2618. பெண்ணமர் பாகனைப் பேர்அரு ளோனைப்
பெரியவர் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்
கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்
கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்
பண்ணமர் பாடல்ப ரிசளித் தானை
பார்முதல் அண்டம்ப படைத்தளிப் பானை
எண்அம ராதஎ ழிலுடை யானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
உரை: உமா தேவியாகிய பெண் விரும்பி யுறையும் இடப்பாகத்தையுடையவனும், பேரருள் செய்பவனும், பெரியராயினார்க்கெல்லாத பெரியவனாகியவனும், கண் பொருந்திய நெற்றியையுடைய கடவுளாகிய தலைவனும், கரிய திருமாலை ஆண்டருளும் முக்கண்ணணும், யாங்கள் பாடுகிற இசை பொருந்திய பாடல்களை, யேற்று வரமருள்பவனும், நில முதல் அண்டங்க ளனைத்தையும் படைத்து உயிர் வாழச் செய்பவனும், எண்ணத்தின் எல்லைக்கடங்காத அழகுடையவனுமாகிய சிவபெருமானை இன்றிரவு கனவிற் கண்டு எதிரேற்று இன்புறுவேன். எ.று.
பெண்மைக்கு இலக்கும் எடுத்துக்காட்டுமாய் விளங்குபவளாதலால், உமையம்மையைச் சுட்டிப் “பெண்ணமர் பாகன்” எனப் பேசுகின்றாள். “பெண்ணமர் மேனியினார்” (பாண்டிக்) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. அருளே யுருவா யமைந்தவனாதலால், “பேரருளோன்” எனக் குறிக்கின்றாள். பெரியவர், பலராலும் தொழப்படும் பெருமை கொண்ட தேவர். அப்பெரிய தேவர்களாலும் தொழப்படும் பெருமையுடையவனாதலால், சிவனைப் “பெரியவர்க் கெல்லாம் பெரியவன்” என்று புகழ்கின்றாள். “தேவர் தலை வணங்கும் தேவர்க்கும் தேவன்” (ஆமாத்தூர்) என ஞானசம்பந்தர் குறித்தருளுவது காண்க. பெண்ணமர் மேனியும் கண்ணமர் நெற்றியும் சிவனுக்குச் சிறப்பாக வுரியவையாதலால், “கண்ணமர் நெற்றிக் கடவுள் பிரான்” என்று கனிந்து கூறுகிறாள். கண்ணன் - கரிய நிறமுடைய திருமால். “கண்ணும் திருவடி கையும் திருவாயும் செய்ய கரியவன்” (சிலப்) என இளங்கோவடிகள் பராவுவது காண்க. கண்ண பிரானுக்குச் சக்கரப் படை தந்து ஆட்கொண்ட வரலாறுப்பற்றிக் “கண்ணனை யாட்கொண்ட முக்கண்ணன்” என மொழிகின்றாள். நீற்றினை நிறைப் பூசி நித்தலாயிரம் பூக்கொண்டு ஏற்றுழியொருநாளொன்று குறையக் கண்ணிறைவிட்ட ஆற்றலுக் காழி நல்கியவன்” (வீழி) என்பர் ஞானசம்பந்தர். பண் - இசை. பாட்டுக்கு இசை யுயர்வு தருவதாகலின், “பண்ணமர் பாட” லொன்றும், இனிய பண்ணமைந்த பாட்டைப் பாடுவார்க்குப் பரிசளிப்பது உலகியல்; அதுபோல் இறைவனும் தனது திருவருளை நல்குகிறா னென்பது பற்றி, “பாடல் பரிசளித்தான்” என்றும் பகர்கின்றாள். “பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான்” (அம்மானை) என்பர் மணிவாசகப் பெருமான். உயிர்கள் வாழ்ந்து உய்தி பெறுமாறு உலகனைத்தையும் படைத்தான் என்று சிவாகமங்கள் ஓதுதலின், “பார் முதல் அண்டம் படைத்தளிப்பான்” என்று பகர்கின்றாள். “பார்பதமண்ட மனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே” (கோயிற் றிருப்) என்று திருவாசகம் சிவனைச் சிறப்பிப்பது காண்க. ஒளி திகழும் எழில் எண்ணும் சிந்தையின் எல்லைக்குள் அடங்காது பெருகுதலால், “எண்ணமராத எழிலுடையான்” என இயம்புகிறாள். “எழில் கொள் சோதியெம் ஈசன் எம்பிரான்” (சென்னி) என்று கூறுவர் திருவாதவூரர்.
இதனால், பார் முதல் அண்டங்களைப் படைத்தளித்து, உயிர்களை உய்வித் தருளும் சிவனது பரமாம் தன்மை குறித்தவாறாம். (8)
|