2617.

     வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
          வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
     கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
          கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
     உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
          உலகுடை யானைஎன் உற்றது ணையை
     எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
          இன்றைஇ ரவில்எ திரிந்துகொள் வேனே.

உரை:

      வெள்ளை நிற எருதேறும் தனிச்சிறப்புடையவனும், வேத நூல் முடிவின்கண் எழுந்தருள்பவனும், தேன் மணம் கமழும் கொன்றை மலர் மாலையை யுடையவனும், கற்பக மரம் போல்பவனும், மூன்று கண்களையுடைய கரும்பு போல்பவனும், நினைக்கப்படுகின்ற வினைகளைப் போக்கி, உள்ளத்தின்கண் இருந்தருள்பவனும், உலகனைத்தையும் தனது உடைமையாக வுடையவனும், எனக்கமைந்த துணைவனும், இகழ்ந்து விலக்குதற்குரிய செயல்வகை யாதும் இல்லாதவனும் ஆகிய சிவபெருமானை இன்றிரவில் கனவில் வர எதிர்கொண்டேற்று இன்புறுவேன். எ.று.

     சிவனுக்கு ஊர்தியாகும் எருது வெள்ளை நிறமுடையதென்பது பற்றி, “வெள்விடை மேல் வரும் வீறுடையான்” என விளம்புகிறார். “நரை வெள்ளேறு ஒன்றுடையான்” (சிராப்பள்ளி) எனத் திருஞானசம்பந்தர் தெரிவிக்கின்றமை காண்க. வேத புராண இதிகாசங்களைக் கற்றுணரத் தோன்றும் ஞான முடிவில் தெளியப்படும் பரம்பொருளாதலால், “வேத முடிவில் வீற்றிருந்தான்” எனவும், சிவனாகிய சகளத் திருமேனியில் முடியிலும் தோளிலும் மார்பிலும் கொன்றை மலர் மாலை யணிதலால், “கள்விரையார் மலர்க் கொன்றையினான்” எனவும் கூறுகின்றாள். கள் - தேன். தென்னை, பனை ஈந்து ஆகிய மரங்களில் இறக்கிப் புளிக்க வைத்துண்ணும் முறை ஆயிரத்தைஞ்ஞூறாண்டுக்கு முன் தமிழரால் கண்டறிந்துண்ணப்படாமையின், கள்ளென்பது தேனையே குறிப்பதாயிற்று. திருவள்ளுவரை உள்ளிட்ட சான்றோர் கள்ளென் றுரைப்பது மலர்த்தேனையும் அரிசிச் சோற்றினின்றெடுத்த புளிங்காடியுமாம். வரலா றறியாமையின், தென்னை பனை முதலியவற்றின் கள்ளே முன்னாளில் உண்ணப்பட்டனவென உரைத்து மகிழ்கின்றனர். வரலாறு காணும் திறமும் தெளிவும் இந்நாளைக் கல்விப் பெருமையே இத்தகைய இழுக்குணர்வுக்குக் காரணம் என அறிக. கற்பகம் - வேண்டுவார் வேண்டிய தளிக்கும் தேவருலகத்து மரம். கணு மூன்றுடைய செங்கரும்பு போல்வது விளங்க “முக்கண் கொள் கரும்பு” என மொழிகின்றாள். உள்வினை, மன மொழி மெய்களாற் செய்யப்படும் வினை. செய்யும்போது உணரப்படாமல், பயனை நுகரும்போது நினைக்கப்படுவதுபற்றி, “உள்வினை” என்றும், இறைவன் திருவருள் ஞானத்தாலன்றி வேறே எவ்வாற்றாலும் ஒழிக்கப்படாத வன்மையுடைமையால், “உள்வினை நீக்கி” என்றும், வினைநீக்கத்தால் மாசு நீங்கி அருளொளி கொண்டு மனம் சிவத்துக்கிடமாதல் உணரப்படுதல் தோன்ற, “உள்வினை நீக்கி யென்னும் அமர்ந்தானை” என்றும் இயம்புகின்றார். “வினையா லசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்”(சி. ஞா. போ) என்று மெய்கண்டார் தெளிவிப்பது காண்க. உயிர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெறற்குத் துணையாகும் உலகு உடல் கருவிகரணங்களைப் படைத்தளித்தலின், சிவனை “உலகுடையான்” என்றும், வாழுமிடத்து கருவி கரணங்கள் அறிவயர் காலை நல்லுணர்வு காட்டிஉண்மை தெரியச் செய்தலால், “என் உற்ற துணை“ என்றும், இவ்வாறு அருள் வினையல்லது வேறு குறை கூறத்தக்க செயல் யாதும் இல்லாதவனென்றற்கு, “எள்வினை யொன்றும் இல்லாதவன்” என்றும் எடுத்தோதுகின்றார்.

          இதனால், சிவன் வினைகளைப் போக்கி ஞானவொளி நல்கி மனத்தின் கண் வீற்றிருந்தருளும் திறம் விளக்கியவாறாம்.

     (7)