2609.

     நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
          நெறிநிற்கும் அன்பர்மனமாம்
     நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
          நிறைவே மெய் யருட்சத்தியாம்
     வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
          விண்ணே அகண்டசுத்த
     வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
          வேதமே வேதமுடிவே
     தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
          துணைமலர்த் தாட்குரியனாய்த்
     துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
          தோயஅருள் புரிதிகண்டாய்
     ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
          அம்மைசிவ காமியுடனே
     அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
          ஆனந்த நடனமணியே.

உரை:

      கங்கையாற்றைச் சடை முடியில் தாங்கிக் கொண்டிருக்கின்ற தலைவனே, பல்வேறு அணிகள் பூண்டு விளங்கும் அம்மையாகிய சிவகாமியுடன் அற்புத சிதாகாசகாகிய ஞான சபையின்கண் ஆடல் புரியும் ஆனந்த நடன மணியே, மேனியெல்லாம் திருநீற்றைப் பூசியும் விளங்குகின்ற அக்கமணி மாலைகளை முடியிலும் தோளிலும் மார்பிலும் அணிந்து கொண்டு சன்மார்க்கத்தில் நின்றொழுகும் மெய்யன்பர்களின் மனமாகிய நிலத்தின் மேல் வளர்கின்ற தேவதாருவே, குறைதலில்லாத நிறை பரம்பொருளே, மெய்ம்மை சான்ற திருவருட் சத்தியாய வீறு தங்கிய குன்றாத செல்வமே, ஒடுங்குதலில்லாத ஆகாயமே, அளவிடப்படாத சுத்த பரவெளியே, அவ்வெளியிற் பரவித் திகழும் பரவொளியே, எழுதப் படாத வேதப் பொருளாயவனே, வேதத்தின் முடிபொருளே, குற்றம் நிறைந்து நிலையின்றி அலையும் பாவியாகிய யான் நின்னுடைய திருமிக்க இரண்டாகிய பாதங்கட்கு உரியவனாய்த் துன்பம் நீங்கி, இளைப்பாறுமாறு நினது இன்பக் கடலிற் குளிக்கும்படி அருள் புரிதல் வேண்டும். எ.று.

      ஆறு என்றது கங்கையாறு; அதனைச் சடையில் தாங்குதல் பற்றி “ஆறணிந்திடு வேணி அண்ணலே” எனச் சிவனைப் பராவுகின்றார். அம்மை சிவகாமி என்று பெண்மை வடிவிற் கூறுவதால், அணி யென்பது பொன்னாலும் மணியாலும் ஆகிய அணிகலன்களைக் குறிப்பதாயிற்று. நீறணிதலும் அக்கமணிகளை மேனியிற் பூணுதலும் சிவவேடமாய்ச் சிவ நெறியாளர்க் கின்றியமையாதனவாகலின், “நீறணிந் தொளிர் அக்கமணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர்” எனக் குறிக்கின்றார். சிவநெறிக்குரிய பதி பசு பாசம் என்ற மூன்றும் சத்துப் பொருள்களாதலால், அந்நெறி சன்மார்க்க மாயிற்று. சன்மார்க்கமாகிய சிவநெறிக்கண் நின்று சிவன்பால் அன்பு செய்யும் அடியார்களைச் “சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர்” என்று சிறப்பிக்கின்றார். அப்பெருமக்கள் மனத்தின் கண் நின்று தளிர்ந்து அருணிழல் செய்வதால், “அன்பர் மனமாம் நிலமீது வளர் தேவதாருவே” எனப் புனைகின்றார். தேவதாரு - தேவதரு என்னும் ஒரு வகை மரம்; கற்பக மரம் என்றலுமுண்டு. குறைவுடைய நிலைகொள்ளாதாகலின், குறைவிலாத நிறைவை “நிலையான நிறைவே” என்று கூறுகின்றார். அருட் சத்தியே சிவனுக்குத் திருமேனியாதலால், அச்சிறப்புப் பிறிது எப்பொருட்கும் இல்லாமை பற்றி “மெய்யருட் சத்தியாம் வீறணிந்து” என விளம்புகிறார். “நீடுபராசத்தி நிகழ் இச்சா ஞான நிறைகிரியை தர அதனை நிமலன் மேவி நாடரிய கருணை திருவுருவமாகி” (சிவப். 14) என்று உமாபதி சிவம் உரைப்ப தறிக. ஏனைச் செல்வங்கள் போல அருட் செல்வம் அழிவ தின்மையின், “அழியாத நிதியமே” என்கின்றார். விண் - ஆகாசம். அணு முதல் அண்ட மனைத்திலும் உள்ளும் புறமும் நீக்கமறக் கலந்திருப்ப தெனத் தத்துவ நூல்கள் கூறுவதால், “ஒழியாத விண்ணே” என விளம்புகிறார். ஆகாசத்துக்கு இடமாவது பிறிதேதும் கலவாத சுத்த வெளியாதலால், “அகண்ட சுத்த வெளி ” எனவும், அது பரம்பொருளுருவாய்த் தன்கண் பரசிவத்தின் ஞானவொளி நிலவ விளங்குவது கொண்டு “விளங்கு பரவொளியே”எனவும் இசைக்கின்றார். உலகிலும் உலகுகளைத் தன்கட் கொண்ட அளவிறந்த அண்டங்களிலும் உள்ள ஒளிகட் கெல்லாம் ஒளி நல்கும் உயர்ந்த ஒளியாதலால் “பரவொளி” எனச் சிறப்பிக்கின்றார். வேதங்களை எழுதாக் கிளவி என நூலோர் கூறுவதால், “வரைந்திடா வேதமே” என்கின்றார். இப்போது வேதமென வழங்குவன இருக்கு யசுர் சாமம் அதருவம் என நான்காக வரையப்படிருத்தலின், அவற்றிற் கெல்லாம் முதலான வேதத்தை ”வரைந்திடா வேதமே” என்கின்றார் எனினும் பொருந்தும். வேத நூல்களின் கருத்துப் பரம்பொருளுண்மை யுணர்த்துவதாகலின், “வேத முடிவே” என மொழிகின்றார். தூறு - குற்றம். மலமாயை கன்மங்களின் மறைப்பாலும் மயக்கத்தாலும் குற்றம் நிறைதலாலும் அவற்றால் உளவாகும் துன்பங்களை யாற்றாது அலைதலாலும், “தூறணிந் தலைகின்ற பாவியேன்” எனத் தம்மை பேசுகின்றார். துணை, இரண்டு. மலர்த்தாள் தாமரை மலர் போலும் திருவடிக்குரிமை திருவருள் ஞானத்தால் உளதாவதாகலின், முதற்கண் அதன் இன்றியமையாமை தோன்றத் “துணை மலர்த் தாட்குரியனாய்” என்றும், திருவடி உயிர்களின் துயர் துடைக்கும் மருந்தா மென்பதனால், “துயர் தீர்த்து” என்றும், பல் பிறவிகளிலும் துயருறுவதே தொழிலாகி இளைத்தமை புலப்பட, “இளைப்பாறும்” என்றும், அவ்விடத்துப் பெருகும் இன்பம் கடல் போறலின், “இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய்” என்றும் இசைக்கின்றார். அம்போதி - கடல். கண்டாய் - முன்னிலையசை.

     இதனால் திருவடிக்குரியனாக்கி இன்பக் கடலில் மூழ்கி மகிழ அருள் செய்க என வேண்டிக் கொண்டவாறாம்.

     (9)