2623. தீதுசெய் தேற்கருள் செய்வான் நின்
சித்தம் திரும்பிலையேல்
தாதுசெய் தேகத்து ணாஒரு
போது தவிர்ந்தநினக்
கேதுசெய் தான்சிவன் என்றே
உலகர் இழிவுரைத்தால்
யாதுசெய் வேன்தெய்வ மேஎளி
யேன் உயிர்க் கின்னமுதே.
உரை: தெய்வமே, எளியவளாகிய எனது உயிர்க்கு அமுதானவனே, தீமை செய்தவளாகிய எனக்குத் திருவருள் வழங்க மனம் கொள்ளாயாயின், தோல் தசை முதலிய தாதுக்களாலாகிய உடம்புக்கு ஒரு காலை யுணவை விரதமாக நீக்கினதால், சிவபெருமான் என்ன நலம் செய்தான் என்று உலகத்தார் பழித்து இகழ்வாராயின், யான்யாது செய்வேன்; என் நெஞ்சம் வருந்துகிறது, காண். எ.று.
தோல், தசை நரம்பு என எழுவகையாகக் கூறப்படும் உடற்கூறுகள் தாது எனப்படும்; “பல்வகைத் தாதுவின் உடற்கு” (நன்னூல்) என்பர் பவணந்தி முனிவர், தாதுக்களால் இயன்றமையின், “தாது செய் தேகம்” என்று கூறுகிறாள். தீது - தீவினை. தீவினையுடைமை நோக்கி
எனக்கு நீ அருள் செய்யாயாயினும், திருவுள்ளத்தில் அருள் கொள்வாயானால், எனக்கு அருள் புரியலாம் என்பாள், “தீது செய்வேற்கு அருள் செய்வான் நின் சித்தம் திரும்புவையேல்” எனச் செப்புகின்றாள். சித்தம் திரும்பிலை என்றவிடத்துச் சினை வினை முதன்மேல் நிற்கிறது. அருட்பேற்றுக்கு விரதமும் ஞானமும் வேண்டுமென்பார் உளராதலால், ஒருபொழுது உணவு மறுக்கும் விரதம் மேற்கொண்டமை தோன்ற, “தேகத் துணா ஒருபோது தவிர்ந்த நினக்கு” என்றும், விரதத்தால் அருள் பெறாமை கண்டு தாயர் முதலாயினர் இகழ்ந்து பேசுவதற்கு அஞ்சுகின்றேன் என்பாள், “ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்” என்றும், இழிவுரை பிறவாமை நோக்கி நீ எனக்கு அருளல் வேண்டும்; அருளாதொழியின் யான் செய்யலாவது ஒன்றுமில்லை எனத் தன் கையறவு தெரிவிப்பாளாய், “யாது செய்வேன் தெய்வமே” என்றும் வருந்துகின்றாள். உடற்கு உணவு போல உயிர்க்கு இறையருள் இலங்குதல் தோன்ற, “உயிர்க்கு இன்னமுதே” என இசைக்கின்றாள். “உரித்தன் றுனக்கிவ்வுடலின் தன்மை, உண்மையுரைத்தேன் விரதமெல்லாம் தவமுயன்றும் வாழா நெஞ்சே” (நெய்த்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. இதனால், விரதம் தரித்தும் திருவருள் எய்தாமை நினைந்து வருந்தியவாறாம்;
(3)
|