2625. எண்ணாமல் நாயடி யேன்செய்த
குற்றங்கள் யாவும்எண்ணி
அண்ணாநின் சித்தம் இரங்காய்
எனில்இங் கயலவர்தாம்
பெண்ஆர் இடத்தவன் பேரருள்
சற்றும் பெறாதநினக்
கொண்ணாதிவ் வண்மை விரதம்என்
றால்என் உரைப்பதுவே.
உரை: அண்ணலே, விளைவைக் கருதாமல் நாயடியேனாகிய யான் செய்த குற்றங்கள் யாவற்றையும் மனத்திற் கொண்டு, நினது திருவுள்ளம் இரங்காயாயின், இவ்வுலகில் அயலாய மக்கள், பெண்ணாகிய உமையம்மை பொருந்திய இடப்பாகத்தையுடைய சிவபெருமானுடைய பேரருளைச் சிறிதளவும் பெறாத நினக்கு இந்த வளமான விரதம் பொருந்தாது காண் எனப் புகல்வாராயின், யான் யாது கூறுவேன். எ.று.
அண்ணல் - அண்ணால் என விளியேற்றது. நாயடியேன் - நாய் போற் கீழ்மைப்பட்ட அடியேன். “நாயடியேற் கூராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை” (பொன்னூ) என மணிவாசகர் வழங்குவது காண்க. பின் விளைவது கருதாமற் செய்த குற்றங்களை மனத்திற் கொள்ளலாகாது என்ற குறிப்புப் புலப்பட, “எண்ணாமல் நாயடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி” எனவும், எண்ணுதலால் நின் திருவுள்ளம் இரங்குகின்ற தில்லை என்பாளாய், “நின் சித்தம் இரங்காய்” எனவும் இயம்புகின்றாள். பெண்ணாரிடத்தவன் என்பது அயலவர் கூற்று. பெண்மைக்கிரங்கி உமையம்மையாகிய பெண்ணுக்கருள் மிகுந்து தன் மேனியில் இடம் தந்த பெருமான் என்ற குறிப்பு விளங்கப் “பெண்ணாரிடத்தவன்” என்று பேசுகிறார்கள். பேரருளுடையவனாதலால், நினக்குச் சிறிது அருளுவதால் குறையுறானாகவும், அவனது அருள் பெறாமை வருந்தத் தக்கதாகலின், நீ அவனது அருட்பேறு கருதி வளமிக்க விரதமிருப்பது பொருந்தாது என்பாரயின் யான் யாது சொல்வேன் எனப் பரிவப்படுகிறாளாதலால், “அயலவர் தாம் பெண்ணாரிடத்தவன் பேரருள் சற்றும் பெறாத நினக்கு ஒண்ணாது இவ்வன்மை விரதம் என்றால் என் உரைப்பது” என மொழிகின்றாள். வன்மை விரதம் - பல்வேறு நலங்களை எய்துவிக்கும் விரதம்.
இதனால், நீ அருளாயாயின் அயலவர் எனது விரதத்தையும் நின் பேரருளையும் குறை கூறுவராயின் யான் பொறேன் என்று புகன்றவாறாம். (5)
|