2624.

     தெரியாமை யால்சிறி யேன்செய்குற்
          றத்தைநின் சித்தமதில்
     பிரியாமை வைத்தருள் செய்திலை
          யேல்எனைப் பெற்றவளும்
     பெரியாசை கொண்டபிள் ளாய்அரன்
          என்தரப் பெற்றதென்றே
     பரியாசை செய்குவ ளால்அய
          லார்என் பகருவதே.

உரை:

      பெருமானே, சிற்றறிவுடைய யான் நன்று தீது தெரியாமையால் செய்த குற்றத்தை நின் திருவுள்ளத்தில் நிலைபெறக் கொண்டு எனக்கு அருள் செய்யாயாயின், என்னைப் பெற்ற தாயும் பேராசை கொண்ட பெண் மகளே, சிவன் நினக்குத் தந்தது இதுதானோ என்று பரியாசம் செய்கின்றாளெனின், அயலார் யாது தான் கூறார்; அருள் செய்க. எ.று. அறிவின் சிறுமையால் நன்று தீது தெரியும் திறமிலனாயினேன் என்பாள், “சிறியேன் தெரியாமையாற் செய்குற்றத்தை” எனவும், பொறுத்தாற்றும் அளவின் மிக்கமையால் மனத்தின்கண் நினைந்த வண்ணம் இருக்கின்றாய் என்பாள், “நின் சித்தமதில் பிரியாமை வைத்து” எனவும், அதனால் எனக்கு அருளாயாயினை என்பாள், “அருள் செய்திலை” எனவும் சொல்லி வருந்துகின்றாள். இனி அருள் செய்யாயின், பொருளில்லாளைப் பெற்ற தாயும் இகழ்ந்து நோக்குவதுபோல அருட் பேறு இல்லாத என்னை ஈன்ற நற்றாயும் இகழ்வாள் என்பாளாய், “பெற்றவளும் அரன் தரப்பெற்றது என் என்று பரியாசை செய்குவள்” எனப் பதறுகின்றாள். பெண்மகளையும் பெண்பிள்ளை யெனும் வழக்குப் பற்றிப் “பிள்ளாய்” எனக் கூறுகின்றாள். சிவன் திருவருளினும் பெரியதொன்று இல்லாமையால், அதன்மேல் வைத்த வேட்கையைப் “பெரிய ஆசை” எனக் குறித்து, “பெரியாசை கொண்ட பிள்ளாய்” என்று கூறுகிறாள். பெரிய ஆசை - பெரியாசை எனப் பெயரெச்சத் தகரம் குறைந்தது; புகழ் புரிந்த இல் எனற்பாலது “புகழ் புரிந்தில்” (குறள்) என்றாற்போல. 'அருளிற் பெரியது அகிலத்து இல்” (31) எனத் திருவருட் பயன் கூறுவது காண்க. பெரிய ஆசை வயப்பட்ட பெண்ணே, உன் ஆசை தீரச் சிவன் தந்தது என்னோ என இகழ்ந்து ஏசுவாள் என்பாளாய், “பரியாசை செய்குவள்” என்றும், பெற்ற தாயே எள்ள நகையாடுவ ளாயின், அயலாரும் பிறரும் யாது கூறார் என்றற்கு “அயலார் என் பகருவதே” என்றும் சொல்லிக் கண் கலுழ்கின்றாள். ஆசை நீங்கப் பேசுவது பரியாசை; இது பரியாசம் எனவும் வழங்கும். “யார் சொலும் பரியாசமே” (மீனா. குறம்) என்று குமரகுருபரர் வழங்குவது காண்க. பரிகாசம் என்பது உலக வழக்கு.

      இதனால் திருவருளைப் பெறாதொழியின், பெற்ற தாயே இகழ்வாளெனின், பிறர் இகழ்வது சொல்ல வேண்டா என முறையிட்டவாறாம்.

     (4)