2633.

     பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
     உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
     அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
     என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.

உரை:

      எம்பெருமானே, பெற்ற தாயினும் பேரருள் செய்பவன்; பொன்னைப் பெரிதாகக் கருதிப் பேணும் பெருக்கும் செல்வர்களை எண்ணாமல், உன்னையே சிறப்பாக நினைந்து நினைந்துறையும் என் மனப்பாங்கை அறிந்திருந்தும், நீ எனக்கு அருள் செய்யாயாயின், என்னுடைய முகத்தைப் பார்த்து இரங்கி யருள்பவர் யாவர் உளர், கூறுக எ.று.

     பொன்னை வளர்த்தலாவது, பொன்னை உயிரினும் சிறந்ததாகப்பேணி ஒன்று பத்தாகப் பத்து நூறாகப் பெருக்குதல். தானாக வளர்வதன்மையின், பொன் பெருக்கும் செல்வரைப் “பொன் வளர்ப்பார்” எனப்புகல்கின்றார். பொன்னுடையார் யார்க்கும் சிறிதும் ஈயாராயினும் உலகவர் அவர்களைப் போற்றிச் சிறப்புப் செய்வர்; யான் அது செய்திலேன் என்பார், “பொன் வளர்ப்பாரைப் போற்றாமல்” என்று எந்நாளும், இல்லாரை யெல்லாரும் எள்குவார் செல்வரை, எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் சொல்லாலே, அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள்” (ஞானவுலா) எனச் சேரமான் பெருமாள் கூறுவது காண்க, உலகியற்கு மாறாக எங்கள் பெருமானே, உன்னையே நினைந்து உனது அருளையே பெரும் பொருளாக எண்ணி யுருகுவது என் நெஞ்சம்; இதனை நீ நன்கறிவாய் என்பார், “எம்பெருமான் உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும்” எனக் கூறுகின்றார். தாயினும் சாலப்பரிந்து அருள் செய்பவன் எனச் சான்றோர் பாராட்டுதல்பற்றி, “அன்னையினும் சால அருள்வோய்” எனச் சாற்றுகின்றார். “தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான்” (பூவல்லி) என மணிவாசகர் உரைப்பது காண்க. சேய் முகம் நோக்கியதும் தாயுள்ளம் இரங்குவதுபோல நீ யுள்ளம் இரங்குகிறாயில்லை; நீ அருளாயாயின், இவ்வுலகில் என்னை நோக்கி இரக்கம் உறுவோர் ஒருவரும் இல்லையாம் என்பார், “அருளாயேல் என்னை முகம் பார்த்து எனக்கார் இரங்குவரே” என வுரைக்கின்றார்

.      இதனால், பொன்னினும் பெரும் பொருளாகத் திருவருளை யெண்ணி முறையிட்டவாறாம்.

     (3)