2608. சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு
சாமிசிவ காமியிடமார்
சம்புவா மென்னுமறைஆகமத் துணிவான
சத்யமொழி தன்னைநம்பி
எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை
ஏத்திவினை தனைமாற்றியே
இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை
ஏழையேன் ஒருவன் அந்தோ
சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென்
செப்புவாய் வேதனாதி
தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர்
சித்தர்களும் ஏவல்புரிய
அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங்
கருண்முக விலாசத்துடன்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
ஆனந்த நடனமணியே.
உரை: பிரமன் முதலிய தேவர்களும் முனிவர்களும் கருடர்களும் காந்தருவரும் விஞ்சையரும் சித்தர்களும் பிறரும் சூழ விருந்து பணி புரியவும், அந்தணர் பலர் பல கோடி மந்திரங்களைச் சொல்லி முகமன் உரைக்கவும் உயர்ந்த அருளொளி பரப்பும் முகமலர்ச்சியுடன் அற்புதமான சிதாகாசமாகிய ஞான சபையில் ஆனந்த நடம் புரியும் மணியே, எப்போழுதும் அழிவில்லாமல் ஒருதன்மையாய் விளங்கும் சுவாமியாவார், சிவகாமியம்மையை இடப்பாகத்தே கொண்ட சம்புவாகும் என்று வேதாகமங்களின் துணிவான மெய்ம்மை மொழியை, நம்பி எந்தையென்று அறிவுடையோர் யாவரும் நின்னுடைய புகழைத் துதித்துத் தாம் செய்யும் வினைகளைப் பதி வினையாக மாற்றி, இன்பமுடன் இனிது வாழ்கின்றார்களாக, நிலவுலகில் ஏழையாகிய நான் ஒருவன், ஐயோ, மனக்கலக்கம் மிகவும் உற்று வாடுகிறேன்; இஃது என்னையோ? தெரிவித்தருள்க. எ.று.
தேவர் - தேவருலகில் வாழ்பவர்; முனிவர்களும் சித்தர்களும் எல்லா உலகங்கட்கும் சென்று வருபவர். கருடர்; காந்தருவர் விஞ்சையர் ஆகியோர், வானத்திலுள்ள தத்தமக்குரிய உலகங்களில் வாழ்பவர். கருடர் வாழும் நாட்டைக் காருடன் எனவும், விஞ்சையரை வித்தியாதரர் எனவும் புராணிகர் கூறுவர். சிவன் திருமுன் இவர்கள் பலரும் நின்று அப் பெருமானுடைய குறிப்பறிந்து பணி புரிபவர்களாதலால் “ஏவல் புரிய” எனக் கூறுகின்றார். வேள்வி தலைப்பட்டு வேத மந்திரங்களைக் கோடிக் கணக்கில் ஓதி வழிபடுவது மரபாதலால், “அந்தணர்கள் பலகோடி முகமனாட” என மொழிகின்றார். கோடி - இருபது கொண்டது என்பர்; நூறாயிரத்துக்கு மேற்பட்டது கோடி எனப்படுவதும் உண்டு. முகமனாடல் - முக மலர்ச்சியுடன் அகமலர்ந்து மொழிவது. அருள் முக விலாசம் - அருளொளி திகழும் முகப் பொழிவு. சந்ததம் - எப்பொழுதும், காலந்தோறும் மாறுபடும் உலகியற் பொருள் போலாது சிவபரம் பொருள் எஞ்ஞான்றும் ஒருதன்மைக் தாதல் விளங்க, “சந்ததம் அழியாமல் ஒருபடித்தாய் இலகும் சாமி” என வேதாகமங்கள் குறிக்கின்றனவாம். உமாதேவிக்கு சிவகாமி என்பதும் ஒரு பெயர். சம்பு - சிவன் பெயர்களில் ஒன்று. சாமி சம்புவாம் என இயையும். சம்பு - சுகத்தைச் செய்பவன். திருமால் பிரமன் ஆகிய தேவர்க்கும் இப்பெயர் பொதுவாயினும். சிவனுக்கே யுரித்தாக வுரைப்பது சான்றோர் மரபு. வேதமும் ஆகமங்களும் துணிந்து கூறினும், மெய்ம்மை விளங்குதல் குறித்து, “சத்யமொழி” என நிறுவுகின்றார். நம்புதல் - விரும்புதல். சம்புவாய் ஆன்மாக்கட்கு அறிவும் இன்ப வாழ்வும் நல்குதலின் மெய்யறிஞர், எந்தையெனப் போற்றுகின்றனர் என்றற்கு, “எந்தையே என்றறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி” வழிபடுகிறார்கள் என்று உரைக்கின்றார். மெய்யுணர்வுடைய மேலோராதலால், பிறவிக் கேதுவாகிய வினைகளைப் புரியும் மன முதலிய பசுகரணங்களைப் பதிகரணங்களாக்கிப் பிறவி வேரறுக்கும் பெருமானுக்குரிய வினைகளைச் செய்தே இன்ப வாழ்வு பெறுகின்ற திறம் புலப்பட, “வினைதனை மாற்றியே இன்பமாய் இனிது வாழ்ந்திட” என மொழிகின்றார். கரணங்கள் மாறினாலன்றி, அவற்றாற் செய்யப்படும் வினைகள் மாறாமையின், “வினை தனை மாற்றியே” என எடுத்து மொழிகின்றார். “காணும் கரணங்களெல்லாம் பேரின்பமெனப், பேணுமடியார் பிறப்பகலக் காணும் பெருமான் (பண்டாய) என மணிவாசகப் பெருமானும், “பசு கரணங்களெல்லாம் பதிகரணங்களாக வசி பெறும் அடியார்” (தணிகை. பு.) எனக் கச்சியப்ப முனிவரும் உரைப்பன காண்க. மலப் பிணிப்பால் உளவாகும் மறைப்புக்களும் பிறவி மயக்கமும் காரணமாக மனத்தின்கண் கலக்கமும் தெளிவின்மையும் உண்டாகின்றன என்பது உலகறிந்த உண்மையாதலால், அவற்றைக் கிளந்து கூறாமல், “அந்தோ சிந்தையானது கலக்கங் கொண்டு வாடல் என் செப்புவாய்” என வேண்டுகின்றார்.
இதனாற் சிந்தை கலக்கமுற்று வாழ்க்கையைத் துன்ப மயமாக்குவதேன் என விண்ணப்பித்தவாறாம். (8)
|