2634.

     துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
     பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
     தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
     என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே.

உரை:

           என்னையுடைய பெருமானே, தைக்கப்பட்ட புலித்தோலையுடையாகக் கொண்டவனாகிய நீ யிருக்கும்போது, உலகிற் பொன்னையுடைய செல்வர்கள் பக்கல் போவது ஏன் என்றிருப்பவன் யான்; அற்றாக, என்னுடைய துன்பங்களைப் போக்கி அருளாயாயின், என்பால் இரக்கங் கொண்டு அருளாதரவு செய்வோர் வேறு யாவர்? ஒருவரும் இல்லை. எ.று.

     துன் - துன்னுதல். முதனிலைத் தொழிற் பெயர்; தைத்தல் என்பது பொருள். வியாக்கிரம் - புலி. வியாக்கிரத்தோல் எனற்பாலது அகரச்சாரியைப் பெற்று வியாக்கிரமத் தோல் என வந்தது. சிவனுக்குப் புலித்தோல் உடையதாதலின் “வியாக்கிரமத் தோல் உடையான்” எனக் கூறுகின்றார். பனி மூடிய கயிலாய மலையில் இருத்தலை விரும்புபவனாவலால் தோலாடையும் யானைத் தோற் போர்வையும் வேண்டப்படுகின்றன. “உருத்திகழ் எயிற் கயிலை வெற்பி லுறைதற்கே விருப்புடையவற்புதர்” (ஐயா) என ஞானசம்பந்தர் கூறுகிறார். பொன்னுடையார் - பொன்னும் பொருளும் மிகவுடைய செல்வர். அரிதின் முயன்று ஈட்டுவார்க்கன்றிப் பெறப்படாமையின், இன்மையால் பிறர்பால் இரத்தற்கஞ்சித் தொகுக்கப்படுதலால், பொன்னுடையார்க்கு ஈகையுள்ளம் எளிதில் அமையாமைபற்றி, பொன்னுடையார்பால் போதலை விரும்பேன் என்பாராய், “பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்” எனவும், பொன்னுடையார் பொன்னைப் பேணுதல் போல நீ என்னையும் ஆதரிப்பவன் என்றற்கு, “என்னுடையாய்” எனவும் உரைக்கின்றார். துன்பம் துடைத்து இன்பமருளுபவனாதலால், என் துன்பம் துடைத்தருள்க என வேண்டுவாராய், “துன்பம் துடைத்து இன்பமருளுபவனாதலால், என் துன்பம் துடைத்தருள்க என வேண்டுவாராய், “துன்பம் தவிர்த் திங்கருளாயேல்” என்று முறையிடுகிறார். “துன்பம் அழித்து அருளாக்கிய இன்பான்” (சீகாழி) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க, இவ்வண்ணம் இறைவன் துன்பம் போக்குபவனாதலால், பிறரை நாடுதல் பேதமையாதலால், “அருளாயேல் இங்கு எனக்கார் இரங்குவரே” என வுரைக்கின்றார்.

     இதனால், நீ இரங்காயெனில் என்னை யாதரிப்பார் வேறு எவரும் இல்லை என்று முறையிட்டவாறாம்.

     (4)