2628. முந் தோகை கொண்டுநின் தண்ணருள்
வாரியின் மூழ்குதற்கிங்
கந்தோஎன் துன்பம் துடைத்தரு
ளாய்எனில் ஆங்குலர்
வந்தோ சிவவிர தாஎது
பெற்றனை வாய்திறஎன்
றிந்தோர் தருசடை யாய்விடை
யாய்என்னை ஏசுவரே.
உரை: பிறைமதி தவழும் சடையை யுடையவனே, எருதேறுபவனே, மிக்கழும் மகிழ்ச்சியுடன் உனது தண்ணிய திருவருளாகிய கடலில் மூழ்கி இன்புறுதற்குத் தடையாகும் துன்பத்தைப் போக்கியருளாயாயின், ஐயோ, அந்நிலையில் உலகத்தார் என்பால் வந்து, ஓ சிவ விரதியே, இதனால் நீ பெற்ற பயன் யாது? சொல்லுக என என்னை எள்ளி இகழ்ந்து பேசுவர், காண். எ.று.
இந்து, பிறைத் திங்கள். ஏர்தரு சடை - தவழும் சடைமுடி. விடை - எருது; எருதை வூர்தியாக வுடைமை பற்றி “விடையாய்” என்று உரைக்கின்றார். சிவ சிந்தனைக்கண் உண்ணின் றூறும் அருளின்பப் பெருக்குப் பாயுங்கால் குறைபாடுடைமையால் ஆன்ம எல்லையைக் கடந்து வழியுமிடத்து உள்ளத்தில் இன்ப மயக்கம் முகிற் படலம் போல் பரந்து ஆன்மவுணர்வை மறைக்கிறது என்பர் ஆல்ட்ஸ் அக்சிலி (The Cloud of Unkhowing) எனபர். பொங்கிப் பெருகும் திருவருள் இன்ப மயக்கத்தை வடலூர் வள்ளல் “முந்து ஓகை” என மொழிகின்றார். அவ்வின்ப நுகர்ச்சிக்கண் உடற் சேர்க்கையும் உலகியல் வாழ்வும் பயக்கும் துன்பப் படலம் எழுஞாயிற்றை மறைக்கும் கருமுகிற் படலம் போல் மறைத்து இடர் செய்தலை, “நின் தண்ணருள் வாரியில் மூழ்குதற்கு அந்தோ என் துன்பம் துடைத் தருளாய்” என முறையிடுகின்றார். அருள் வாரி - அருளின்பமாகிய கடல். அருட் கடலைக் கண்டு அதனுள் மூழ்கி மகிழத் துடிக்கும் ஆன்ம வுள்ளத்தை, வாழ்க்கை யிடர்களும் தளர்வுகளும் ஒருபாற் படர்ந்து தடுத்தலை எண்ணி “அந்தோ” எனக் கதறுகின்றார். துன்பத் தளையை ஒழிக்கா விடத்து அருளனுபவம் சிதைதலால், இருள் நீக்கமும் ஒளி விளக்கமும் போல உடனிகழ்ச்சியாகும் உலகியல் துன்பம் படர்ந்து தாக்குவதை, “அருளா யெனில் ஆங்குலகர் வந்து எது பெற்றனை வாய்திற என்று என்னை ஏசுவரே” என வுரைக்கின்றார். உலகியல் துன்பத்தை “உலகர்” என மக்கள் மேல் ஏற்றிக் கூறகிறார். சிவவிரதன் என்பது “சிவவிரதா” என விளியேற்றது. சிவ விரதன் - சிவ சிந்தனை மேற்கொண் டொழுகும் சிவநெறிச் செல்வன். அருளொளி மறைவதால் சிந்தனை அலமரல் உறுவதும் வாய் திறந்து பேசா நிலை மேம்படுதலும் நோக்காமல், பேசு என்பார், “வாய் திற” என உலகம் உரைக்கின்றது; வேதனைச் சொற்களை எறிகிறது; இதனை வாய் திறவென்று என்னை ஏசுவரே” எனப் புலம்புகிறார். பிறைக்கு உன் சடை யாதாரமானாற் போல ஊரும் உனக்கு விடை ஆதாரமாவது போல எனக்கு உன் திருவருள் ஆதாரமாம் என்று குறிப்புத் தோன்ற, “இந்து ஏர்தரு சடையாய் விடையாய்” என்ற சொற்கள் நிற்கின்றன.
இதனால், அருளனுபவப் பேற்றுக்கு உலகம் தடை செய்து இகழ்வது எடுத்தோதப்படுகிறது. (8)
|