2626. பொய்யான வஞ்சக னேன்பிழை
யாவும் பொறுத்துனருள்
செய்யாய் எனில்எது செய்குவன்
யான்இச் செகதலத்தோர்
எய்யா விரதத்தில் யாதுபெற்
றாய்என் றிகழ்வர்கண்டாய்
அய்யாஎன் இன்அமு தேஅர
சேஎன தாண்டவனே.
உரை: ஐயனே, எனக்கு இனிய அமுதமே, என்னை ஆண்டருள்பவனே, பொய்ம்மையும் வஞ்சகமும் நிறைந்த என் பிழைகள் யாவையும் பொறுத்து அருள் புரியாயாயின், யான் என்ன செய்குவேன்; இந்த நாட்டிலுள்ளவர் என்னை நோக்கிப் பயனில்லாத விரதத்தை மேற்கொண்டு என்ன பயனை அடைந்தாய்; விட்டொழிக எனவுரைத்து இகழ்வார்களே, அது குறித்தேனும் அருள் செய்க. எ.று.
ஐயா எனற்பாலது எதுகை நோக்கி அய்யா என வந்தது. ஐயன் என்பது ஐயா என விளியேற்றது. தன்னை யுண்டாரை நெடுநாள் வாழச் செய்யும் அமுதம்போல. சிவனருளாகிய அமுதம் உண்பவர் இன்பவுலகில் நீடு வாழ்வார் என்பதுகொண்டு, “என் இன்னமுதே” எனவும், உடல் பொருள் உயிர்களை ஆண்டருளும் நலம் பற்றி “எனது ஆண்டவனே” எனவும் கூறுகின்றாள். வஞ்சம் புரிதலும் பொய்யுரையும் பொய்த் தோற்றமும் பொய்ச் செய்கையும் கலந்திருத்தலாற் “பொய்யான வஞ்சகனேன்” என்றும், வஞ்சனையே தீவினையாய்க் குற்றமாதலால், “பிழை” என்றும், பொறுக்கும் அளவினது பிழையாகவும் ஒறுக்கும் அளவினது தீது செய்தலாகவும் கருதப்படுவதால், என் குற்றம் பிழை வகையாய்ப் பொறுத்தாற்றி அருளப்படும் பான்மைய என்றற்குப் “பிழை யாவும் பொறுத்து உன் அருள் செய்யா யெனில் என்றும் உரைக்கின்றாள். திருவருள் செய்யாதொழியின் வரும் விளைவு இஃது என்பாளாய், நாட்டவர் நான் மேற்கொண்டொழுகும் கொள்ளை பயனில் செயலாமென என்னை இகழ்வர் என்பது விளங்க, “எய்யா விரதத்தில் யாது பெற்றாய்” எனவும், “இகழ்வர் கண்டாய்” என்றும் இயம்புகிறாள். பயனறியப்படாது வீண்படும் விரதம், “எய்யா விரதம்” எனப்படுகிறது. எய்யாமை - அறியாமை. பயன்படாத தொழிலைச் செய்தவர், வினைவு அறியப்படாதாயிற்று என்னும் வழக்கு நோக்கி இவ்வாறு கூறுகின்றாள். கண்டாய் - முன்னிலை யசை.
இதனாற் சிவ வழிபாடாகிய விரதம் எய்யா விரதம் என இகழப்படுவது கூறி வருந்தியவாறாம். (6)
|