2627.

     உன்உள்ளம் கொண்டேற் கருளாய்
          எனில் இவ் உலகர்பொய்யாம்
     எண்உள்ளம் கொண்ட களவறி
          யாதுநின் றேடவிங்தே
     நின்உள்ளம் கொள்விர தப்பயன்
          யாது நிகழ்த்தெனகே
     முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண்
          டாய்எம் முதலவனே.

உரை:

      உலகுக் கெல்லாம் முதற் பொருளாகியவனே, உனது திருவுள்ளத்தை மனதிற் கொண்ட எனக்கு உன்னுடைய அருளைச் செய்யா தொழிகுவையாயின், பொய்யாக என் சிந்தையிற் கொண்ட கள்ளச் செய்கையை அறியாமல், இவ்வுலகத்தவர் என்னை நோக்கி, ஏடா, இங்கே நின் மனத்திற் கொண்ட விரதத்தால் யாது பயனாம், சொல்லுக என்று முந்துகிற உள்ளத்தோடு வினாவி என்னை இகழ்வர் காண். எ.று.

          முதல்வன் - முதலாகியவன்; அனைத்துக்கும் முதற் பொருள் என்பது கருத்து; மூலகாரணன் எனினும் பொருந்தும். உன் மேல் அன்பு கொண்டு உனது திருவருள் உள்ளத்தைப் பெற்ற அடியவள் என்றற்கு, “உன்னுள்ளம் கொண்டேன்” என வுரைக்கின்றார். உன்னுள்ளம் என்பதை உன்னும் உள்ளம் எனக் கொண்டு நினைவன நினைக்கும் மனமுடைய யான் என்றும் கூறுவர் நீ திருவருளை நல்காவிடில் என்பார், உயர் மொழிக் கிளவியாக “அருளா யெனில்” என்கின்றார். யானும் என்னுள்ளமும் பொய் செய்தொழுகும் கள்ளத்தால் அருட் பேறு எனக்கு எய்தாமை யறியாமல், நீ அருளுவ தில்லையென நினைக்கின்றனர் என்பாராய், “பொய்யாம் என்னுள்ளம் கொண்ட களவு அறியாது” என்று கூறுகிறார். “யானே பொய் யென்னெஞ்சும் பொய்யென் அன்பும்” (சதக) என மணிவாசகர் உரைப்பது காண்க. கண்ணின்று கண்ணறப் பேசுகிறார்கள் எனற்கு “நின்று” என்றும், ஒருவரைத் தாழ்வாகப் பேசுமிடத்து விளப்பது “ஏட” என்னும் பழந்தமிழ்ச்சொல். ஆண்மகனை ஏட என்றும், பெண்னை ஏடி யென்றும் அழைப்பர். தஞ்சை மாவட்டத்தவர், பணிப் பெண்களை “ஏட்டி” என இன்றும் வழங்குப. உன் மனத்திற் கொண்ட கொள்கை யாது; அது பயன்படுவதாக இல்லையே என இகழ்வாராய், “ஏட இங்கே நின் உள்ளம் விரதப் பயன் யாது; நிகழ்த்தென மொழிவர் கண்டாய்” என இசைக்கின்றார். இதுகாறும் பெண்மையுள்ள முற்றுப் பேசிய வடலூரடிகள், உலகியல் நினைவு போந்து தாக்கவும், ஆண்மைத் தன்மை எய்தி, “ஏட” எனவுலகவர் பக்கல் திருப்பி விடுகிறார். இகழ்ந்து வலி யழிக்கும் கருத்து முற்பட்டு நிற்றல் தோன்ற, நிகழ்த்தெனவே முன்னுள்ளம் கொண்டு மொழிவர் காண்” என மொழிகின்றார். உள்ளம் - கருத்து. முன்னுதல் - முற்படுதல்; நினைத்தலுமாம். முந்துறச் செல்வோரை, முன்னியோர் என்பர். “வேய் பயி லழுவம் முன்னியோரே” (குறுந். 7) என வருவது காண்க.

     இதனால், நீ அருளாவிடில் எனது திருநெறிக் கொள்கை உலகவரால் பழித் தொதுக்கப்படுமே என இரங்கியவாறாம்.

     (7)