2614.

     சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
          தூயனை யாவரும் சொல்லரி யானைப்
     பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
          பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
     மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
          வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
     எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
          இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.

உரை:

      சுந்தர மூர்த்தியாகிய தொண்டர் பெருந்தகையின் பொருட்டுத் திருவாரூரில் பரவையார் மாளிகைக்குத் தூது சென்றவனும், தூய்மையே யுருவாயவனும், மெய்யுணர்வு படைத்த யாவராலும் இத்தன்மைய னென்று சொல்ல வொண்ணாதவனும், பிறவித் தொடர்பறுக்கும் பராபரனும், மெய்யன்பர் திருவுள்ளத்தில் எழுந்தருளும் பரஞ் சுடரானவனும், மந்தர மலையில் விருப்புடன் வீற்றிருப்பவனும், தேவரெல்லாம் தொழுது வணங்குபவனும், எம்போல்வரை ஆட்கொண்டு சிவானந்தம் நல்குபவனுமாகிய சிவபிரானை இன்றிரவு கனவின்கண் எதிர்கொண்டேற்று இன்புறுவேன். எ.று.

     திருவாரூரிற் பரவையார் கொண்ட புலவியைத் தீர்க்குமாறு வேண்டிக் கொண்ட நம்பியாரூரர் பொருட்டுத் திருவாரூர் இறைவன் தூது சென்று பிணக்கு நீக்கிக் கூடி மகிழ்வித்த அருட் செயல் கனவிலேனும் கண்டு எதிர்கொண்டு கூடியின்புற விழையும் நங்கை நினைவில் எழுவதால், “சுந்தரர்க்காக முன் தூது சென்றான்” எனச் சிவபெருமானைச் சிந்திக்கின்றாள். நம்பியாரூரரைச் சுந்தரர் என்றும் சுந்தரமூர்த்தி யென்றும் வழங்குவ துண்மையின், “சுந்தரர்க்காக” என்று சொல்லுகின்றாள். கூறியது கூறுவோர், தான் வகுத்துக் கூறுவோர் எனத் தூதுவர் இருவகையினர் உண்டெனினும், தான் வகுத்துக் கூறும் தூதராகச் சிறப்புறச் சென்றமை பற்றி, “தூது” எனப் பொதுப்பட மொழிகின்றாள். இதனால் இறைவனது எளிமைத் திறம் எடுத்துக் காட்டப்படுகிறது. மகளிர் மனைக்குத் தூது போவது தூய தன்றாயினும், மெய்யன்பர் பொருட்டு உண்மைப் பணி புரிவது தூயதாதல் பற்றி, சிவனை, “தூயவன்” என்றும், தூய்மையின் உண்மை யுருவாகிய இறைவனது இறைமைத் தன்மை, எல்லாம் உணர்ந்து உரைக்க வல்லார்க்கும் இயலாத செயலாதலால், “யாவரும் சொல்லரியான்” என்றும் இசைக்கின்றாள். யாவரும் என்பதன் கண் மூன்றனுருபு விகாரத்தால் தொக்கது. தூது போயது சுந்தரர்க்கும் பரவையார்க்கும் இன்பத் தொடர்பு தோற்றுவிக்கும் உலகியற் பந்தம் போல்வதாயினும், சிவனது திருவருள் பந்தத்தின் பயன் நுகர்விக்கு மாற்றால் தொடர்பறுக்கும் நற்செயலாதல் விளங்க, “பந்தம் அறுக்கும் பராபரன்” எனப் பகர்கின்றாள். பரன் - மேலாயவன்; அபரன் - கீழாயவன்; பராபரன், மேலோனாய் முத்தியின்பம் நல்குபவன், கீழோனாய், உலகிய லின்பம் வழங்குகிறான் என்ற குறிப்புத் தோன்ற, “பராபரன்” எனக் கூறுகின்றாள். பத்தர், பத்தியுடைவர்; மெய்யன்பர் என்பது கருத்து. அன்பர்களின் மனமாகிய கோயிற்கண் எழுந்தருளி, அவர் கருத்தறிந்து முடிக்கும் இயல்பினனாதலால், “பத்தர், உளங்கொள் பரஞ்சுடரான்” என இசைக்கின்றாள். பரஞ்சுடர், நுண்ணுணர்வாகிய ஒளி. உள்ளிருந்து உயரிய உணர்வொளி நல்குபவனைப் “பரஞ்சுடரான்” என வுரைக்கின்றாள். “நெதிய மொன்னுள போகமற் றென்னுள நிலமிசை சலமாய, கதிய மென்னுள கருதிய பொருள் கூடின்” (அம்பர். மாகாளம்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. மந்தரமலை -குலமலைகள் ஏழனுள் ஒன்று; மேருமலையையும் மந்தர மென்பதுண்டு. கயிலாயத்தையும் இப்பெயராற் குறிப்பர் புராணிகர். “கயிலாயம் தம்மிடமாக் கொண்டார் போலும்” (ஆக்கூர்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது நோக்குக. இன்பமும் துன்பமும் நுகரும் மக்களை நோக்கிப் போகமே நுகரும் வானவர் பரவுவது ஏற்றமாதலால், “வானவ ரெல்லாம் வணங்க நின்றாள்” எனப் புகழ்கின்றாள். “பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மான்” (புள்ளிருக்கு) என்று பெரியோர் புகன்று கூறுவர். எம்மைப் போலும் எளியவ ருள்ளத்திலும் அன்பு தோன்றப் பண்ணி வணங்கி வாழ்த்தி இன்புறுவிக்கின்றான் என்பாளாய், “எந்தமை யாண்டு நல்லின்பளித்தான்” என நயம்பட மொழிகின்றாள். நாளை பின்னை என்னாமல் இன்றை யிரவே என் கனவில் வருவார் என்று களிக்குமாறு புலப்பட, “இன்றை யிரவில் எதிர்த்து கொள்வேனே” என இயம்புகின்றாள்.

      இதனால், தொண்டர்க்குத் தூதராம் எளிமையுடைய இறைவன் என் உள்ளத்திருந்து கனவிற் காட்சி தரக் கண்டு எதிர் கொண்டு இன்புறுவேன் என்றதாம்.

     (4)