டருள வேண்டும்” எனவும் போற்றுகின்றார். அம்போருகம் - தாமரை; ஈண்டு ஆகு பெயராய் இறைவன் திருவடிக் காயிற்று. “தாமரை புரையும் காமர் சேவடி” (குறுந்.) எனப் பெரியோர் கூறுவது காண்க.

     இதனால் இறைவன் திருவடிக் காட்சியே ஞானமும் வீடு பேறும் நல்குவ தென விளக்கியவாறாம்.

     (5)