2622. அப்பாநின் பொன்அருளே என்மேல்
தயைசெய் தளித்திலையேல்
துப்பா னவும்ஒரு போதுதுவ்
வாது சுழன்றனையே
இப்பாரில் ஈசன் திருவருள்
நீபெற்ற தெங்ஙனமோ
செப்பாய் எனவரிப் பார்சிரிப்
பார் இச் செகத்தவரே.
உரை: அப்பனாகிய சிவபிரானே, நின்னுடைய பொன் போன்ற திருவருளை அன்புடன் எனக்கு அளிக்காயாயின், உண்டற் குரியவற்றையும் ஒருகாலும் உண்பதின்றி மனம் கலங்குகிறாயே; இவ்வுலகில் சிவனது திருவருளைப் பெற்றது எவ்வாறு, மெய்யோ பொய்யோ சொல்லுக என நாட்டவர் என்னை நச்சரித்து இகழ்ந்து நகையாடுவரே. எ.று.
அப்பன், ஈண்டு உயர்ந்தவன் என்னும் பொருளில் வந்தது. எய்துதற் கருமை பற்றித் திருவருள் “பொன்னருள்” எனப்படுகிறது. அளித்தல் மிக்க அன்பு செய்வதாதலால், “தயை செய்து அளித்திலையேல்” என வுரைக்கின்றாள். தயை, இரக்கமுமாம். துப்பு, உண்பொருள். “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉமழை” (குறள்) என்பது காண்க. ஒருபோது என்னுமிடத்துச் சிறப்பும்மை தொக்கது. துவ்வாமை, உண்ணாமை, சுழலுதல், கலங்குதல் அறிவு கறங்குதலுமாம். எங்ஙனமோ எவ்வாறோ, மெய்யோ, பொய்யோ என ஐயம் பிறப்பிக்கின்றது என்பதாம். நீ ஈசன் அருளைப் பெற்றேன் என்பது மெய்யா? பெற்ற வழியாது எனப் பன்முறையும் விடாது தொடர்தது கேட்பது நச்சரித்தல் என மக்களிடை வழங்குவதால், “அரிப்பார்” எனவும், விளங்கவுரைக்க மாட்டாது விழிக்குமிடத்து இகழ்வது நாட்டவர் இயல்பாதல் கொண்டு, “சிரிப்பார்” எனவும் இயம்புகின்றாள். பச்சைப் புழு இளந்தளிரை யுண்ணும் செயல் அரித்தல் என்பர். பச்சிலையைக் கீடம் மணம்பற்றி அரிப்பது போல் அச்சமுற வாங்கல் அகம்” (நீதி) என்று பெரியோர் உரைப்பது காண்க. செகம், உலகம்; பொதுவகையில் “பார்” என்றமையின், ஈண்டு நாட்டின் மேல தாயிற்று.
இதனால், நீ அருளாமையால் யான் பசியிட நிற்பது கண்டு நாட்டவர் அருள் பெற்றது பொய்யோ மெய்யோ என இகழந்து சிரிப்பர் என வருந்தியவாறாம். (2)
|