2615. அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
துன்பம்த விர்த்துச்சு கங்கொடுப் பானைச்
சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
உரை: அன்பராயினார் வேண்டுவன அனைத்தையும் தருபவனும், அம்பலத்தின்கண் ஆடல் புரிபவனும், அன்புக்கு மாறான வன்கண்மையுடையவர் மனத்தின்கண் நில்லா தொழிபவனும், வானவர்க்குத் தலைவனும், எமக்கெல்லாம் வாழ்முதலாகியவனும், யாவர்க்கும் துன்பம் போக்கி இன்பம் நல்குபவனும், உலகிற்குச் சோதியாகுபவனும், சோதிக்குட் சோதியாய்த் திகழ்பவனும், நாடோறும் என்னுடைய சிறு பணியையும் ஏற்றருள்பவனுமாகிய சிவபெருமானை இன்றை இரவுப் போதில் கனவிற் கண்டு எதிரேற்று மகிழ்வேன். எ.று.
வாழ்வார்க்கு வேண்டுவனவற்றை முன்னறிந்து நல்குவது வாழ்விப்பார்க்கு கடனாயினும், அளவின் மிகுதியும் குறைவும் அன்பு காரணமாய் நிகழ்வனவாதலின், “அன்பர்கள் வேண்டுமவை அளிப்பான்” எனவுரைக்கின்றாள். அன்பு செய்வார்க்கு மிகுதியாயும் இல்லார்க்குக் குறைவாகவும் அளிக்கப்படுவது, உலகியல் நெறி. வாழ்வாரை வாழ்வித்தலும், உணர்வாரை, யுணர்வித்தலும் முறையேயாகிய ஊர் நாடகமும் ஞான நாடகமுமாதலின், அவை இரண்டினையும் இடையற வின்றிப் புரிவது பற்றி, “அம்பலத்தே நடமாடுகின்றான்” என அறிவிக்கின்றாள். அம்பலம் - உலகும் உயிர்களின் உணர்வுமாகும். வன்பர் - உள்ளத்தே அன்பின்றி, நினைவு சொற் செயல்களில் வன்கண்மை யுடையவர். அவற்றால் மன மாசு நிறைதலால், அதன்கண் அவன் தோன்றாமையால், “வன்பர்கள் நெஞ்சில் மருவல் இல்லான்” என்று கூறுகின்றாள். அன்புடையார் யாவர் மனத்தும் நிறைந்து நிற்றல் போல, வன்புடையார்பால் அறவே விளங்கி நில்லாமை இயல்பாதலின், மருவ கில்லான்” என்னாமல், “மருவல் இல்லான்” என்கிறாள். கருமம் செய்தலின்றிப் போக நுகர்ச்சி யொன்றேயுடையராகலின், காத்தல் வேண்டி வானவர்கட்குத் தலைமை பூண்பது கொண்டு “வானவர் கோன்” என்றும், மண்ணில் வாழ்வார்க்கு உடல் கருவி கரணங்களையும் அவற்றை இயக்கும் உணர்வு செயல்களையும் நல்கும் முதல்வனாதலால், “எம் வாழ்முதலான்” என்றும் இயம்புகிறாள். முதலான் - முதன்மை யுடையவன். காட்டக் காண்டலும், உணர்த்த வுணர்தலும் உயிர்கட் கியல்பாதலால், முதற்கண் அவற்றைச் செயற்படுத்தலின், “முதல்” எனல் வேண்டப்படுகிறது. துன்பக் காலத்தில் தெளிவின்மையும், இன்பக் காலத்தில் தெளிவும் உளவாதலின், தெளிவின் கண் உயிர்கள் நலம் பெறும் பொருட்டுத் துன்பம் பயக்கும் இருட் படலத்தை நீக்கும் இறைவனுடைய அருட் செயலை, “துன்பம் தவிர்த்துச் சுகம் கொடுப்பான்” என வுரைக்கின்றாள். இன்பத்தினும் துன்பம் சிறிதாயினும் பெருகித் தோன்றி உணர்வை மறைப்பதனால், “துன்பம் தவிர்த்தலை” முற்பட மொழிகின்றாள். உயிரும் உணர்வுருவாய ஒளிப்பொருளாயினும், மலவிருள் கலந்திருத்தலால், சிவனைச் “சோதி” என்றும், ஏனைய ஒளிப்பொருள்களினின்றும், வேறுபடுத்தற்குச் “சோதியுட் சோதி” என்றும் சொல்லுகின்றாள். “சோதியுட் சோதியான்” எனப் பெரியோரும் கூறுவர். எல்லாம் கெட்ட விடத்தும் தான் கெடுதலின்மை விளங்க சிவன் என்பு மாலை யணிந்து தோன்றுதலால், “என் பணி கொண்டு” எனவும், தான் கண்டு மகிழ நிற்றலின், “ஏன்று கொண்டான்” எனவும் கூறுகின்றாள். எதிர் கோடல் - அன்பு மிகுதியால் முன்னுறச் சென்று வரவேற்றல்.
இதனால், அன்பர்கட்கு வேண்டுவன அளித்தும் துன்ப நீக்கிச் சுகம் கொடுத்தும் இறைவன் உயிர்களைப் பேணும் திறம் எடுத்தோதியவாறாம். (5)
|