2619.

     வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை
          வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
     களங்கம்இ லாதக ருத்துடை யானைக்
          கற்பனை முற்றும்க டந்துநின் றானை
     உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை
          உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
     இளம்பிறை குடிய செஞ்சடை யானை
          இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.

உரை:

      வளம் பொருந்திய தில்லையிலுள்ள பொன்னம்பலத்தைச் சிறப்பாகவுடையவனும், தேவர்கள் முடியின்கண் அமைந்த மணி போல்பவனும், குற்றமில்லாக் கருத்துக்களை விரும்புபவனும், கற்பனையெல்லைக்கு அப்பாற் பட்டவனும், மனத்திற் கொண்டும் பரவும் எனக்கு உயிர்த்துணையாகுபவனும், உண்மையே யுருவாக நிற்பவனும், உலகெலாம் தனதாகவுடையவனும், பிறைமதியை யணிந்த சிவந்த சடையையுடையவனுமாகிய சிவபெருமானை, இன்றிரவு கனவிற் கண்டு நேரே எதிர் கொண்டு போற்றி மகிழ்வேன். எ.று.

          பொருள் வளமும் ஞான வளமும் ஒப்ப வுடைமை பற்றி, “வளம் கொளும் தில்லை” எனப் பொதுப்பட மொழிந்து, அம்பலவாணனாம் சிறப்புடைமையின், “பொன் மன்றுடையான்” என வுரைக்கின்றாள். தேவர்கள் மணிமுடி யுடையராதலின், “வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னை” எனப் பராவுகின்றாள். தேவர்கள் மணிமுடி யணிபவரென்பதை, “விண்ணோர் முடியின் மணித்தொகை வீற்றாற்போல்” (பாவை) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. குற்றமில்லாத நினைவுகளையுடைய மனத்தின் கண் தங்கும் நலமுடையனாய் அருள் புரியும் வள்ளலாதலால், “களங்க மில்லாத கருத்துடையான்” என்று கூறுகிறாள். களங்கம் - குற்றம். சிவனைப் பாவனாதீதன் எனச் சிவாகமங்கள் ஓதுதலால், “கற்பனை முற்றும் கடந்து நின்றான்” என்றகிறாள். சிவனது சகளத் திருமேனி போல அகளவடிவம் கற்பனைக்கு அடங்குவ தன்றாகலின்” கற்பனை முற்றும் கடந்து நின்றான்” என விளக்குகிறாள் என்றாலும் ஒன்று. இறைவனை நெஞ்சின்கண் வைத்து உள்ளத்தால் வழிபடுவது மரபாதலால், “உளங்கொளும் என்றன் உயிர்” என்றும், நெஞ்சிடமாக இருந்து உயிர்க்கு உணர்வுத் துணை புரிவது புலப்பட “உயிர்த் துணை யான்” என்றும் உரைக்கின்றாள். “என்னெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே” எனவும், “நெஞ்சினுள் நிறைவாய் நின்ற ஈசனைக் கண்டு கொண்டது என் உள்ளமே” (உள்ளக் குறுந்.) எனவும் திருநாவுக்கரசர் ஓதுவது காண்க. உளதாய் நிற்கும் உண்மைத் தன்மையில் உள் பொருளனைத்தினும் ஒப்புயர் வில்லாதவனாதலால், இறைவனை “உண்மை” யென்றே இயம்புகின்றாள். உலகனைத்தும் அவனது படைப்பாய் உடைமையுமாகும் எனப்படுதலின், “எல்லாம் உடையவன்” எனல் பொருத்தமாகிறது. எல்லாம் என்ற சொல் எஞ்சாப் பொருள தென்பர் சேனாவரையர். பிறைமதியின் சிறுமை மிகுதி விளங்க “இளம் பிறை” என்றும், தேய்வின்றி அதனை வளர்ந்து நிறைவிக்கும் செம்மை பற்றி, “இளம் பிறை குடிய செஞ்சடையான்” என்றும் சிறப்பிக்கின்றாள். “பின்னிய சடை மிசைப் பிறை நிறைவித்த பேரருளாளனார்” (கழுமலம்) என ஞானசம்பந்தர் எடுத்தினிது புகல்வது காண்க.

      இதனால் நெஞ்சின்கண் காட்சி தந்து உள்ளம் உணர்ந்து பரவ, உண்மையாய் இறைவன் நிற்கும் திறம் உரைத்தவாறாம்.

     (9)