2613. மாலயன் தேடியும் காணாம லையை
வந்தனை செய்பவர் கண்டம ருந்தை
ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை
ஆதியை ஆதியோ டந்தமி லானைக்
காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்
கருணைக்க டலைஎன் கண்ணனை யானை
ஏலம ணிகுழ லாள்இடத் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
உரை: திருமாலும் பிரமனும் தேடி வருந்தியும் காணப்படாத திருவடியும் திருமுடியுமுடைய மலை போன்றவனும், வழிபடுவோர் துன்ப நீக்கற்குக் கைகண்ட மருந்து போல்பவனும், கடல் விடத்தை அமுது போல வுண்டவனும், ஆதி முதல்வனும், தனக்கு ஆதியும் முடிவுமில்லாதவனும் உயிர்களை வருத்தும் நமனும் வருந்தி வீழுமாறு உதைத்தவனும் கருணையிற் கடல் போன்றவனும், என் கண்களையொப்பவனும், ஏலமணிந்து மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை இடப்பாகத்தில் உடைவனுமாகிய சிவபெருமானை இன்றிரவு கனவிற் கண்டு எதிர் கொண்டு மகிழ்வேன். எ.று.
பசுபாச ஞானங்களாற் பார்த்தற் கரியவன் என்ற உண்மையைப் புலப்படுத்தற்குப் பசுத் தன்மையின் உருவாய்த் திருமாலும், பாச ஞானமாகிய நூலறிவின் உருவாய்ப் பிரமனும் முறையே சிவத்தின் திருவடியும் திருமுடியும் காண முயன்று அரிதிற்தேடியும் மாட்டா தொழிந்த மாண்பைக் கூறுவாளாய், “மாலயன் தேடியும் காணாமலை” எனக் கூறுகின்றாள். செம்மலையைப் போலச் சிறப்புடன் நின்றானாயினும் இருவரும் கண்டிலர் என்றற்கு “மலை” என வுரைக்கின்றாள். உடல் கருவி கரணங்கள் நோயுற்று வருந்துவோர் மருந்து மந்திரங்களால் தீராமை காண்பவர், சிவனை வழிபடுவதே மருந்தாகக் கொண்டு வழிபட்டுப் பயன் பெறுவது இயல்பாதலால், “வந்தனை செய்பவர் கண்ட மருந்து” என மொழிகின்றாள். தலைமுறை தலைமுறையாக வுண்டு பயின்று பலன் கண்டது என்பாள், “கண்ட மருந்து” என்று இயம்புகின்றாள். ஆலம், ஈண்டு அமரர் கடல் கடைந்த போது தோன்றிய கொடியவிடம். அமுதுண்ட தேவர் சாகவும், தான் அவ்விடத்தை யுண்டு சாகா நிலை பெற்றது பற்றி, “ஆலம் அமுதின் அருந்தல் செய்தான்” என அறிவிக்கின்றாள். “தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே” (புகலூர்) எனத் திருநாவுக்கரசர் செப்புவது காண்க. பல்வேறு உலகங்கள் பொருட்களாக அனைத்தின் தோற்றத்துக்கும் ஆதியானவன் என்பது பற்றி “ஆதி” எனவும், தனக்கொரு தோற்றமும் முடிவுமில்லாதவன் என்றற்கு “ஆதியோடு அந்தமிலான்” எனவும் மொழிகின்றாள். கால மறிந்து உயிர்களை அவ்வவ் வுடம்பினின்றும் நீக்கும் முதல்வன் யான் எனச் செருக்கிய நமனைத் திருவடியால் உதைத்து வீழ்த்து மேம்பட்டதைக் குறித்தற்குக் “காலன் வருந்தி வீழ வுதைத்தான்” என்று கூறுகிறாள். எனவே, சிவ வழிபாடு சாவச்சம் போக்கும் தகைத்து என வற்புறுத்தினாளாயிற்று. பேரருளாளன் என்பது கொண்டு, “கருணைக் கடல்” என்றும், காண்டற் கரிய பரமநிலையைக் காணச் செய்தலின், “கண்ணனையான்” என்றும் எடுத்துரைக்கின்றாள். “சடை மிசைப் பிறை நிறைவித்த பேரளாளனார்” (கழுமலம்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. ஏலம் - மகளிர் கூந்தற் கிடும் நறுமணப் பொருள். “ஏல மேலும் நற்குழலி பங்கனே” (சதக. 98) எனத் திருவாசகம் குறிப்ப தறிக. இடத்தான்-இடப்பாகத்தில் உடையவன். இரவுப் போதில் தோன்றும் கனவு பயன் விளைவிக்கும் என்ற கருத்தினால், “இன்றை யிரவில் “ என எடுத்து மொழிகின்றாள்.
இதனால், இறைவன் ஆல முண்டருள் புரிந்ததும் ஆதியாதலும் ஆதியந்த மிலனாதலும் கூறி அப்பெற்றியானை இரவிற் கனவில் எதிர் கொண்டேற்று மகிழ்வேன் என்கிறாளாம். (3)
|